சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என பாஜக எம்.பி பேசினாரா ?

பரவிய செய்தி
சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது – பாஜக எம்.பி கணேஷ் சிங் மக்களவையில் பேச்சு
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.பி கணேஷ் சிங் என்பவர் சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என மக்களவையில் பேசியதாக புதிய தலைமுறை சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய தலைமுறையின் சேனலின் நியூஸ் கார்டில் இடம்பெற்ற செய்தியை வைத்து மீம்ஸ் மற்றும் ட்ரோல் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
ட்ரோல் செய்யப்படும் பதிவுகளில் இடம்பெற்ற புதிய தலைமுறையின் நியூஸ் கார்டில் தேதி உள்ளிட்டவை இடம்பெறவில்லை. ஆகையால், பாஜக எம்.பி கணேஷ் சிங் பெயரை வைத்து தேடுகையில், பாஜ எம்.பி கணேஷ் சிங் மக்களவையில் ” சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ” என பேசியதாக 2019-ம் ஆண்டு டிசம்பரில் தமிழில் முன்னணி செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கிறது.
2019-ல் நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா மீதான விவாதத்தின் போது, தினமும் சமஸ்கிருதத்தில் பேசினால் நரம்பு மண்டலம் பலப்படுவதுடன், சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பு கட்டுக்குள் இருக்கும் எனவும் அமெரிக்காவைச் சேர்ந்த கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி கணேஷ் சிங் கூறியுள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஆய்வின்படி, கம்ப்யூட்டர் புரோகிராமிங் சமஸ்கிருத மொழியில் செய்யப்பட்டிருந்தால் எவ்வித குறைபாடுகளும் ஏற்படாமல் மிகச் சரியாக இருந்திருக்கும் என்று கூறினார் ” என NDTV செய்தியில் வெளியாகி இருக்கிறது
2019-ல் இதுதொடர்பாக, சமஸ்கிருதம் பேசுவது சர்க்கரை மற்றும் கொழுப்பை சீராக வைத்திருக்கும் – பாஜக எம்.பி.கணேஷ் சிங் மக்களவையில் பேச்சு ” என புதிய தலைமுறை சேனலில் நியூஸ் கார்டு ஒன்று வெளியாகி இருக்கிறது.
மேற்காணும் நியூஸ் கார்டை வெளியான போதே சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு மீம்ஸ் ஆக வைரலாகியது. அந்த நியூஸ் கார்டில் “சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது ” எடிட் செய்து தற்போது வைரல் செய்து வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என பாஜக எம்.பி கணேஷ் சிங் மக்களவையில் பேசியதாக வைரல் செய்யப்படும் புதிய தலைமுறை நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்ட போலியானது.
2019-ல் பாஜக எம்.பி கணேஷ் சிங் சமஸ்கிருதம் பேசுவது சர்க்கரை மற்றும் கொழுப்பை சீராக வைத்திருக்கும் என பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.