This article is from May 30, 2019

பாஜக பல தொகுதிகளில் ஒரே எண்ணிக்கையில் வாக்குகளை பெற்றதா ?

பரவிய செய்தி

தேர்தல் ஆணையம் மிக நேர்மையானதாக செயல்பட்டதாம்! நம்புங்க. அப்படி எனில், பல தொகுதிகளில் பாஜக வாங்கிய வாக்கும், காங்கிரஸ் வாங்கிய வாக்கும் ஒன்றாக இருக்கிறது ?

மதிப்பீடு

சுருக்கம்

பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளரின் வாக்கும், காங்கிரஸ் கட்சியின் வாக்கும் ஒரே மாதிரியாக இருப்பதாக கூறும் வாக்கின் எண்ணிக்கை தவறான தகவல். உண்மையான வாக்கு விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

2019 மே 23-ம் தேதி வெளியான 17-வது நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பாரதீய ஜனதா கட்சி 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. எனினும், பிஜேபி வெற்றி குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

அதில், ஒன்றாக பல தொகுதிகளில் பிஜேபி கட்சி வாங்கிய வாக்குகள் 2,11,820 என்றும், காங்கிரஸ் வாங்கியது 1,40,295 என்றும் இருப்பதாகவும், வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து இவ்வாறு வெற்றி பெற்றதாக வாட்ஸ் அஃப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

பதிவுகளில் கூறுவது போன்று பிஜேபி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஒரே மாதிரியான எண்ணிக்கையில் வாக்குகள் இருந்ததா என்பதை அறிய இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேர்தல் முடிவு தரவுகள் ஆராய்ந்து பார்த்தோம்.

முதலில் இருக்கும் போலாசிங் உத்தரப்பிரதேசத்தின் புலந்துஷஹர் தொகுதியில் போட்டியிட்டு 6,81,321 வாக்குகளை பெற்று இருந்தார், சுல்தான்பூரில் போட்டியிட்ட மேனகா சஞ்சய் காந்தி 4,59,196 வாக்குகளையும், பரபங்கி தொகுதியில் போட்டியிட்ட உபேந்திரா சிங் 5,35,594 வாக்குகளையும், படாயுன் தொகுதியில் போட்டியிட்ட சங்கமித்திர மவுரியா 5,11,352 வாக்குகளையும், சத்யபால் சிங் 5,19,631 வாக்குகளையும், பல்லியா தொகுதியில் போட்டியிட்ட வீரேந்திர சிங் 4,64,039 வாக்குகளையும், பாஸ்டி தொகுதியில் போட்டியிட்ட ஹரிஷ் சந்த்ரா 4,49,214 வாக்குகளையும், பீஜினோர் தொகுதியில் போட்டியிட்ட ராஜ பாரதேண்ட்ர சிங் 4,88,061 வாக்குகளையும் பெற்று உள்ளனர்.

அதைப்போன்று, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகளும் வேறாக உள்ளது. இதனை, கீழே கொடுக்கப்பட்டுள்ளன இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியான தேர்தல் முடிவில் காணலாம்.

வாட்ஸ் அஃப் வதந்திகள் எந்தவொரு ஆதாரம் இன்றியும், தங்களுக்கு தோன்றுவதை எழுதி பகிர்ந்து விடுகின்றனர். அவற்றின், பரவலை தடுப்பது சிரமமான காரியம் என்றாலும், சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தியை பகிர்வதற்கு முன்பு உண்மையா என்ற கேள்வியை எழுப்புங்கள். அதுவே, புரளி பரவலை தடுப்பதற்கான முதற்படி !

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, பல தொகுதிகளில் பாஜக வாங்கிய வாக்கும், காங்கிரஸ் வாங்கிய வாக்கும் ஒன்றாக இருக்கிறது எனப் பரவும் தகவல் முற்றிலும் தவறானது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader