ஆடு, கோழி பலியிட தடை, வட மாநிலத்தவருக்கு 50% இடஒதுக்கீடு என பாஜக அறிவித்ததாக வதந்தி !

பரவிய செய்தி
கோவில்களின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படும். கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவது தடை செய்யப்படும்.
தேசிய ஒற்றுமையை வளர்க்க தமிழ்நாட்டு அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் வட மாநிலத்தவர்க்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையும், தொலைநோக்கு பத்திரம் எனும் வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஜக சொல்லாத சில வாக்குறுதிகளை கூறியது போன்று ஃபோட்டோஷாப் செய்து சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகிறார்கள்.
சில பதிவுகள் ட்ரோல் செய்வதற்கு ஃபோட்டோஷாப் செய்து பரப்பப்பட்டு வந்தாலும், அரசியல் கட்சி சார்ந்தவர்களாலும் ட்ரோல் செய்யப்பட்ட பதிவுகளும் வெளியாகி வருகின்றன. இதுபோன்ற பதிவுகளின் உண்மைத்தன்மை குறித்து யூடர்ன் வாசகர்களின் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது .
கோவில்களில் ஆடு, கோழி பலியிட தடை, தமிழக வேலைவாய்ப்பில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 50% இடஒதுக்கீடு என எந்த அறிவிப்பையும் தமிழக பாஜக வெளியிடவில்லை.
இன்று மாலை தமிழக பாஜகவின் “தேர்தல் அறிக்கை” வெளியிடப்பட உள்ளது!#Thamaraiyin_TholaiNoakku#தாமரையின்_தொலைநோக்கு pic.twitter.com/V1a4Jtlcgw
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 22, 2021
Advertisement
” இன்று மாலை தமிழக பாஜகவின் “தேர்தல் அறிக்கை” வெளியிடப்பட உள்ளது ” என வெளியிடப்பட்ட ஆன்லைன் போஸ்டர் புகைப்படத்தில் மாற்றி மாற்றி போட்டோஷாப் செய்து வதந்தியையும், கிண்டலும் செய்து வருகிறார்கள்.
பாஜக தொலைநோக்கு பத்திரத்தில், ” வெளி மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் வந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான குடியிருப்பு வசதிகள் செய்து தரப்படும் ” என அறிவித்து இருந்தது. இதன் காரணமாக, வெளிமாநிலத்தவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவதாக கூறியது போன்று ஃபோட்டோஷாப் செய்து பரப்புகின்றனர்.
மேலும் படிக்க : தமிழ்நாட்டின் பெயரை “தக்ஷிண பிரதேஷ்” என்று மாற்றுவோம் என பாஜக அறிவித்ததா ?
இதற்கு முன்பாக, தமிழ்நாட்டின் பெயரை “தக்ஷிண பிரதேஷ் ” என்று மாற்றுவோம் என பாஜக அறிவித்ததாக ஃபோட்டோஷாப் செய்த புகைப்படத்தை வைரல் செய்தனர்.
முடிவு :
நம் தேடலில், கோவில்களில் ஆடு, கோழி பலியிட தடை, தமிழக வேலைவாய்ப்பில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 50% இடஒதுக்கீடு என பாஜக அறிவித்ததாக பரப்பப்படும் புகைப்படங்கள் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டவை என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.