கிண்டலுக்குள்ளான பாஜகவினர் பதாகை.. பாஜகவினர் மறுத்து பரப்பும் மற்றொரு படம்.. எது உண்மையான பதாகை ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என திமுக அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜூன் 13-ம் தேதி(நேற்று) பாரதிய ஜனதா கட்சி சார்பில், ” தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ” திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் மாஸ்க் அணிந்து கையில் வைத்திருந்த ஆர்ப்பாட்ட பதாகையில், ” தமிழக அரசே மது கடையை திறக்தே மக்களை கொல்தே கொரோனவுக்கு துணை போதே. ஆர்ப்பாட்டம் மாவட்ட துணை தலைவர் S.V.மல்லிகா. P.J.B 13.6.2021 ஞாயறு ” என பிழைகள் உடன் இடம்பெற்று இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது.
இப்படி ட்ரோல் செய்யப்பட்ட புகைப்படம் ஆனது திமுகவினரால் ஃபோட்டோஷாப் மூலம் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படம் என்றும், உண்மையான படம் இதுவே என ஒப்பீடு இப்புகைப்படத்தை பாஜகவினர் பகிர்ந்து வருகிறார்கள். தமிழக பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா கூட இப்புகைப்படத்தை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
உண்மை என்ன ?
உண்மையான படம் என பாஜகவினரால் பதிடப்பட்டு வரும் புகைப்படத்தில், அவரின் கை விரல்கள் மீதும் பேப்பர் அமைந்துள்ளது. ஆனால், முன்பு பரவிய வைரல் படத்தில் அப்படி ஏதும் இல்லை, விரல்கள் நன்றாக தெரிவதை பார்க்கலாம். இரண்டிலுமே BJP என்பது தவறாக இருக்கிறது.
இதுகுறித்து மேற்கொண்டு தேடுகையில், பாஜகவின் சேலம் மாவட்டம் எனும் முகநூல் பக்கம் ஒன்றில், ஜூன் 13-ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் பலரும் டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிராக பதாகையுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன.
அந்த முகநூல் பக்கத்தில் தேடுகையில், அதே பெண்ணின் மற்றொரு புகைப்படம் பகிரப்பட்டு இருக்கிறது. அதில், பாஜகவினர் பரப்பிய பதாகை இல்லை, முன்பு பரவிய பதாகையில் இருந்த அதே பிழைகள் உடன் கூடிய வாசகமே இடம்பெற்று இருக்கிறது, BJP என்பது மட்டும் மாறி இருக்கிறது.
இவ்விரு புகைப்படமுமே உண்மையானது தான். BJP என்பது தவறாக இருந்ததால் சிறிது நேரம் கழித்து அதை மாற்றி வேறொரு புகைப்படம் எடுத்துள்ளார். P என்பதை B என மாற்றியது தெளிவாய் தெரிகிறது. அவரின் மாஸ்க்கும் மாற்றி இருக்கிறது.
தமிழக பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா தன் முகநூல் பக்கத்தில், திமுகவினரின் எடிட் புகைப்படம் மற்றும் இதுவே உண்மையான புகைப்படம் என திருக்குறள் உடன் பதிவிட்ட பதிவை நீக்கி இருக்கிறார். எனினும், அந்த பதிவில் இடம்பெற்ற புகைப்படம் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
முடிவு :
நம் தேடலில், பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற பதாகையில் திமுகவினர் ஃபோட்டோஷாப் செய்து வைரல் செய்ததாகவும், உண்மையான புகைப்படம் இதுவே என பாஜகவினரால் பரப்பப்படும் புகைப்படமே ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது. ஃபோட்டோஷாப் மூலம் எடிட் செய்து மாற்றிய புகைப்படத்தை பாஜகவினர் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.