மோடி ஆட்சியில் குண்டு வெடிப்பே நிகழவில்லை, உசிலம்பட்டியில் திமுக வென்றதில்லை என அண்ணாமலை சொன்ன பொய்கள் !

பரவிய செய்தி
உசிலம்பட்டிக்கு இன்னொரு சிறப்பு உண்டு. திமுக காரர்கள் இங்கு வெற்றி பெற்றது கிடையாது.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு 9 ஆண்டுகளில் இந்தியாவில் குண்டுவெடிப்பு சம்பவங்களே நடந்தது கிடையாது. – பாஜக தலைவர் அண்ணாமலை
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்னும் பெயரில் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 7ம் தேதி (செப்டம்பர்) உசிலம்பட்டியில் நடந்த அந்நிகழ்ச்சியில் பேசுகையில் “உசிலம்பட்டிக்கு இன்னொரு சிறப்பு உண்டு. இங்கு திமுகக்காரர்கள் ஜெயித்தது உண்டா? திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயிக்காத தமிழகத்தில் உள்ள தொகுதி… உசிலம்பட்டி” எனப் பேசியுள்ளார்.
அதே போல் நேற்றைய தினம் (செப்டம்பர், 12ம் தேதி) கொடைக்கானலில் பேசுகையில் “இந்தியா இன்று பாதுகாப்பாக உள்ளதா? 10 ஆண்டுக் காலம் காங்கிரஸ் இருந்த போது இந்தியாவிலே எத்தனை குண்டு வெடித்தது. யோசித்துப் பாருங்கள். எத்தனை குண்டு வெடித்தது. எத்தனை தீவிரவாதிகள் உள்ளே வந்தார்கள். எத்தனை பிரச்சனைகள் நமது நாட்டிலே நடந்தது. பாரதிய ஜனதா கட்சி வந்த பிறகு 9 ஆண்டுகளில் குண்டு வெடித்ததா? வெடிக்காது…ஏன் என்றால் ஆட்சியில் இருப்பவர்கள் தேச பக்தர்கள். நாட்டை பாதுகாக்க வேண்டும் என நினைக்கக்கூடிய தேச பக்தர்கள் ஆட்சியில் இருக்கும் போது எப்படி வெடிக்கும்” என்றும் பேசியுள்ளார்.
உண்மை என்ன ?
உசிலம்பட்டியில் இதுவரையில் திமுக வெற்றி பெற்றதில்லை என அண்ணாமலை பேசியது குறித்துத் தேடினோம். 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி ‘இந்து தமிழ் திசையில்’ உசிலம்பட்டி தொகுதி பற்றிக் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 1957ம் ஆண்டு இச்சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது முதல் 13 சட்டமன்ற தேர்தல்கள் அங்கு நடைபெற்றுள்ளது. அத்தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி 8 முறையும், அ.தி.மு.க 2 முறையும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 முறையும், திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் நடைபெற்ற ஆண்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் பெயரும் கட்சியும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி 1989ம் ஆண்டு உசிலம்பட்டியில் ‘P.N.வல்லரசு’ என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அவர் திமுக கட்சியைச் சேர்ந்தவர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை ‘ஒன் இந்தியா‘, ‘election.in‘ ஆகிய தளங்களிலும் உறுதி செய்ய முடிகிறது. ஆனால், அதற்குப் பிறகு 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் P.N.வல்லரசு என்பவர் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.
அடுத்ததாக பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என அண்ணாமலை பேசியது தொடர்பான விவரங்களைத் தேடினோம். 2016ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி காஷ்மீரில், உரி என்னும் பகுதியில் உள்ள இந்திய இராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 20 இராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர்.
மேலும் 2019, பிப்ரவரி 14ம் தேதி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி துணை இராணுவப் படை வீரர்கள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, புல்வாமா என்னும் இடத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகளின் தாக்குதல் மட்டும் ஒரு நாட்டின் அமைதியைக் குலைத்து விடுவதில்லை. இந்தியாவில் மாற்று மதத்தினர் மீதான வெறுப்பினை வலதுசாரிகள் மற்றும் பாஜகவினர் தொடர்ந்து வளர்த்தும் ஊக்குவித்தும் வருகின்றனர்.
பசு பாதுகாப்பு, லவ் ஜிகாத், பிஸ்னஸ் (Business) ஜிகாத், லேன்ட் (Land) ஜிகாத் என இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மணிப்பூர் கலவரம், ஹரியானா கலவரம் என பாஜக ஆட்சிக் காலத்தில் கலவர சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இவற்றைக் குறித்து அண்ணாமலை பேச முற்படுவாரா?
சமீபத்தில் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த இரயிலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் சேத்தன் சிங் என்பவர் 3 இஸ்லாமியர்களையும், தனது உயர் அதிகாரியையும் சுட்டுக் கொன்றார். வேறு வேறு பெட்டிகளில் பயணம் செய்த இஸ்லாமியர்களைத் தேடித் தேடி கொலை செய்ய வலதுசாரிகளின் வெறுப்பு பிரச்சாரங்களைத் தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்.
கடந்த 5 ஆண்டுகளில் (2017-21) தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிடும் அறிக்கையில் ‘ஜிகாதி பயங்கரவாதிகள்’ (Jihadi Terrorists) மற்றும் ‘இடதுசாரி தீவிரவாதிகள்’ (Left Wing Extremists) நடத்திய தாக்குதல்கள் குறித்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வலதுசாரிகளால் நடத்தப்பட்ட மேலே குறிப்பிட்ட தாக்குதல் சம்பவங்கள் ‘வலதுசாரி பயங்கரவாதிகள்/தீவிரவாதிகள்’ என எந்த பிரிவிலும் குறிப்பிடப்படுவதில்லை. அப்படி ஒரு பிரிவே இல்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது.
வலதுசாரிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் தனிநபர் தாக்குதல்கள், உடைமைகளைச் சேதப்படுத்தியது என்று மட்டும் வகைப்படுத்தப்படுகிறது. ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் NCRB அறிக்கையும் சமீபத்திய ஆண்டு (2022ம் ஆண்டுக்கானது) வெளியிடப்படவில்லை.
இவற்றிலிருந்து உசிலம்பட்டியில் திமுக வெற்றி பெற்றதே இல்லை என்றும், கடந்த 9 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் குண்டு வெடிப்பு சம்பவங்களே நடைபெற்றது இல்லை என்றும் அண்ணாமலை கூறியது தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன பொய்களின் தொகுப்பு
இதற்கு முன்னர் அண்ணாமலை கூறிய பொய்கள் பற்றிய உண்மைகளை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் டெபாசிட் இழந்ததாக அண்ணாமலை சொன்ன பொய் !
முடிவு :
நம் தேடலில், சட்டமன்ற தேர்தலில் திமுக ஒரு முறை கூட உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி பெற்றது கிடையாது என அண்ணாமலை கூறியது உண்மை அல்ல. 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் P.N.வல்லரசு என்பவர் திமுக சார்பில் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல் பாஜக ஆட்சியில் 2016 மற்றும் 2019ம் ஆண்டு பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், மணிப்பூர், ஹரியானா மாநிலங்களில் கலவரங்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது.