This article is from Apr 29, 2018

கழிப்பறை கட்டியதில் விளம்பரம் தேடிய பாஜக கட்சி.!

பரவிய செய்தி

தேசிய ஜனநாயக கூட்டணியான பாஜக அரசால் கர்நாடகாவின் வளர்ச்சி திட்டத்தில் 4 ஆண்டுகளில் 2,100 கோடி மதிப்பில் 34 லட்ச கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் 4 ஆண்டுகளில் 350 கோடி மதிப்பில் 20 லட்ச கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது என பிஜேபி கட்சி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

கர்நாடகாவில் கட்டப்பட்ட கழிப்பறைகள் பற்றி பாஜக வெளியிட்ட புள்ளி விவரங்கள் தவறானவை.

விளக்கம்

கர்நாடகாவில் சட்டப் பேரவைக்கான தேர்தல் வெகு விரைவில் நடக்கவிருப்பதால் இரு தேசிய கட்சிகளுக்கும் இடையே பலத்தப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் கர்நாடகா மாநிலத்திற்கு மோடி அரசால் செய்யப்பட்ட நன்மைகள், வளர்ச்சி திட்டங்கள் என பல தகவல்கள் பிஜேபி கட்சியின் சார்பாக வெளியிடப்படுகிறது. அதில், கழிப்பறை அமைத்தது குறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவு சர்ச்சைக்குரியதாக உருவெடுத்துள்ளது.

ஏப்ரல் 26, 2018-ல் @bjp4india என்ற பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 4 ஆண்டுகள் ஆட்சியில் 350 கோடி மதிப்பில் 20 லட்ச வீட்டுக் கழிப்பறைகள்  மட்டுமே கட்டப்பட்டன. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியின் 4 ஆண்டுகள் ஆட்சியில் 2,100 கோடி மதிப்பில் 34 லட்ச வீட்டுக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்றும்,  கர்நாடகாவின் வளர்ச்சி திட்டத்தில் மோடி அரசு விரைவாக செயல்படுகிறது என்று புள்ளி விவரப் படமொன்றும் இணைத்து பதிவிட்டுள்ளனர்.

பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சியின் ஆட்சியின் போதும் நாடு முழுவதும் உள்ள தொலைதூர கிராமங்களில் வீட்டுக் கழிப்பறை அமைப்பதற்கான திட்டங்கள் செயல்பட்டுள்ளன. இரண்டையும் ஒப்பீடு செய்ய முடியாது. ஏனெனில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் “நிர்மல் பாரத் அபியான்” என்ற திட்டம் கிராமப்புறங்களில் கழிப்பறைகள் அமைக்கும் திட்டம். எனவே கிராமபுறங்களில் அமைக்கப்பட்ட கழிப்பறைகளை மட்டும் வைத்து கணக்கிடலாம்.

இத்திட்டத்தின் மூலம் 2009-2014க்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் கர்நாடகாவில் 49 லட்ச வீட்டுக் கழிப்பறைகளை கிராமப்புறங்களில் கட்டியுள்ளனர்.  58 லட்ச வீட்டுக் கழிப்பறைகள் கட்ட திட்டமிட்டு 49 லட்ச கழிப்பறைகள் கட்டப்பட்டதாக ராஜ்ய சபையில் செப்டம்பர் 30, 2014 கூறியுள்ளனர். எனவே பாஜக கூறியது போன்று 20 லட்சம் அல்ல 49 லட்சம்!  பாஜக ஆட்சியில் கர்நாடகாவில் 34 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டதாக கூறுவதை உண்மை என ஏற்றுக்கொள்ளலாம். சரியாக  37 லட்ச வீட்டுக் கழிப்பறைகள் கர்நாடகாவின் கிராமப்புறங்களில் கட்டப்பட்டுள்ளன.

2009-ல் தொடங்கப்பட்ட “நிர்மல் பாரத் அபியான்”  திட்டத்தில் இந்திய அளவில் 12.7 கோடி கழிப்பறைகள் கட்ட தீர்மானித்து 9.7 கோடி வீட்டுக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் தொடங்கப்பட்ட “ தூய்மை இந்தியா திட்டம் ” மூலம் 2018 வரையில் 7 கோடி கழிப்பறைகள் கிராமப்புறங்களிலும், 46 லட்ச கழிப்பறைகள் நகர்ப்புறங்களிலும் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

கழிப்பறை கட்ட வழங்கப்படும் தொகை :

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வீட்டுக் கழிப்பறை கட்ட 350 கோடி செலவிட்டது என்பது பொய்யான தகவல். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் “ நிர்மல் பாரத் அபியான்” திட்டம் மூலம் 2009-2014-ல் 502.15 கோடி( மத்திய, மாநில அரசுகள்) செலவிட்டுள்ளனர். பாஜக “ தூய்மை இந்தியா அபியான்” திட்டத்தின் மூலம் 2014-2018-ல் 1,835 கோடி செலவிட்டுள்ளனர்.

பாஜக கட்சியின் கர்நாடகாவில் கட்டப்பட்ட கழிப்பறை பற்றிய புள்ளி விவரத்தை காங்கிரஸ் கட்சியும் தனது ட்விட்டரில், ஐ.முகூ ஆட்சியில் ஒரு கழிப்பறைக்கு ரூ.1750 , தே.ஜ.கூ ஆட்சியில் ஒரு கழிப்பறை கட்ட ரூ. 6177 செலவிட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் 502.15 கோடி செலவில் 49 லட்சம் கழிப்பறை கட்டப்பட்டதால் ஒரு கழிப்பறைக்கு ரூ.1024.  பாஜக ஆட்சியில் 1835 கோடி செலவில் 37 லட்சம் கழிப்பறை கட்டப்பட்தால் ஒரு கழிப்பறைக்கான செலவு ரூ.6177 .

ஆனால், நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின்படி ஒரு கழிப்பறை கட்ட தோராயமான மதிப்பு 10,000 ரூபாய், அதில் மத்திய அரசு(60%), மாநில அரசு (20%), பயன் பெறுபவர் (20%) பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன்படி, காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகாவில் கட்டப்பட்ட 49 லட்ச கழிப்பறைகளுக்கு 8000 ரூபாய் மதிப்பு வைத்து பார்த்தால் மத்திய, மாநில அரசுகள் 3,920 கோடி செலவிட்டிருக்க வேண்டும். இது அரசுகள் வழங்கிய 502 கோடியை விட 8 மடங்கு அதிகம்.

பாஜக ஆட்சியில் “ தூய்மை இந்தியா அபியான் ” திட்டத்தில் கழிப்பறை கட்ட வழங்கும் தொகை 12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு 60%  மற்றும் மாநில அரசு 40% வழங்கும். அதன்படி, 37 லட்ச கழிப்பறைக்கு 7,200 ரூபாய் வீதம் 2664 கோடியை மத்திய அரசு வழங்கிருக்க வேண்டும். இது மத்திய அரசு வழங்கிய 1,835 கோடியை விட அதிகம்.

கழிப்பறை வசதியின்றி வசித்து வரும் மக்களுக்கு இலவச வீட்டுக் கழிப்பறை அமைத்து தருவது அரசாங்கத்தின் கடமை. ஆனால் இங்கோ செய்த கடமையை வைத்து அரசியல் லாபம் பார்க்க முனைகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் பொழுது ஜோக்கர் படத்தில் இடம்பெற்ற கழிவறை தொடர்பான காட்சிகளே நினைவிற்கு வருகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader