This article is from Feb 22, 2021

பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவா ?

பரவிய செய்தி

17-2-2021 பெட்ரோல் விலை, நன்றாக பாருங்கள் எந்த மாநிலங்களில் பெட்ரோல் விலை எவ்வளவு என்று..

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மீது விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்து வருகையில், இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களுக்கும், பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள பெட்ரோல் விலை வேறுபாடு என விலைப்பட்டியல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 17-ம் தேதி நிலவரப்படி பாஜக ஆளும் மாநிலங்களான, அருணாச்சலப் பிரதேசத்தில் 84.15ரூ, அசாம் 86.44ரூ, கோவா 86.88ரூ, ஹிமாச்சல் பிரதேசம் 87.55ரூ, குஜராத் 87.67ரூ, ஹரியானா 87.67ரூ, உத்தரப் பிரதேசம் 87.97ரூ, உத்தரகாண்ட் 88.64ரூ மற்றும் காங்கிரசின் ராஜஸ்தானில் 96.01ரூ, பாண்டிச்சேரியில் 91.16ரூ, கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளாவில் 90ரூ, திரிணாமுல் காங்கிரசின் மேற்கு வங்கத்தில் 90.78ரூ, சிவசேனாவின் மகாராஷ்ட்ராவில் 96.27ரூ, அதிமுகவின் தமிழ்நாட்டில் 92.15ரூ, தெலங்கானாவில் 93.09ரூ, நாகலாந்தில் 93.79ரூ, பீகார் 91.91ரூ, மேகாலயா 91.49ரூ எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

உண்மை என்ன ?  

இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.100ஐ எட்டிய மாநிலங்களில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் இடம் பிடித்தன. இதில், மத்திய பிரதேசம் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் ஆளும் மாநிலமாகும். பிப்ரவரி 22-ம் தேதி நிலவரப்படி, மத்திய  பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.64 ஆக உள்ளது.

தெற்கில் பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் 22-ம் தேதி நிலவரப்படி பெட்ரோல் விலை ரூ93.22 ஆக உள்ளது. அதேபோல், தெற்கில் பாஜக ஆளாத ஆந்திர பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் விலை ரூ.87.24 ஆக உள்ளதைக் குறிப்பிடவில்லை.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மற்றொரு மாநிலமான மணிப்பூரில் பெட்ரோல் விலை ரூ.94.42 ஆக உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து பாஜகவின் முதல்வர் என்.பிரென் சிங் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தில் பெட்ரோல் விலை 91.62ரூ(பிப் 22-ம் தேதி) ஆக உள்ளது. பிப்ரவரி 17-ம் தேதி அம்மாநிலத்தில் பெட்ரோல் விலை 90.57ரூ ஆக இருந்துள்ளது. இதையெல்லாம் விட, தேர்தலில் அதிக இடங்களில் வென்று ஆட்சியில் முக்கிய அங்கம் வகிக்கும் பீகார் மாநிலத்தில் பெட்ரோல் விலை ரூ.91.91 என ஜனதா தளத்தின் பெயரை மட்டும் குறிப்பிட்டு உள்ளனர்.

பிப்ரவரி 16-ம் தேதி நிலவரப்படி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்ட தகவலில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் தொடங்கி மத்திய, மாநில வரி தொகையுடன் சில்லறை விற்பனைக்கு வரும் பெட்ரோல் விலை(டெல்லி) குறிப்பிடப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசலில் அடிப்படை விலையுடன் மத்திய அரசின் கலால் வரி 32.90ரூ மற்றும் டீலர் கமிஷன் உடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசின் வாட் வரியும் சேர்க்கப்டுகிறது. இது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் வேறுபடும். சில மாநிலங்களில் வாட் வரி மட்டும், சில மாநிலங்களில் வாட் வரியுடன் சாலை போக்குவரத்து உள்ளிட்ட பிற செஸ் வரியும், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் குறைந்தபட்ச வாட் வரியுடன் 13.02ரூ என குறிப்பிட்ட தொகையை நிரந்தரமாக சேர்த்து உள்ளனர்.

மாநிலங்களுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி பகிர்வு முறையாக வழங்கப்படுகிறதா என்ற கேள்வி இருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி பங்கை கோரிய வண்ணம் இருப்பதும், அதை மத்திய அரசு தர மறுப்பது எனும் நிலை இருக்கிறது. இதுமட்டுமில்லாமல், ஒரு மாநிலத்திடம் இருந்து 1 ரூபாய் வருவாய் பெறப்பட்டால் மத்திய அரசு எவ்வளவு பைசாவை திரும்ப வழங்குகின்றது என்ற கேள்வியும் இருக்கிறது. அவ்வாறான சூழ்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு குறைவான நிதியும் அதே பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதியும் வழங்கப்படுகிறது என்ற சிக்கலும் உண்டு. 2018-ல் ஒரு ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே தமிழகத்திற்கு திருப்பி அளிக்கப்பட்டது.

ஆக, தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி மூலம் வரவேண்டிய பணமும் சரியாக வருவதில்லை மற்றும் தமிழகம் 1ரூ வருவாய் அளித்தால் திரும்ப 20 பைசா, 40 பைசா அளவிற்கே திருப்பி அளிக்கப்படுகிறது. இப்படி இருக்கையில், தமிழக அரசு வருவாய்க்கு பெரும் பகுதி பெட்ரோல், டீசல் வரி மற்றும் டாஸ்மாக் போன்றவற்றின் மூலம் கிடைப்பதையே எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆக, பாஜக ஆளும் மாநிலங்களுக்கும், பாஜக ஆளாத மாநிலங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வெறும் பெட்ரோல் விலையை மட்டும் வைத்து ஒப்பிட முடியுமா. அதிலும், பாஜக ஆளும் மாநிலங்கள் சிலவற்றை மறைத்து ஒப்பிட்டு இருக்கிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவாகவும், மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை என ஒப்பிட்டு காண்பித்து இருக்கும் பட்டியலில் பெட்ரோல் விலை அதிகம் உள்ள பாஜக ஆளும் பல மாநிலங்களின் பெயரை சேர்க்காமல் மறைத்து உள்ளனர். அதேநேரத்தில், பாஜக ஆளாத பெட்ரோல் விலை குறைவாக உள்ள மாநிலத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader