தமிழக பாஜக பதிவிட்டது கேரளா நிவாரணப் புகைப்படங்களா ?

பரவிய செய்தி
போன வருஷம் கேரளாவில் எடுத்த போட்டோவ வச்சுக்கிட்டு இப்போ சென்னை வெள்ளத்தில் கொடுத்ததா கம்பி கட்டுறானுங்க !
மதிப்பீடு
விளக்கம்
தமிழக பாஜகவின் சமூக வலைதள பக்கங்களில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில் உணவு வழங்கப்பட்டதாக பதிவான சில புகைப்படங்கள் கேரளாவைச் சேர்ந்த பழைய புகைப்படங்கள் என ட்ரோல் செய்யப்படும் மீம்ஸ் மற்றும் பதிவுகள் அதிகம் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
நவம்பர் 8-ம் தேதி தமிழக பாஜகவின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், ” மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது ” என உணவு தயாரிப்பது மற்றும் வாகனத்தில் வைத்து வழங்கும் சில புகைப்படங்கள் வெளியாகியது.
புகைப்படத்தில் இருப்பவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் போல் இருப்பதாகவும், புகைப்படத்தின் கீழே OPPO A9 2020 குறிப்பிட்டு உள்ளதால் அது கடந்த ஆண்டு கேரளாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினர்.
ஆனால், OPPO A9 2020 என்பது செல்போன் மாடலைக் குறிக்கிறது என கமெண்ட்களில் சிலர் பதிவிடுவதையும் பார்க்க முடிந்தது. ஆம், அது செல்போன் மாடலையே குறிக்கிறது. பாஜக பதிவிட்ட புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்த போதும் புகைப்படங்கள் தொடர்பாக பழைய பதிவுகள் ஏதும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளப் பிரிவு தலைவர் சி.டி.நிர்மல் குமார் அவர்களை தொடர்பு கொண்டு பேசுகையில், ” அந்த புகைப்படங்கள் நேற்று(நவ 8) சென்னையில் எடுக்கப்பட்டவையே. செல்போன் மாடலை தவறாகப் புரிந்து கொண்டு பரப்பி வருகிறார்கள். உணவுவை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்பட பேனர் இருக்கும். அந்த புகைப்படங்களை என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளேன் ” என பதில் அளித்து இருந்தார்.
சி.டி.நிர்மல் குமார் ட்விட்டரில், நேற்று இந்தி பிரச்சார சபா அருகில் பாஜகவினர் செய்த நிவாரண பணிகளை, கேரளாவில் எடுக்கப்பட்டது என பொய்யான தகவலை திமுகவினர் பரப்புவதாக புகைப்படங்கள் உடன் பதிவிட்டு இருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் வாகனத்தில் கட்டப்பட்ட பேனரில் ” ஆயிரம் விளக்கு கிழக்கு மண்டல் ” என இடம்பெற்று உள்ளதை பார்க்கலாம்.
முடிவு :
நம் தேடலில், கடந்த ஆண்டு கேரளாவில் வெள்ள நிவாரணப் பணியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது சென்னையில் உணவு வழங்கியதாக தமிழக பாஜக பதிவிட்டுள்ளது என பரப்பப்படும் தகவல் தவறானது. அந்த புகைப்படங்கள் சென்னை ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதியில் தமிழக பாஜக சார்பில் உணவு வழங்கிய போது எடுக்கப்பட்டது என உறுதியப்படுத்த முடிகிறது.