பாஜகவைச் சேர்ந்தவர் தனது இரண்டு மகள்களைத் திருமணம் செய்ய முயன்றதாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ !

பரவிய செய்தி
வட இந்திய கொடுமைகள்… தன் இரண்டு மகள்களை தானே கோவிலில் வைத்து திருமணம் செய்ய முயன்ற பாஜக நபர்… தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர்கள்… அதி வேகமாக பரவும் காணொளி.. மக்களே சிந்தியுங்கள் இவர்களின் மனநிலையைTwitter link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
வட இந்தியாவில் ஒருவர் தனது இரண்டு மகள்களைத் தானே திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்த போது சமூக ஆர்வலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது என வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. மேலும் மகள்களைத் திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்த நபர் பாஜகவை சேர்ந்தவர் என்றும் அப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தன் இரண்டு மகள்களை தானே கோவிலில் வைத்து திருமணம் செய்ய முயன்ற பாஜக சங்கி …
தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர்கள்..
அதி வேகமாக பரவும் காணொளி..
இவன்களை எல்லாம்.?@aimlkaja111 @BYK_AIML @iKumaravelM @IrfanKhan_ji @johntha86864986 @RMSubramanian7 pic.twitter.com/VIcPpw2zIy
— KKC IT Wing Tamil Nadu (@MasMasood3) July 9, 2023
Archive linkTwitter link | Archive link
உண்மை என்ன ?
பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தனது இரண்டு மகள்களையும் தானே திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்ததாகப் பரவும் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு தேடியதில், அது சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிந்தது.
பரவக் கூடிய வீடியோ முழுவதையும் 2022 ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் பல யூடியூப் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியில் உள்ள அத்தலைப்பினை மொழி பெயர்த்துப் படித்தோம். அதில், ‘60 வயது முதியவர் 2 பெண்களைத் திருமணம் செய்து கொண்டார். பிறகு என்ன நடந்தது’ என்றே உள்ளது. தந்தை மகள்களைத் திருமணம் செய்து கொண்டதாக எந்த குறிப்புகளும் அதில் இல்லை.
மேலும் அத்தலைப்பினை வைத்து மேற்கொண்டு தேடியதில், இது குறித்து ‘The quint’ இணையதளம் வெளியிட்ட செய்தி கிடைத்தது. பரவக் கூடிய வீடியோ 2022, ஜூன் மாதம் ‘SATISH SINGH TV’ என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அந்த யூடியூப் பக்கமோ, அந்த வீடியோவோ இல்லை. அவை முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நீக்கப்பட்ட வீடியோவின் Archive லிங்க் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் உள்ள வீடியோவின் தொடக்கத்தில் ‘பொழுது போக்கிற்காக எடுக்கப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து அந்த வீடியோ சித்தரித்து எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : முஸ்லீம் பெண் தனது தந்தையைத் திருமணம் செய்து கொண்டதாகப் பரப்பப்படும் பொய் !
இதே போன்று இஸ்லாமியர் தனது மகளையே 4வது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் என தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதன் உண்மைத் தன்மையையும் யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
முடிவு :
நம் தேடலில், பாஜகவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது இரண்டு மகள்களையும் அவரே திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்ததாகப் பரவும் வீடியோ உண்மை அல்ல. அது சித்தரிக்கப்பட்டுஎடுத்த போலியான வீடியோ என்பதை அறிய முடிகிறது.