வைரலாகும் புகைப்படத்திற்கு பின்னால் நடந்தது என்ன ?

பரவிய செய்தி
ரத்தம் சொட்டச் சொட்ட நிற்கிறார்கள். வருத்தப்படத் தேவையில்லை. அவர்களுக்காக அழுகத் தேவையில்லை. ஆனால் தற்போது தமிழ் சமூக வலைதளங்களின் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது. சக மனிதன் மீதான வன்முறையைக் கொண்டாடும் மனநிலையில் தான் நாம் உரையாடலை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பது வேதனையிலும் வேதனை.
மதிப்பீடு
விளக்கம்
தமிழக பாஜகவின் துணைத் தலைவர் அண்ணாமலை பெயரில் இயங்கி வரும் முகநூல் பக்கத்தில், பாஜகவினர் தாக்கப்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட வருவதைக் கண்டு வருத்தப்படாமல் இருந்தாலும் பரவாயில்லை, மாறாக சமூக வலைதளத்தில் வன்முறையை கொண்டாடும் விதத்திலான போக்கு இருப்பதாகப் பதிவாகி இருக்கிறது.
ஆனால், இப்பதிவை வெளியிட்ட Annamalai Ips எனும் முகநூல் பக்கம் அண்ணாமலை உடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் அல்ல, ரசிகர் பக்கமே. இதற்கு முன்பாகவும், இப்பக்கத்தில் வெளியான பதிவுகளை அவரின் சொந்தக் கருத்து என தவறாக பரப்பி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : அண்ணாமலை பெயரில் வைரலாகும் போலி ட்வீட்கள், ரசிகர் பக்க பதிவுகள்
ட்ரோல் செய்யப்பட்ட பாஜகவினர் :
பாஜகவினரின் இப்புகைப்படம் ஒரேநாளில் கடுமையான கிண்டலுக்கு உள்ளாகியது. அனைவரும் ஒரே மாதிரியாக ராக்கி கட்டி உள்ளார்கள், இரத்தக் கறையே காணவில்லை, இரத்தம் பிங்க் நிறத்தில் காணப்படுகிறது, மேக்-அப் அதிகமாக இருக்கிறது, ஃபோட்டோசூட்டிற்கு பிறகு நன்றாக சிரிக்கிறார், சில மணி நேரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது காயம் குணமாகி விட்டது என புகைப்படத்தில் இடம்பெற்ற பெண்ணையே இலக்காக வைத்து ட்ரோல் செய்து இருக்கிறார்கள்.
இதுதொடர்பாக, பியூஸ் மனுஷ் பதிவிட்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மேலும் வைரல் செய்யப்பட்டன. பாஜகவினர் கையில் கட்டுடன் இருப்பது போன்று பலரும் கையில் கட்டுடன் கிண்டல் செய்து பதிவிட்டு இருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் உண்மையில் காயம் அடைந்தவர்களும் அல்ல, அடிபட்டது போன்று ஏமாற்றவும் இல்லை. அடிபட்டவர்கள் போன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். புகைப்படத்தில் இடம்பெற்ற, தமிழக பாஜகவின் செயலாளர் சுமதி வெங்கடேஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டு இருக்கிறார்.
திமுகவை கண்டித்து பெரவள்ளூரில் இன்று நடந்த யோராட்டம் மாபெறும் வெற்றி. 680 யாஜகவினர் கலந்து கொண்டனர். pic.twitter.com/91XrFqnjWh
— Sumathi Venkatesh (@SumathiVenkat18) September 22, 2020
செப்டம்பர் 22-ம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில்,” திமுகவை கண்டித்து பெரவள்ளூரில் இன்று நடந்த போராட்டம் மாபெறும் வெற்றி. 680 பாஜகவினர் கலந்து கொண்டனர் ” என சில புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அங்கு இருந்த சிலரும், கையில் மற்றும் தலையில் அடிபட்டது போன்று கட்டுடன் கலந்து கொண்டு இருந்துள்ளதை காணலாம்.
தன்னுடைய புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்ட பிறகு சுமதி வெங்கடேஷ் தன் ட்விட்டர் பக்கத்தில், நேற்று திமுக அராஜகத்தை கண்டித்து நடந்த போராட்டத்தின்போது பாஜக நிர்வாகிகள் அனைவரும் திமுகவின் அராஜகத்தை மக்களிடம் எடுத்துக் காட்டும் விதமாக கை மற்றும் தலையில் கட்டு அணிவித்து போராட்டம் நடத்தினோம். இதை சில நபர்கள் தவறாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
நேற்று திமுக அராஜகத்தை கண்டித்து நடந்த போராட்டத்தின்போது பாஜக நிர்வாகிகள் அனைவரும் திமுகவின் அராஜகத்தை மக்களிடம் எடுத்துக் காட்டும் விதமாக கை மற்றும் தலையில் கட்டு அணிவித்து போராட்டம் நடத்தினோம். இதை சில நபர்கள் தவறாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
— Sumathi Venkatesh (@SumathiVenkat18) September 23, 2020
“திமுகவை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம் – சென்னையில் 7 இடங்களில் நடந்தது ” எனும் தலைப்பில் வெளியான செய்தியில், ” வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தட்சிணாமூர்த்தி தலைமையில் பெரவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமதி வெங்கடேஷ், ஆசிம் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர் ” என வெளியாகி இருக்கிறது.
சுவர் விளம்பரம் பிரச்சனை காரணமாக திமுகவினருக்கு எதிராக பாஜகவினர் கட்டுடன் போராடிய புகைப்படங்கள் தவறாக ட்ரோல் செய்யப்பட்டது. அண்ணாமலை பெயரில் இயங்கும் ரசிகர் பக்கத்தின் மூலம் உண்மையாக அடிபட்டது போன்று தவறாக சித்தரித்து உள்ளார்கள். அது ரசிகர் பக்கம் என அறியாமல் சில முகநூல் பக்கங்களில் ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது.
Update :
ரசிகர் பக்கம் எனும் பெயரில் இயங்கும் முகநூல் பக்கத்தின் செயல்பாடு குறித்து திரு.அண்ணாமலை அவர்களை யூடர்ன் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் தொடர்பு கொண்டு பேசிய போது, ” அது என்னுடைய முகநூல் பக்கம் அல்ல. சமீபத்தில் ரசிகர் பக்கம் என மாற்றிப் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளேன் ” எனத் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து, அந்த முகநூல் பக்கத்தை மீண்டும் தேடுகையில், அப்பக்கம் முடக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.