This article is from Apr 25, 2018

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர்.

பரவிய செய்தி

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞரும், பாஜக கட்சியின் பிரமுகருமான பிரேம் ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

2006-ம் ஆண்டில் நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரேம் ஆனந்த் ஓடும் ரெயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

விளக்கம்

கதுவா சிறுமி சம்பவத்திற்கு பிறகு 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து சட்டம் அமலுக்கு வந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஓடும் ரெயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ரெயிலில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் உள்பட குடும்பத்தினருடன் பயணித்துள்ளார். நள்ளிரவு 1 மணியளவில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் தனியாக படுத்து உறங்கிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியின் வாயினை கையால் மூடிக் கொண்டு பாலியல்ரீதியான துன்புறுத்தல்களை செய்துள்ளார் பிரேம் ஆனந்த். ஒரு கட்டத்தில் கையை உதறி விட்டு அலறிய குழந்தையின் சட்டம் கேட்டு அங்கிருந்தவர்கள் பிரேம் ஆனந்தை பிடித்துள்ளனர். இந்த சம்பவம் கோயம்புத்தூர் மற்றும் ஈரோடுக்கு இடையே செல்லும் பொழுது நிகழ்ந்துள்ளது.

சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பிரேம் ஆனந்த் திமிராகவும், ஒன்றுக்கொன்று முரண்பாடாகவும் பேசியுள்ளார். ஆகையால், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபரை பயணிகள் ஈரோடு ரயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர். கைதாகிய கே.பி.பிரேம் ஆனந்த் மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினர் அட்டையை வைத்திருந்துள்ளனர். மேலும், இவர் பாஜகவின் முக்கிய பிரமுகர் ஆவார். 2006-ம் ஆண்டில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

ஆனால், கைதாகியவர் பாஜக கட்சியைச் சேர்ந்தவர் இல்லை என்று சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பகிரப்படுகிறது. வழக்கில் சிக்கியவர் தேர்தலில் போட்டியிடவில்லை , பாஜக கட்சியின் நிர்வாகி பிரேம் ஆனந்த் எனக் கூறி ஒருவரின் புகைப்படம் பகிரப்படுகிறது. ஆனால், இருவரின் பெயரும் பிரேம் ஆனந்த் என்பதே உண்மை. தற்போது சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் சிக்கியவர் பாஜக சார்பில் போட்டியிட்டவர். மற்றொருவர் நடிகர் சந்தானத்தால் தாக்கப்பட்டவர். இருவரும் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள். எனினும், தேர்தல் ஆணையத்தின் இணையத்தள ஆவணங்களின்படி பிரேம் ஆனந்த் 2006-ம் ஆண்டில் பாஜக சார்பாக போட்டியிட்டு 1858 பெற்றார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

வழக்கறிஞரான பிரேம் ஆனந்த் தீவிரமாக வழக்கறிஞர் பயிற்சி பெறவில்லை என பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. அவர் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், 57 வயதான பிரேம் ஆனந்த் பெசன்ட் நகரில் வசிப்பதாக அவரின் ஆதார் அட்டையில் இடம்பெற்றுள்ளது.

சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபரை போலீசார் பிடிக்கும் பொழுது, “ நான் யார் தெரியுமா என்று அவர்களை பயமுறுத்த முற்பட்டதாகவும், தாம் வழக்கறிஞர் என்றும், அரசியல் தொடர்பு உள்ளவர் என்றும்” கூறியதாக சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.

ஈரோடு ரெயில்வே போலீஸ் பிரேம் ஆனந்தை கைது செய்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பிரேம் ஆனந்த் மீது போக்ஸோ சட்டத்தின் 9(m) மற்றும் 10 பிரிவின் கீழ் வழக்குகள் பதிவிட்டுள்ளனர்.

பிரேம் ஆனந்த் 10 ஆண்டுகளாக கட்சியின் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காத காரணத்தினால் அவருக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று பாஜக சார்பில் நொண்டி சாக்கு கூறியுள்ளனர். பிரேம் ஆனந்த் பலமுறை இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் செய்திகளில் வெளியாகின்றனர்.

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை மற்றும் கடுங்காவல் தண்டனை வழங்கும் அவசரச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு இச்சம்பவம் நிகழ்ந்தது பேரதிர்ச்சியை அளித்துள்ளது. பெண்களுக்கு பாலியல்ரீதியான கொடுமைகளை இழைப்பவர்கள் இவ்வுலகை விட்டு அகற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader