பாஜக ஆட்சியில் காவல் துறையினரின் நடவடிக்கை எனப் பரவும் குறும்படக் காட்சிகள் !

பரவிய செய்தி
9 ஆண்டுகளில் நாம் கண்ட டிஜிட்டல் இந்தியாவின் போலிஸ். உலகம் முழுவதும் அறியும் வரை பகிருங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டுக் கால ஆட்சியில் இந்தியாவில் உள்ள காவல் துறையினர் எவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள் என 30 வினாடிகள் வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
அதில் காவல் துறையினர் போல் உள்ள சிலர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரது விரல் நகத்தினை பிடுங்கி சித்திரவதை செய்வது போன்று காண்பிக்கப்படுகிறது.
9 ஆண்டுகளில் நாம் கண்ட டிஜிட்டல் இந்தியாவின் போலிஸ். உலகம் முழுவதும் அறியும் வரை பகிருங்கள்.😡 pic.twitter.com/rUfzC6Kqds
— fizal (@fiz527) August 6, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவில் துப்பாக்கி காண்பிக்கும் காவலரின் சட்டையில் name badge இடம்பெறவில்லை. அதுமட்டுமின்றி உடன் இருக்கும் காவலர்களில் ஒருவர் வெள்ளை நிற ஷுவும், மற்றொருவர் காவல்துறை தொப்பி அணிவதற்குப் பதிலாக வேறொரு தொப்பியையும் அணிந்திருப்பதைக் காண முடிகிறது.
அந்த வீடியோவின் கீ ஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில் அது ஒரு குறும்படம் என்பதை அறிய முடிந்தது. ‘Vipin Pandey Entertainment Production’ என்னும் யூடியூப் பக்கத்தில் கடந்த மாதம் (ஜூலை) 31ம் தேதி வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
சுமார் 12 நிமிடம் உள்ள அந்த வீடியோவில் பரவக் கூடிய வீடியோ காட்சி 10வது நிமிடம் 40வது வினாடியில் இடம்பெற்றுள்ளது. அக்காட்சி குறும்படத்திற்கு ஏற்ப எடிட் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் நிலைத்தகவலில் (Description) குறும்படத்தில் பணிபுரிந்த நடிகர்கள், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த வீடியோவின் தொடக்கத்தில் ‘இக்கதை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்த எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.
அக்குறும்பட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில காட்சிகள் அந்த யூடியூப் பக்கத்தில் shorts-ஆகப் பதிவிடப்பட்டுள்ளது. அதில் பரவக் கூடிய வீயோவும் இடம்பெற்றுள்ளது.
இவற்றிலிருந்து பாஜக ஆட்சியில் காவல் துறையினரின் நடவடிக்கை எனப் பரவும் வீடியோ ஒரு குறும்படத்தில் இடம்பெற்ற காட்சி என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், பாஜகவின் 9 ஆண்டுக் கால ஆட்சியில் காவல் துறையினரின் நடவடிக்கை எனப் பரவும் வீடியோ குறும்படம் ஒன்றில் இடம்பெற்ற காட்சிகள் என்பதை அறிய முடிகிறது.