பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் முதலிடம் பிடித்த பிஜேபி.

பரவிய செய்தி
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களில் பாஜக தான் முதலிடம்-ஆய்வில் தகவல்.
மதிப்பீடு
சுருக்கம்
செய்தியில் வெளியாகி இருப்பது 2017-ல் ADR வெளியிட்ட ஆய்வு கட்டுரை மூலம் வெளியான செய்தியாகும். 2017-ல் பிஜேபி கட்சியின் 14 எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.2018-ல் ADR வெளியிட்ட ஆய்வு தகவலில் கூட பாஜக 12 எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் உடன் முதல் இடத்தில் உள்ளது.
எது தவறு : செய்தியில் பிஜேபியின் 51 எம்.பி, எம்.எல்.ஏ எனத் தவறாகக் குறிப்பிட்டு உள்ளனர். அது மொத்த எம்.பி, எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை என ADR 2017 ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
விளக்கம்
இந்தியாவில் மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெரிய கட்சியில் இருந்தே தேர்வு செய்யப்படுகின்றன. கட்சிக்கு முக்கியம் கொடுத்து எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுக்கும் மக்கள் வேட்பாளர்கள் மீதான குற்றவியல் வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பற்றி அறிய பெரிதும் யோசிப்பதில்லை.
2017-ல் ADR வெளியிட்ட ஆய்வு கட்டுரையில் பிஜேபியின் 14 எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 51 எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
2017 ஆம் ஆண்டில் ADR வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையைத் தொடர்ந்து 2018-லும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு உள்ளனர்.
2018 ஏப்ரல் 19-ம் தேதி Association of Democratic Reforms( ADR), தற்போது உள்ள 776இல் 768 எம்.பிக்கள் மற்றும் 4,120-ல் 4077 எம்.எல்.ஏக்கள் தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்கள் அளித்த உறுதிச் சான்று(Affidavits) மூலம் அவர்களின் மீதான குற்றவியல் வழக்குகள் பற்றிய விவரத்தை வெளியிட்டது.
அதில், 33 சதவீத எம்.பி, எம்.எல்.ஏக்களான 1,580 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன மற்றும் 48 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளதை உறுதிப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், 45 பேர் எம்.எல்.ஏக்கள் மற்றும் 3 பேர் எம்.பிக்கள் ஆவர்.
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் கொண்டவர்களை முக்கிய கட்சிகளின் வாரியாக பார்க்கும் பொழுது 48 பேரில் 12 பேர் பிஜேபி கட்சியைச் சேர்ந்தவர்கள். இதைத் தொடர்ந்து சிவசேனா 7 பேர், அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் 6 எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில், தமிழக கட்சியான திமுகவைச் சேர்ந்த இரண்டு பேர் உள்ளனர்.
மாநில வாரியாக பார்க்கையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 பேர், மேற்கு வங்கத்தில் 11, ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலம் தலா 5 பேரைக் கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் இரண்டு பேர் மீது குற்ற வழக்கு உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை அதிக கொண்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களை உடைய பிஜேபி கட்சியே அதிக சீட்டுகளையும் வழங்கி முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் பிஜேபி சீட்டு கொடுத்த 47 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பிஜேபியைத் தொடர்ந்து மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி 35வேட்பாளருக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் 24 பேருக்கும் லோக் சபா, ராஜ்ய சபா மற்றும் மாநில தேர்தல்களில் சீட்டு வழங்கி உள்ளனர். இதிலும், மகாராஷ்டிரா மாநிலம் 65 வேட்பாளர்கள் உடன் முதலிடத்தில் உள்ளது.
கடந்த 5 ஆண்டில், முக்கிய கட்சிகள் சீட் வழங்கிய 26 பேரின் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவாகிய உள்ளதாகவும் ADR அறிக்கை தெரிவிக்கின்றன. 48 எம்.பி & எம்.எல்.ஏக்களில் தெலுங்கு தேசம் கட்சியின் கோனுகுண்டல சூரியநாராயணா, பிஜேபி-யின் ஜி.அஹிர் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் குலாப் யாதவ் ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன.
இதில் குறிப்பாக கவனிக்க வேண்டிய விசயம் யாதெனில், “ பெண்கள் தலைமை வகிக்கும் கட்சியில் கூட பெண்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் கொண்டவர்களுக்கு சீட்கள் வழங்கப்படுகின்றன “.
இந்தியாவில் ஓட்டுப் போடும் மக்கள் கட்சியும், சின்னத்தையும் பெரிதாக நம்புகின்றனர். ஆனால், வேட்பாளர்களின் பின்னணிக் குறித்து பெரிதும் யோசிப்பதில்லை என்பதே வேதனை.