பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்கள் அல்ல, ஊடகங்கள் பற்றி அண்ணாமலை கூறியதாகப் போலிச் செய்திகள் !

பரவிய செய்தி
பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல. அதே தினத்தில் இந்துக்களின் விழாவான மகர சங்கராந்தியைக் கொண்டாடுபவர்கள்தான் உண்மையான இந்துக்கள் – தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை
வட இந்திய ஊடகங்களை போல தமிழக ஊடகங்களையும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம். தமிழக ஊடகங்கள் எங்களுக்கு ஆதரவாக பொய் செய்திகளை வெளியிடாமல் உண்மை செய்திகளை வெளியிடுவது கண்டிக்க தக்கது. – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு.
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் அல்ல எனக் கூறியதாக வதந்தி பரவி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதுகுறித்து நாமும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் அல்ல என அண்ணாமலை கூறினாரா ?
இதற்கிடையில், பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல. அதே தினத்தில் இந்துக்களின் விழாவான மகர சங்கராந்தியைக் கொண்டாடுபவர்கள்தான் உண்மையான இந்துக்கள் எனக் கூறியதாக ஐபிசி தமிழ் உடைய நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது. ஆனால், அது எடிட் செய்யப்பட்டதே.
ஜனவரி 3-ம் தேதி ” எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியாது ” என அண்ணாமலை கூறியதாக வெளியான நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து உள்ளனர்.
இதேபோல், “வட இந்திய ஊடகங்களை போல தமிழக ஊடகங்களையும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம்” என அண்ணாமலை கூறியதாக போலியான ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பரப்பப்பட்டு வருகிறது.
மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்களே இல்லை என அண்ணாமலை கூறியதாக பரவிய வதந்தி குறித்து ஜூனியர் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டிலேயே எடிட் செய்து மீண்டும் வதந்தியை பரப்பி வருகின்றனர்.
முடிவு :
நம் தேடலில், பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல, வட இந்திய ஊடகங்களை போல தமிழக ஊடகங்களையும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என அறிய முடிகிறது.