பாஜக அலுவலகத்தில் குண்டு வீசியவர் கராத்தே தியாகராஜன் ட்ரைவரா ? அண்ணாமலை வீச சொன்னாரா ?

பரவிய செய்தி
கராத்தே தியாகராஜனின் முன்னாள் கார் ட்ரைவர் கருக்கா வினோத். 2 மாதம் சம்பளம் பாக்கி வைத்து தரமறுத்ததால். பாஜக மீது கோபம் கொண்டு அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசினேன், கருக்கா வினோத் வாக்குமூலம்.
மதிப்பீடு
விளக்கம்
பாஜகவின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசிய கருக்கா வினோத் தன்னுடைய வாக்குமூலத்தில் கராத்தே தியாகராஜனின் முன்னாள் கார் ட்ரைவர் என்றும், 2 மாதம் சம்பளம் பாக்கி என்பதால் கோபத்தில் அப்படி செய்ததாகக் கூறினார் என புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
2022 பிப்ரவரி 9-ம் தேதி இரவு சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியது “கருக்கா வினோத்” என கண்டுபிடிக்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக நிலைப்பாடு தனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், அதை கண்டித்து பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசினேன் என விசாரணையில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து தேடியப் போது, ” நீட் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு வினோத் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். மதரீதியாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ வினோத் குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை – காவல்துறை ” என பிப்ரவரி 10-ம் தேதி புதிய தலைமுறை செய்தி வெளியிட்டு இருக்கிறது.
மேற்காணும் புதியதலைமுறையின் நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து வதந்தியை பரப்பி வருகிறார்கள்.
வீச சொன்னதே அண்ணாமலை தானா ?
” பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச சொன்னதே அண்ணாமலை தான். இருவருக்கும் இடையேயான தொலைபேசி அழைப்பு பதிவை போலீசாரிடம் ஒப்படைத்தார் கருக்கா வினோத். தேர்தலுக்காக வீசியதாக வாக்குமூலம் ” என abp நாடு நியூஸ் கார்டு ஒன்றும் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
அண்ணாமலை பற்றி வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு போலியானது என abp நாடு தரப்பில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க : வைரலாகும் பாஜக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாங்களே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்ட சம்பவங்கள் !
முடிவு :
நம் தேடலில், பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசிய கருக்கா வினோத் சம்பள பாக்கியால் குண்டு வீசியதாகவும், அண்ணாமலை சொல்லித்தான் குண்டு வீசியதாகவும் பரப்பப்படும் நியூஸ் கார்டுகள் போலியானவை என அறிய முடிந்தது.