கர்நாடகாவில் பாஜக 41 இடங்களில் வெறும் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாகப் பரப்பப்படும் பொய் !

பரவிய செய்தி
கர்நாடகாவில் பாஜக 41 இடங்களில் 1000 வாக்குகள் வித்தியாசத்திலும், 58 இடங்களில் 2000 வாக்குகள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது. இதுவே பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி…! பணநாயகம் வென்றது கர்நாடகாவில்…!
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதியில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனது பெரும்பான்மையை நிரூபித்தது. இதில் பாஜக 66 இடங்களிலும், மற்றவை 23 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
இதன்படி அடுத்த முதல்வரை காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே அறிவிக்கவுள்ள நிலையில், தற்போது “கர்நாடகாவில் பாஜக 41 இடங்களில் 1000 வாக்குகள் வித்தியாசத்திலும், 58 இடங்களில் 2000 வாக்குகள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளது. இதுவே பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. கர்நாடகாவில் பணநாயகமே வென்றது.” என்பது போன்ற பதிவுகள் பாஜக ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன.
கர்நாடகாவில் பாஜக
41 இடங்களில்
1000 வாக்குகள்
வித்தியாசத்திலும்,58 இடங்களில்
2000 வாக்குகள்
வித்தியாசத்திலும்
தோல்வியடைந்தது.இதுவே பாஜகவிற்கு கிடைத்த
மிகப்பெரிய வெற்றி…!பணநாயகம் வென்றது
கர்நாடகாவில்…!#KaranatakaElectionResults2023#ElectionResult #BJP4IND pic.twitter.com/pTWkNAvPFY— KOVAI VIGNESH (@CoimbatoreVign1) May 15, 2023
BJP lost by 1000 votes in 41 seats and by 2000 votes margin in 58 seats. pic.twitter.com/n0GKA5z4nj
— वेदिजा (@YagySeni_YuIIya) May 16, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் தகவல்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) இணையதளத்தில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்த போது, பாஜக 41 தொகுதிகளில் 1000 வாக்குகள் வித்தியாசத்திலும், 58 தொகுதிகளில் 2000 வாக்குகள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளது என்ற கூற்று பொய்யானது என்பதை அறிய முடிந்தது.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவின்படி காங்கிரஸ் 135 தொகுதிகளிலும், பாஜக 66 தொகுதிகளிலும், மற்றவர்கள் 23 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 1000 மற்றும் 2000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 12 தொகுதிகள் மட்டுமே உள்ளன. இதில் 8 தொகுதிகள் 1000-க்கும் குறைவான வித்தியாசத்தில் காணப்படுகின்றன.
1000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசம் உள்ள தொகுதிகள்: மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 1000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசம் உள்ள தொகுதிகளாக 8 தொகுதிகள் மட்டுமே உள்ளன. அந்த 8 தொகுதிகளில் காந்தி நகர், சிருங்கேரி, மாலூர், முடிகெரே, ஜகளூர் என்ற 5 தொகுதிகளில் மட்டுமே 1000-க்கும் குறைவான வித்தியாசத்தில் பாஜக தோற்றுள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகளில், இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், ஒரு தொகுதியில் ஜனதா தளமும் 1000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்றுள்ளன. இதன் மூலம் 41 தொகுதிகளில் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோற்றுள்ளது என்ற கூற்று தவறானது என்பதை அறிய முடிகிறது.
1000 முதல் 2000 வாக்குகள் வித்தியாசம் உள்ள தொகுதிகள்: இதே போன்று மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பிதர் தெற்கு, ஹடகல்லி, ஹோம்னாபாத் மற்றும் நரகுண்ட் ஆகிய 4 தொகுதிகளில் மட்டுமே 1000 முதல் 2000 வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்தில் வாக்குகள் காணப்படுகின்றன. அந்த 4 இடங்களிலும் காங்கிரஸ் கட்சியே தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் 58 தொகுதிகளில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோற்றுள்ளது என்ற கூற்றும் தவறானது என்பதை அறிய முடிகிறது.
எனவே ஆய்வுகளின் படி காந்தி நகர், சிருங்கேரி, மாலூர், முடிகெரே, ஜகளூர் ஆகிய 5 தொகுதிகளில் மட்டுமே 1000, 2000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக பின்தங்கியுள்ளது. ஒருவேளை குறைவான வாக்கு வித்தியாசத்தில் உள்ள 5 தொகுதிகளும் அக்கட்சிக்கு சாதகமாக அமைந்தாலும் கூட கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பதை அறிய முடிகிறது.
டெபாசிட் இழப்பு :
வேட்பாளர்கள் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) டெபாசிட் (பாதுகாப்பு வைப்பு) தொகையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அதன்படி நாடாளுமன்றத் தேர்தலுக்கு ₹25,000 மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கு ₹10,000 டெபாசிட் தொகை செலுத்த வேண்டும்.
இதன்படி ஒரு வேட்பாளர் தனது தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கை (16.7 சதவீதம்) பெறத் தவறினால் டெபாசிட் இழக்க நேரிடும். இவ்வாறு டெபாசிட் இழப்பதன் மூலம் வேட்பாளர்களுக்கு நிதிப் பின்னடைவு ஏற்படுவதோடு, அவர்கள் தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் கருதப்படும்.
இதன்படி நடந்து முடிந்த கர்நாடக சட்ட சபை தேர்தலில் பாஜக தான் போட்டியிட்ட 224 தொகுதிகளில், 31 தொகுதிகளில் தனது டெபாசிட்டை இழந்துள்ளது என்பதை கீழே உள்ள படத்தின் மூலம் அறியலாம்.
முடிவு:
நம் தேடலில், கர்நாடகாவில் பாஜக 41 இடங்களில் 1000 வாக்குகள் வித்தியாசத்திலும், 58 இடங்களில் 2000 வாக்குகள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளது எனப் பரவி வரும் தகவல் பொய். இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுப் படி, 5 தொகுதிகளில் மட்டுமே 1000 மற்றும் 2000 வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்தில் பாஜக பின்தங்கியுள்ளது என்பதையும், 31 தொகுதிகளில் தனது டெபாசிட்டையே இழந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.