பாஜக பிரமுகர் கோயில் நகை 99 சவரனைக் கையாடல் செய்து தப்பி ஓடினாரா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
பாஜகவைச் சேர்ந்த எஸ்.பி.பட்டு ராமசுந்தரம் என்பவர் வீரமாணிக்கம் கோயில் நகை 99 பவுனுடன் தப்பி ஓடினார். அவர் மீது இந்து சமய அறநிலையத்துறை குரும்பூர் காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதனையடுத்து அவரது முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதாகவும், இதனால் அவர் தலைமறைவாகியுள்ளதாகப் போட்டோ கார்டு ஒன்றினை சமூக வலைத்தளங்களில் திமுகவினர் பரப்பி வருகின்றனர். அந்த போட்டோ கார்டில் பட்டு ராமசுந்தரம் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையுடன் இருப்பது போன்ற புகைப்படமும் உள்ளது.
தேசபக்தருக்கு வந்த சோதனை 😂😂😂😂 pic.twitter.com/lmC8Ezn6fx
— அம்மனூர் கார்த்தி (@Ammanurk) November 13, 2022
உண்மை என்ன ?
பரப்பக்கூடிய புகைப்படத்தில் இருக்கும் பட்டு ராமசுந்தரம், வீரமாணிக்கம் கோயில் நகை திருட்டு என்ற வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் தேடினோம். இது தொடர்பாக 2021, நவம்பர் 20ம் தேதி நியூஸ் 18 தமிழ்நாடு, ஒன் இந்தியா போன்றவை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே வீர மாணிக்கம் என்ற கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் வீர பத்ரகாளியம்மன், சந்தி அம்மன், சுடலை மாடன் ஆகிய மூன்று கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் காட்டுப்பாட்டில் இருக்கிறது.
அக்கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கு முன்னதாக பாஜகவைச் சேர்ந்த பட்டு ராமசுந்தரம் என்பவர் நிர்வகித்து வந்துள்ளார். கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகும், அவர் கோயில் நகைகள் 100 சவரனை அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரினை அடிப்படையாகக் கொண்டு பட்டு ராமசுந்தரம், அவரது சகோதரர்கள் கார்த்திகேயன், முத்து மற்றும் உறவினர்கள் முருகேசன், திருமால் மற்றும் கதிரேசபாண்டியன் ஆகிய 6 பேர் மீது 7 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், பட்டு ராமசுந்தரம் தலைமறைவாகி தூத்துக்குடி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு அளித்தார். அதனை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
கோயில் நகையுடன் தேசபக்தர் தப்பியோட்டம் 😁 pic.twitter.com/hRE9f9XyB4
— ɱąཞƙ2ƙąƖı (@Mark2Kali_) November 18, 2021
இச்சம்பவம் நிகழ்ந்த நாட்களிலேயே திமுகவினர் “கோயில் நகையுடன் தேசபக்தர் தப்பியோட்டம்” என்ற தலைப்பில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அப்படங்களையே தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் பகிர்ந்து வருகின்றனர்.
முடிவு :
நம் தேடலில், பாஜகவை சேர்ந்த பட்டு ராமசுந்தரம் என்பவர் கோயில் நகைகளைக் கையாடல் செய்ததாகக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது முன் ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது கடந்த ஆண்டு நிகழ்ந்ததாகும் என்பதை அறிய முடிகிறது.