இந்திரா காந்தி ஹிஜாப் அணிந்து இருப்பதாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !

பரவிய செய்தி
இந்திரா கான் ஹிஜாப் & புர்கா அணிந்து இருக்கிறார். ராகுல் காந்தி தொப்பி அணிந்து இருக்கிறார். இவர்கள் ஒட்டுமொத்த இந்துக்களையும் முட்டாளாக்கி உள்ளனர்.
மதிப்பீடு
விளக்கம்
நாடாளுமன்றத்தில் அதானி-ஹிண்டன்பெர்க் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிக் கொண்டிருந்த வேளையில், ராகுல் காந்தி குடும்பத்தினர் ஏன் நேருவின் பெயரை சேர்க்கவில்லை என்கிற கேள்வியை பிரதமர் மோடி எழுப்பியது விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஹிஜாப் அணிந்து இருப்பதாகவும், அவரது பேரன் ராகுல் காந்தி தொப்பி அணிந்து இருப்பதாகவும் கூறி இப்புகைப்படத்தை பாஜகவினர் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.
— க ரு ட ன் 👁👁 (@Third_Eye_In) February 16, 2023
ஜஹாங்கீர் பெரோஸ் கண்டியின் மனைவி ஹிஜாப், புர்கா அணிவதில் தவறு என்ன? ஆமாம் காந்தியின் நிஜ வாரிசுகள் யாரும் காந்தி பேரைக்கொண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வரவில்லையே ஏன்? https://t.co/7xz4n8bBMu
— செந்தமிழ் பைந்தமிழ் (@ChildMin2) February 16, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2009ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி இந்திரா காந்தியை நினைவுப்படுத்தும் வகையில் இந்தியா டைம்ஸ் இணையதளத்தில் வெளியிட்ட கட்டுரையில், வைரல் செய்யப்படும் இந்திரா காந்தி படத்துடைய முழுமையான புகைப்படத்தை பதிவிட்டு உள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் பிரதமர் இந்திரா காந்தி, மருமகள் சோனியா காந்தி மற்றும் குழந்தை ராகுல் இருப்பதாக புகைப்படத்தின் கீழே குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேற்கொண்டு தேடுகையில், டைம்ஸ் குழுமத்தின் Timescontent இணையதளத்தில், 1971ம் ஆண்டு டெல்லி இல்லத்தின் முன்பாக எடுக்கப்பட்ட முழுமையான படம் கிடைத்தது. அதில், இந்திரா காந்தி புடவை அணிந்து, மேற்சட்டையும் அணிந்து இருக்கிறார். அவர் அணிந்து இருக்கும் புடவை நிறத்திலேயே இருக்கும் துணியை தலையில் ஸ்கார்ப் போன்று அணிந்து இருப்பதை தெளிவாய் பார்க்க முடிகிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தன்னுடைய புடவையின் பகுதியை தலையில் ஸ்கார்ப் போன்று(முக்காடு) அணியும் வழக்கம் கொண்டவர். பெரும்பாலான புகைப்படங்களில் அவ்வாறான தோற்றத்திலேயே காணப்படுவார். வடஇந்தியாவில் உள்ள இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் தற்போதும் அவ்வாறான பழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர்.
இந்திரா காந்தியின் முழுமையான படத்தில் இருந்து அவர் மேற்சட்டை அணிந்து இருக்கும் பகுதியை மட்டும் வெட்டி எடுத்து பர்தா, ஹிஜாப் அணிந்து இருப்பது போன்று தவறாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : தன் கணவர் முஸ்லீம் என்பதால் இந்திரா காந்தி மதம் மாறினாரா ?
மேலும் படிக்க : இந்திரா காந்தியுடன் இருப்பது அவர் கணவரின் தந்தை யூனிஸ் கானா ?
இந்திரா காந்தியை முஸ்லீம் என வதந்தி பரப்புவது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக பலமுறை இந்திரா காந்தியையும், அவரது கணவரையும் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள், மதம் மாறினார்கள் என வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளன. அதுகுறித்தும் நாம் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், இந்திரா காந்தி ஹிஜாப் மற்றும் புர்கா அணிந்து இருப்பதாக பாஜகவினர் பரப்பும் தகவல் வதந்தி. வைரல் செய்யும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.