முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சித்ததால் இல்லை, போலிச் செய்தியைப் பதிவிட்டதால் பாஜக பிரமுகர் கைது !

பரவிய செய்தி
துபாய் பயணத்தை விமர்சித்த பாஜக பிரமுகர் கைது! முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சித்து தகவல் பரப்பிய பாஜக பிரமுகர் கைது. சேலம் மாவட்டம் எடப்பாடி, பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் அருள்பிரசாத் என்பவரை கைது செய்தது போலீஸ்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்தை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, மு.க.ஸ்டாலின் தன் குடும்பத்தினர் உடன் துபாய் சென்றது தற்போது வரை விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து விமர்சித்த பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளதாக ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டது. மேலும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தரப்பினரும் துபாய் பயணம் குறித்து விமர்சித்த பாஜக பிரமுகரை கைது செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
எதனால் கைது ?
சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் அருள்பிரசாத் முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சித்ததற்காக கைது செய்யப்படவில்லை, போலிச் செய்தியை பதிவிட்டதற்காக கைது செய்யபட்டுள்ளார்.
விரிவாக படிக்க : முதல்வரின் கூலிங் ஜாக்கெட் 17 கோடி என பாஜகவினர் பரப்பும் போலிச் செய்தி.. பி.டி.ஆர் போட்ட ட்வீட் !
அருள் பிரசாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” கூலிங் ஜாக்கெட் 17 கோடி. துபாய் செல்லும் போது முதல்வர் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி என நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்து உள்ளதாக நியூஸ் 7 தமிழ் உடைய போலி நியூஸ் கார்டை பழனிவேல் தியாகரஜனை டக் செய்து பதிவிட்டு இருந்தார்.
TN காவல்துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பிப்பாக இருக்கலாம்
வடிகட்டப்பட்ட முட்டாள் இது போன்ற முட்டாள்தனத்தை வெளிப்படையாக இடுகையிடுவதால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை
சங்கிகள் வாட்ஸ்அப் விஷத்தைத் தாண்டிச் செல்லக் கூடாது🤦♂️🤦♂️🤦♂️ pic.twitter.com/hIxwQl6L8v
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) March 25, 2022
போலியான செய்தியை பதிவிட்ட பாஜக பிரமுகர் மீது தமிழக காவல்துறையின் புதிய சமூக ஊடக மையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிடிஆர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதன் அடிப்டையில் பாஜக பிரமுகர் அருள்பிரசாத் கைது செய்யப்பட்டு உள்ளார்.
முதல்வரின் துபாய் பயணம் குறித்து போலிச் செய்தியைப் பகிர்ந்ததால் பாஜக பிரமுகரை கைது உள்ளதாக சன் நியூஸ், புதியதலைமுறை உள்ளிட்ட செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், முதல்வரின் துபாய் பயணம் குறித்து போலியான செய்தியைப் பதிவிட்டதால் பாஜக பிரமுகர் கைது செய்யபட்டுள்ளார். ஆனால், விமர்சித்து தகவல் பரப்பிய பாஜக பிரமுகர் என ஜூனியர் விகடன் செய்தியில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.