This article is from Oct 06, 2019

பாஜக அமைச்சர் கை உடைந்தது போன்று நாடகமாடுகிறாரா ?| உண்மை அறிவோம்!

பரவிய செய்தி

காலையில் இடப்பக்க கையில் கட்டு, மாலையில் வலப்பக்க கையில் கட்டு, கை உடைந்தது போன்று நாடகமாடும் பாஜக அமைச்சர்.

மதிப்பீடு

விளக்கம்

பாஜகவின் அமைச்சர் ஒருவர் கையில் மாவு கட்டுடன் இருக்கும் இரு புகைப்படங்கள் இந்திய அளவில சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.  அதனுடன், ” காலையில் இடது கையில் கட்டுடன் இருக்கிறார், மாலையில் வலது கையில் கட்டுடன் இருக்கிறார் ” என்ற வாசகத்துடன் கிண்டல் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர்  கேட்டுக் கொண்டார். இதையடுத்து, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வரும் பாஜக அமைச்சர் குறித்து தேடிப் பார்த்தோம்.

பாஜக அமைச்சரா ? 

புகைப்படத்தில் இருப்பவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான சிவ்ராஜ் சிங் சவுஹான். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2018-ம் ஆண்டு வரை பதவியில் இருந்துள்ளார். தற்பொழுது மத்தியப் பிரதேச மாநிலத்தை ஆள்வது இந்திய தேசிய காங்கிரஸ். கமல் நாத் முதல்வராக பதவி வகிக்கிறார்.

சிவ்ராஜ் சிங்  உடைய இரு புகைப்படத்தை இணைத்து ஒரே நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.

இடப்பக்க கட்டு : 

மேற்காணும் வைரல் புகைப்படங்கள் ஆனது பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான சிவ்ராஜ் சிங் சவுஹான் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறதா என ஆய்வு செய்தோம்.

அதில், சிவ்ராஜ் சிங் தொடர்பாக செய்திகளில் வெளியான புகைப்படங்கள், அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் வலது கையிலேயே கட்டு இடம்பெற்று இருக்கிறது.

Twitter link | Archived link 

செப்டம்பர் 30-ம் தேதியன்று வைரலாகும் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் சிவ்ராஜ். அந்த கூட்டத்தில் அவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் வலது கையிலேயே கட்டுடன் இருக்கிறார்.

வைரலாகும் புகைப்படத்தை இடது கையில் அடிபட்டது போன்று காண்பிக்க திருப்பப்பட்டு(பிளிப் செய்து) இருக்கிறது. மாற்றப்பட்ட புகைப்படத்தில் அனைவரின் சட்டையில் இருக்கும் பட்டன்கள் வலது பக்கம் நோக்கி இல்லாமல், இடப்பக்கம் நோக்கி இருப்பதை காணலாம் .

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் உடைய புகைப்படத்தை தவறாக மாற்றியமைத்து ” ஒரே நாளில் இரு கைகளில் மாற்றி மாற்றி கட்டுடன் சுற்றி வருகிறார்  ” என வதந்தி பரப்பி வருகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader