பாஜக வேட்பாளருக்கு செருப்பு மாலை.. குஜராத் தேர்தல் எனப் பழைய வீடியோவைப் பரப்பும் திமுகவினர் !

பரவிய செய்தி

27 ஆண்டுகள் ஆண்ட குஜராத்லயே இப்படினா தமிழ்நாட்டில் 2024 தேர்தலில் ஓட்டு கேட்டு வரும் பாஜக கட்சி வேட்பாளர்களின் நிலை என்னவோ ?

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் மக்களிடம் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் போது அங்கிருந்த வயதான முதியவர் செருப்பு மாலையை வேட்பாளருக்கு அணிவித்ததாக 24 நொடிகள் கொண்ட வீடியோவை திமுகவினர் பலரும் வைரல் செய்து வருகின்றனர்.

திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநில துணைச் செயலாளர் இசை என்பவரும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், குஜராத் தேர்தலைக் குறிப்பிட்டு இந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

உண்மை என்ன ? 

பாஜக வேட்பாளருக்கு செருப்பு மாலை அணிவிக்கும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், மத்தியப் பிரதேசத்தில் தார் மாவட்டம் தாம்னோத் கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு பாஜக வேட்பாளர் தினேஷ் சர்மா வாக்கு சேகரித்த போது செருப்பு மாலை அணிவித்ததாக 2018ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி ஏஎன்ஐ செய்தி முகமை ட்விட்டரில் புகைப்படங்களுடன் வெளியிட்ட பதிவு கிடைத்தது.

Twitter link 

2018ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி ஏஎன்ஐ செய்தியின் யூடியூப் சேனலில், பாஜக வேட்பாளருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட முழு காணொளியும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

” கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை நிலவி வந்துள்ளது. எங்கள் தரப்பில் பெண் ஒருவர் சேர்மனுக்கு புகார் அளித்தும், புகாரை எடுக்கவில்லை. மேலும், இரவு நேரத்தில் கூட காவல் நிலையத்திற்கு பலமுறை அழைத்து உள்ளனர். ஆகையால், வாக்கு சேகரிக்க வந்த பாஜக வேட்பாளருக்கு செருப்பு மாலை அணிவித்ததாக முதியவர் தெரிவித்து உள்ளதாக ” என்டிடிவி செய்தியில் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் மது விநியோகம்.. ஆனா குஜராத் தேர்தல் இல்லப்பா !

இதேபோல், குஜராத் பாஜக கூட்டத்தில் மது விநியோகம் செய்யப்பட்டதாக பழைய வீடியோவை திமுகவினர் பரப்பினர். இதே வீடியோவை திமுகவின் இசை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

முடிவு : 

நம் தேடலில், குஜராத் தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற பாஜக வேட்பாளருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாக திமுகவினர் பரப்பும் தகவல் தவறானது. வைரல் செய்யப்படும் வீடியோ 2018ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader