ராமர் கோவில் கட்ட பணம் தராததால் பாஜகவினர் கடையை சூறையாடும் வீடியோவா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பணம் கேட்டு தராததால் பாஜகவினர் கடைகளை சூறையாடியதாக, இனிப்பு கடையில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் லட்டுகளை எடுத்து சிலர் சாலையில் வீசும் 30 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன்பாக ” ராமர் கோவில் கட்ட துட்டு குடுங்கடான்னா, ஸ்வீட்டை குடுக்குறானுங்க சார் ராஸ்கல்ஸ். ராமருக்கு சுகர் வந்துராது ? ” எனும் நிலைத்தககவல் உடன் இந்த வீடியோவை பரப்பத் துவங்கினர். ஆகையால், வைரல் செய்யப்படும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அறிய தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
அயோத்தியில் லட்டு கடை சூறையாடப்பட்டது குறித்து தேடுகையில், உத்தரப் பிரதேசம் அயோத்தியாவில் உள்ள ஹனுமன் கார்ஹி கோவில் பகுதியில் அர்ச்சகர்கள் கோபத்துடன் லட்டுகளை சாலையில் வீசியதாக ஜூலை 1-ம் தேதி தி லாஜிக்கல் இந்தியன் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.
” அயோத்தியில் உள்ள ஹனுமன் கார்ஹி கோவில் பகுதியில் பிரசாதம் வழங்குவதை கொரோனா காரணமாக அயோத்தி மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. கோவில் வெளியே உள்ள கடையில் பழைய லட்டுகளை வழங்குவதை அர்ச்சகர்கள் எதிர்த்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அர்ச்சகர்கள், சாதுக்கள் குழுவினர் கடையில் இருந்த லட்டுகளை சாலையில் வீசத் துவங்கி இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.
லட்டுகளை சாலையில் வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அங்குள்ள வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை மூடி உள்ளனர். சாலையில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபடத் துவங்கியதாக ” ஜீநியூஸ் உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பணம் கேட்டு தராததால் கடையை சூறையாடிய பாஜகவினர் என பரப்பப்படும் வீடியோ தவறானது. அயோத்தியாவில் உள்ள ஹனுமான் கார்ஹி கோவில் பகுதியில் உள்ள கடைகளில் பழைய லட்டுகளை பக்தர்களுக்கு வழங்குவதாக குற்றம்சாட்டி அர்ச்சகர்கள் மற்றும் சிலர் சேர்ந்து லட்டுகளை சாலையில் வீசி இருக்கிறார்கள் எனத் தெளிவாய் அறிய முடிகிறது.