ஹைதராபாத்தில் கோவில் அருகே தொழுகை செய்வதை எதிர்த்ததால் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கைதா ?

பரவிய செய்தி
ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவம் உங்கள் கண்களைத் திறக்கும். தனித்து எம்எல்ஏவாக வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ ராஜா சிங் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அதற்கு என்ன காரணம்? ஏனெனில் அம்பர் பேட்டை பகுதியில் உள்ள சிறுபான்மை சமூகத்தினர் கோவிலுக்கு அருகில் உள்ள மெயின் ரோட்டில் மூன்று நாட்களாக தொழுகை நடத்த ஆரம்பித்தனர்.
ஹைதராபாத் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் பகுதி. இங்கே மசூதிகள் எல்லா விவரங்களிலும் உள்ளன. இதற்கு இந்து கட்சியான பாஜக எம்எல்ஏ எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர் எப்படி கைது செய்யப்பட்டார் என்று பார்த்தீர்களா?
மதிப்பீடு
விளக்கம்
தெலங்கானா மாநிலத்தின் ஆம்பர் பேட்டை பகுதியில் உள்ள கோவிலின் அருகே அமைந்து இருக்கும் மெயின் ரோட்டில் முஸ்லீம்கள் தொடர்ந்து தொழுகை செய்து வந்ததை பாஜக எம்எல்ஏவான ராஜா சிங் எதிர்ப்பு தெரிவித்த போது போலீசார் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து செல்வதாக 2.40 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிற மொழிகளில் பரவிய வீடியோவின் பதிவு மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு தமிழிலும் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பாஜக எம்எல்ஏ ராஜா சிங் போலீசாரால் கைது செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், 2019 மே 6-ம் தேதி ராஜா சிங் கைது செய்யப்பட்ட வீடியோ மற்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
2019-ல் ஆம்பர்பேட்டையில் புதிதாக மசூதி கட்டுவது தொடர்பாக இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த நிலத்திற்கு வக்ஃப் வாரியம் உரிமை கோரிய நிலையில், ஏற்கனவே சாலை விரிவாக்கப் பணிக்காக அந்த நிலத்திற்கு இழப்பீடாக ஜிஎச்எம்சி ரூ.2.5 கோடியை அளித்து உள்ளதாக ராஜா சிங் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அங்கு ஏற்பட்ட பதற்றமான சூழலால் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
Arrested by @hydcitypolice Police Commissioner while opposing for
Illegal masjid construction on road opposed by hindu vahini & local Hindu karayakartas at Amberpet #Hyderabad pic.twitter.com/w2qbdTm07c— Raja Singh (@TigerRajaSingh) May 5, 2019
தன்னை ஹைதராபாத் போலீஸ் கைது செய்தது குறித்து ராஜா சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதே வீடியோவை 2019 மே 5-ம் தேதி பதிவிட்டு இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், ஹைதராபாத்தின் ஆம்பர் பேட்டையில் கோவில் அருகே உள்ள மெயின் ரோட்டில் முஸ்லீம்கள் தொழுகை செய்வதை எதிர்த்த காரணத்தினால் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கைது செய்யப்பட்டதாக வைரலாகும் வீடியோ தவறானது. 2019-ல் ராஜா சிங் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவுடன் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.