பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு என காயத்ரி ரகுராம் விமர்சித்து பகிர்ந்த பழைய செய்தி

பரவிய செய்தி
தமிழக பாஜகவுக்கு புதிய நிர்வாகிகள் நாளை பட்டியல் வெளியாகிறது. அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக தொடர்ந்து நீடிப்பார்…
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் முன்னாள் தலைவராக பதவி வகித்த காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலையை பகிரங்கமாக விமர்சித்து பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் தொடர்பான செய்தியைப் பகிர்ந்திருந்தார்.
காயத்ரி ரகுராம் தவிர்த்து, பாஜக ஆதரவு பக்கங்களிலும் “ தமிழக பாஜகவுக்கு புதிய நிர்வாகிகள் நாளை பட்டியல் வெளியாகிறது. அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக தொடர்ந்து நீடிப்பார்…” என்று நாளை புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்போவதாகக் கூறிப் பதிவிட்டு இருந்தனர்.
தமிழக பாஜகவுக்கு புதிய நிர்வாகிகள் நாளை பட்டியல் வெளியாகிறது. அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக தொடர்ந்து நீடிப்பார்… pic.twitter.com/kYa6MaeEUv
— ONE_IN_ONE_INDIA_TV (@1in1_india_News) April 10, 2023
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படத்தை தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான BJP Tamilnadu பக்கத்தில் தேடினோம். அப்படி எந்த செய்தியும் அவர்களது பக்கத்தில் பதிவிடப்படவில்லை. மேலும் பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்கையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி இது தமிழ் நியூஸ்.com இணையத்தில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
பரப்பப்படும் செய்தியில் பாஜகவின் சார்பில் 42வது நிறுவன தினம் கொண்டாட்டப்பட்டது என்று உள்ளது. 2023ல் பாஜகவின் 43வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி பாஜகவில் இருந்து விலகுவதாக கடந்த ஜனவரி 3ம் தேதி காயத்ரி ரகுராம் அறிவித்தார். இதையடுத்து, அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்யும் தவறுகள் குறித்தும், அவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
மேலும் படிக்க: பொய் செய்தி பரப்புபவர் கைது எனப் பதிவிட்ட காயத்ரி ரகுராம்.. அவர் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு !
மேலும் படிக்க: கட்சியில் இருந்து நீக்கம்: அண்ணாமலையை பற்றி காயத்ரி ரகுராம் கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !
மேலும் படிக்க: பாஜகவின் காயத்ரி ரகுராம் பற்றி ஆபாசமாக பரப்பப்படும் வதந்தி செய்தி !
இதற்கு முன்பாக காயத்ரி ரகுராம் பற்றியும், அவர் பரப்பிய வதந்திகள் மற்றும் போலியான செய்திகள் குறித்தும் யூடர்ன் தரப்பில் பல்வேறு கட்டுரைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாடு பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் நாளை வெளியிடப்போவதாக பரப்பப்படும் செய்தி தவறானது. அந்த செய்தி கடந்த ஆண்டு ஏப்ரல் 11 அன்று வெளியானது. அதை தற்போது நிகழ்ந்தது போல் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.