தமிழ்நாட்டின் பெயரை “தக்ஷிண பிரதேஷ்” என்று மாற்றுவோம் என பாஜக அறிவித்ததா ?

பரவிய செய்தி
நாடு முழுவதும் தமிழ்நாட்டின் பெருமையை எடுத்துச் செல்ல ஏதுவாக அனைவருக்கும் புரியும் வகையில் தமிழ்நாடு எனும் பெயர் தேசிய மொழியில் “தக்ஷிண பிரதேஷ்” என்று மாற்றப்படும்.
மதிப்பீடு
விளக்கம்
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டின் பெயரை தக்ஷிண பிரதேஷ் என்று மாற்றுவோம் என அறிவித்து உள்ளதாக தமிழக பாஜகவின் வாக்குறுதி போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
தமிழ்நாடு எனும் பெயரை மாற்றுவோம் என்று அவ்வளவு எளிதாக பாஜகவால் கூறவும் முடியாது, அப்படி கூறினால் பெரும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என நிச்சயம் அறிவர். தமிழக பாஜக வெளியிட்ட 2021 தேர்தல் அறிக்கையை பார்க்கையில், அப்படி எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறவில்லை.
வைரல் செய்யப்படும் பாஜகவின் ஆன்லைன் போஸ்டர் குறித்து தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஆராய்கையில், அதே புகைப்படம், வண்ணத்தில் விவசாயம் சார்ந்து வெளியிட்ட போஸ்டர் ஒன்று கிடைத்தது.
விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன்
Advertisementவிலை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய ’விலை நிர்ணயக் குழு’
தமிழக அரசின் பொதுப் பணித்துறையின் கீழ் ’விவசாய நீர் பாசன துறை’ உருவாக்கப்படும்.@JPNadda @blsanthosh @nitin_gadkari @Murugan_TNBJP #Thamaraiyin_TholaiNoakku #தாமரையின்_தொலைநோக்கு pic.twitter.com/tCm7zEJp6D
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 22, 2021
அதில், ” விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன். விவசாயத்திற்கென தனி பட்ஜெட், வட்டியில்லா பயிற்கடன், விலை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய நிலை நிர்ணயக் குழு, தமிழக அரசின் பொதுப் பணித்துறையின் கீழ் ’விவசாய நீர் பாசன துறை’ உருவாக்கப்படும் ” என இடம்பெற்று இருக்கிறது.
இதன் அடிப்படையில் பார்க்கையில், தமிழக பாஜக வெளியிட்ட வாக்குறுதி புகைப்படத்தில் தமிழகத்தின் பெயரை மாற்றுவதாக ஃபோட்டோஷாப் செய்து வதந்தி பரப்புகின்றனர் என அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாடு எனும் பெயர் தேசிய மொழியில் “தக்ஷிண பிரதேஷ்” என்று மாற்றப்படும் என தமிழக பாஜக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததாக பரப்பப்படும் புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.