பாஜக தலைவர் ஹெச்.ராஜா கேரளாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டாரா ?

பரவிய செய்தி
கேரள ஆளுநராக தமிழக பாஜக தலைவர் எச்.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழக பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் கேரள ஆளுநராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஓர் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து, குமுதம் முகநூல் பக்கத்தில் வெளியான செய்தியின் படமும் வைரலாகி கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
தெலங்கானா மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தரராஜனை வேறு மாநிலத்திற்கு மாற்றலாம் என்றும், கேரளாவின் ஆளுநராக உள்ள ஆரிஃப் முகமது கானை தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்க பாஜக தலைமை திட்டமிட்டு உள்ளதாக செய்தி வட்டாரங்களில் வெளியாகி வந்தது. இந்நிலையில்தான், ஹெச்.ராஜா கேரளா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் உலாவ தொடங்கியது.
ஹெச்.ராஜா கேரளா ஆளுநராக நியமிக்கப்பட்டதாகவே செய்தியை வெளியிட்ட குமுதம் அந்த செய்தியை பின்னர் நீக்கி இருக்கிறது.
இதுகுறித்து தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் நிர்மல் குமாரிடம் பேசுகையில், ” குமுதம் செய்தியை நானும் பார்த்தேன். கேரளாவின் ஆளுநராக ஹெச்.ராஜா அவர்கள் தற்போதுவரை நியமிக்கப்படவில்லை. அதுகுறித்து இன்னும் தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நியமிக்கப்பட உள்ள ஆளுநர் குறித்த அறிவிப்பு வெளியாக ஒரு வாரம் கூட ஆகலாம் ” எனத் தெரிவித்து இருந்தார்.
இதேபோல், கடந்த 2020-ல் ஹெச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட வாய்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், கேரள ஆளுநராக தமிழக பாஜக தலைவர் ஹெச்.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பரவும் செய்திகள் தவறானது. அவ்வாறு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என அறிய முடிகிறது.