பாஜகவை விட்டு நீங்காத தக்ஷிண பிரதேசம்… திருமாவளவன் பேச்சும், ஃபோட்டோஷாப் போஸ்டர்களும் !

பரவிய செய்தி
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு வாக்குகள் கேட்டு தக்ஷிண பிரதேசத்திற்கு வருகை தரும் உத்திரப் பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டின் பெயரை தக்ஷிண பிரதேசம் என மாற்றப் போவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருப்பதாக ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் வைரல் செய்தனர். அது வதந்தி என நாமும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். எனினும், தற்போது வரை அந்த பெயர் பாஜகவை விட்டு நீங்கியபாடில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு தமிழகம் வந்த உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்காக தமிழக பாஜக வெளியிட்ட போஸ்டர் படத்தில் ” தமிழ்நாடு ” என்பதை ” தக்ஷிண பிரதேசம் ” எனக் குறிப்பிட்டதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் போஸ்டர் குறித்து தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தை ஆராய்கையில், ” தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு வாக்குகள் கேட்டு தமிழகம் வருகை தரும் உத்திரப் பிரதேச முதலமைச்சர் திரு.@myogiadityanath அவர்களை வருக! வருக!! என வரவேற்கிறோம் ” என்றே போஸ்டர் வெளியிட்டு இருக்கிறார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு வாக்குகள் கேட்டு
தமிழகம் வருகை தரும்
உத்திரப் பிரதேச முதலமைச்சர்
திரு.@myogiadityanath அவர்களைவருக! வருக!! என வரவேற்கிறோம்#TNElection2021 pic.twitter.com/G0ItDV1y7K
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 31, 2021
தமிழக பாஜக வெளியிட்ட போஸ்டரில் ” தமிழகம் வருகை தரும் ” என்பதை ஃபோட்டோஷாப் மூலம் ” தக்ஷிண பிரதேசத்திற்கு வருகை தரும் ” என வேண்டுமென்றே மாற்றி சமூக வலைதளங்களில் தவறாக வைரல் செய்து இருக்கிறார்கள்.
இதற்கிடையில், ” தமிழகம் இனி தட்ஷிண பிரதேஷ் என்று பெயர் மாற்றம், சென்னை தனி யூனியன் பிரதேசம். இதுதான் பாஜகவின் திட்டம் ” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எம்.பி திருமாவளவன் பேசியதாக இந்து தமிழ் திசையில் வெளியான செய்தியும் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
மார்ச் 28-ம் தேதி சேலத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி பொதுக் கூட்டத்தில் எம்.பி திருமாவளவன், ” அவர்களின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள். படித்து பாருங்கள். தமிழ்நாடு என்கிற பெயரையே மாற்றி விட்டு தட்ஷிண பிரதேஷ் என பெயர் சூட்டப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள். இந்த நாட்டின் பெயரை தமிழ்நாடு என பெயர் சூட்டுவதற்கு பேரறிஞர் அண்ணா எடுத்துக் கொண்ட முயற்சி எவ்வளவு… தமிழ்நாட்டிற்கு அவர்கள் தட்ஷிண பிரதேஷ் என பெயர் சூட்டப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள் ” எனப் பேசியுள்ளார்
இதுகுறித்து, தமிழக பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் அவர்களை தொடர்பு கொண்டு பேசுகையில், ” கண்டிப்பாக இல்லை. அதற்கு மறுப்பு தெரிவித்து நாங்களும் வதந்தி எனப் பதிவிட்டு உள்ளோம் ” எனக் கூறி இருந்தார்.
மேலும் படிக்க : தமிழ்நாட்டின் பெயரை “தக்ஷிண பிரதேஷ்” என்று மாற்றுவோம் என பாஜக அறிவித்ததா ?
பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தமிழகத்தின் பெயரை தக்ஷிண பிரதேஷ் என மாற்றப் போவதாக எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால், அந்த வதந்தி சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டு தற்போது மேடை பேச்சு வரை வளர்ந்து இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், பாஜக தமிழகத்தின் பெயரை தக்ஷிண பிரதேஷ் என மாற்றப் போவதாக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கவில்லை, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வரவேற்கும் போஸ்டரில் தக்ஷிண பிரதேஷ் என ஃபோட்டோஷாப் செய்து வதந்தியை பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.