மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் அல்ல என அண்ணாமலை கூறினாரா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீன் சாப்பிடுபவர்கள் யாரும் இந்துக்கள் அல்ல எனக் கூறியதாக மாலை முரசு, ஏசியாநெட்நியூஸ் உள்ளிட்ட செய்தி தளங்களில் வெளியாகி இருக்கிறது.
அண்ணாமலை மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் அல்ல எனக் கூறியதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திமுகவினர் பதிவிட்டு வருவதையும், பலரும் ட்ரோல் செய்து வருவதையும் பார்க்க முடிந்தது.
உண்மை என்ன ?
ஜனவரி 2-ம் தேதி ” மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் அல்ல – பாஜக அண்ணாமலை கருத்து ” என மாலை முரசு வெளியிட்ட 4 நிமிட செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோவில் அண்ணாமலை மீன் சாப்பிடுவது குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. தலைப்பில் இருப்பதற்கும், செய்திக்கும் தொடர்பு இல்லாமல் இருக்கிறது.
ஜனவரி 2-ம் தேதி தினமலர் நாளிதழலில், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை : சென்னை குயப்பேட்டை போன்ற இடங்களில் மீனவர்களுக்கு மீன் சந்தை கட்டி கொடுப்பது அரசின் வேலையா அல்லது ஹிந்து அறநிலையத்துறையின் வேலையா ? ஹிந்து கோவில் கட்டடத்தில் மீன் சந்தை கட்டுவது நியாமில்லை.
மீன் சாப்பிட்டால் நம்மவர்கள் கோவிலுக்கே செல்ல மாட்டார்கள். நிலைமை இப்படி இருக்க கோவில் கட்டடத்திலேயே மீன் சந்தைன்னு, மக்களையும், கடவுளையும் அவமதிக்கும் செயல் ரொம்ப ஓவரா தான் இருக்கு ! ” என வெளியாகி இருந்தது.
இதில், ” மீன் சந்தை கட்டுவது நியாமில்லை ” என முடியும் வரை உள்ள வாக்கியம் மட்டுமே அண்ணாமலை கூறியது. அதற்கு அடுத்தபடியாக வரும், மீன் சாப்பிட்டால் நம்மவர்கள் கோவிலுக்கே செல்ல மாட்டார்கள் எனும் வாக்கியம் தினமலர் நாளிதழ் தரப்பில் கொடுக்கப்பட்ட கமெண்ட். பிற செய்திகளுக்கும் அவ்வாறே கமெண்ட் செய்யப்பட்டுள்ளது.
வைரலாகும் செய்திக் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் பேசுகையில், ” ஒவ்வொரு நாளும் பாஜக அலுவலகத்தில் இருந்து அளிக்கப்படும் அறிக்கை செய்தியாக வெளியிடப்படும். நமது மாநிலத்தில் மீனவ நண்பர்கள் இருக்கிறார்கள், மீன் சாப்பிடுபவர்களும் இருக்கும் போது, அரசு கண்டிப்பாக மீனவர்களுக்கு சந்தை கட்டிக் கொடுக்க வேண்டும், அது அரசின் கடமை. ஆனால், கோவில் உண்டியல் பணத்தை எடுக்கக் கூடாது. உயர்நீதிமன்றம் கூட கோவில் பணத்தில் கல்லூரிகளை தொடங்க கூடாது என நிறுத்தி உள்ளனர்.
இப்படி நான் கூறிய கருத்தை திரித்து “அண்ணாமலை மீன் சாப்பிடக்கூடாது” எனக் கூறியதாக தவறான செய்தியை வெளியிடுகிறார்கள். நான் அப்படி கூறவே இல்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.
கோவில் நிதியில் இருந்து மீன் சந்தை கட்டுவது குறித்து வெளியிட்ட அறிக்கையின் செய்தியையும் அண்ணாமலை நம்மிடம் பகிர்ந்து இருந்தார். அதிலும், கோவில் நிதியை பயன்படுத்தக் கூடாது என்றே இடம்பெற்றுள்ளது.
முடிவு :
நம் தேடலில், மீன் சாப்பிடுபவர்கள் யாரும் இந்துக்கள் இந்துக்கள் அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் செய்திகள் மற்றும் பதிவுகள் தவறானது. தன்னுடைய கருத்தை திரித்தும், தவறாக பரப்பியும் வருவதாக அண்ணாமலை மறுப்பு தெரிவித்து இருக்கிறார் என அறிய முடிகிறது.