This article is from Oct 25, 2021

வீடியோவை வைத்து பாஜகவினரை மிரட்டி அண்ணாமலை பணம் பெற்றதாக போலிச் செய்தி !

பரவிய செய்தி

பாஜகவினரின் பலான வீடியோக்கள் வெளியாகாமல் இருக்க அவர்களிடம் பல கோடி ரூபாயை அண்ணாமலை மிரட்டி பெற்றது அம்பலமானதால் அதிர்ச்சி.

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவினரின் ஆபாச வீடியோக்கள் வெளியாகாமல் இருக்க அவர்களிடம் பல கோடியை மிரட்டி பெற்றது தெரிய வந்துள்ளதாக பாலிமர் செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. கே.டி.ராகவன் மற்றும் அண்ணாமலை புகைப்படம் இடம்பெற்ற பாலிமர் நியூஸ் கார்டை திமுக ஆதரவாளர்கள் பலரும் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.

 

Archive link 

Archive link 

உண்மை என்ன ?

நியூஸ் கார்டு குறித்து பாலிமர் செய்தியின் முகநூல் பக்கத்தில் தேடிப் பார்க்கையில், அக்டோபர் 24-ம் தேதியிட்ட செய்திகளில் பாஜக அண்ணாமலை குறித்த செய்தி ஏதும் இடம்பெறவில்லை. பிற செய்தி தளங்களிலும் இதுகுறித்த செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.

FotoForensics தளத்தில் வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டையும், பாலிமர் செய்தியின் முகநூல் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றையும் பதிவிட்டு பார்க்கையில், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டு உள்ளதை பார்க்க முடிகிறது. அதேபோல், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டின் எழுத்து வடிவம் மற்றும் நிறமும் வேறாக இருக்கிறது.

நியூஸ் கார்டு குறித்து பாலிமர் செய்தி சேனல் தரப்பை நாம் தொடர்பு கொண்டு பேசுகையில், ” இது போலியானது.  நாங்கள் வெளியிடவில்லை ” என பதில் அளித்தனர்.

அண்ணாமலை குறித்து பரப்பப்படும் நியூஸ் கார்டு குறித்து தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளப் பிரிவு தலைவர் சி.டி.நிர்மல்குமார் அவர்களிடம் பேசுகையில், ” இது போலியான செய்தி. அப்படி எதுவும் நடக்கவில்லை ” என மறுப்பு தெரிவித்து இருந்தார்.

முடிவு : 

நம் தேடலில், பாஜகவினரின் பலான வீடியோக்கள் வெளியாகாமல் இருக்க அவர்களிடம் பல கோடி ரூபாயை அண்ணாமலை மிரட்டி பெற்றது அம்பலமானதால் அதிர்ச்சி என பரப்பப்படும் பாலிமர் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader