நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் ஹெச்.ராஜா தலைமறைவா ?

பரவிய செய்தி
ஹெச்.ராஜா தலைமறைவு. அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் நேற்று ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் எச்.ராஜா தலைமறைவு என தகவல் வெளியாகியுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜாவிற்கு அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், அவர் தலைமறைவாகி இருப்பதாக தந்தி டிவி மற்றும் புதியதலைமுறையின் நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
அக்டோபர் 8-ம் தேதியிட்ட நியூஸ் கார்டுகள் குறித்து புதியதலைமுறை மற்றும் தந்தி டிவி சேனல்களின் முகநூல் பக்கத்தை ஆராய்கையில், இரு சேனல்களிலும் அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை.
தந்தி டிவி நியூஸ் கார்டை ரிவர்ஸ் இமேஜ் சேர் செய்கையில், அக்டோபர் 7-ம் தேதி ஹெச்.ராஜா பற்றி வெளியான வேறொரு செய்தியே கிடைத்தது.
” ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம். அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் ” எனும் நியூஸ் கார்டே வெளியாகி இருக்கிறது.
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் மேலே ஹெச்.ராஜா என்றும், கீழே எச்.ராஜா என்றும் மாற்றி மாற்றி இடம்பெற்று இருக்கிறது. மேலும், தந்திடிவி செய்தியில் இடம்பெற்ற புகைப்படம் மற்றும் செய்தி அப்படியே புதியதலைமுறை நியூஸ் கார்டிலும் இடம்பெற்று இருக்கிறது.
இதுகுறித்து புதியதலைமுறையின் டிஜிட்டல் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசுகையில், இது போலியானது, நாங்கள் வெளியிடவில்லை ” எனத் தெரிவித்து இருந்தனர். ஹெச்.ராஜா உடைய ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களிலும் ட்வீட் பதிவிடப்பட்டு செயல்பட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமறைவாகியதாக பரப்பப்படும் நியூஸ் கார்டுகள் போலியானது மற்றும் எடிட் செய்யப்பட்டவை என அறிய முடிகிறது.