இரத்த சேவைக்கு ” Blood on call 104 ” திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதா ?

பரவிய செய்தி
மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்திய திட்டம் Blood on call 104. இதில் 104 என்ற எண்ணுக்கு போன் செய்தால் நீங்கள் கேட்கும் குருதி வகையில் இரத்தம் வரும். இதற்கு கட்டணமாக ரூ.450 வசூலிக்கப்படுகிறது. போக்குவரத்து கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. தயவு செய்து அதிகமாக பகிரவும்.
மதிப்பீடு
சுருக்கம்
எது உண்மை : ” blood on call ” எனும் திட்டத்தில் 104 எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் கேட்கும் வகையில் இரத்தம் அனுப்பி வைப்பது 2014-ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்பட்டது.
எது தவறு : மத்திய அரசு திட்டம் எனக் கூறுவது.
விளக்கம்
2014 ஆம் ஆண்டு ஜனவரியில் மகாராஷ்டிரா மாநில அரசு ” ஜீவன் அம்ருதா சேவா ” அல்லது ” blood on call ” எனும் திட்டத்தை அறிமுகம் செய்தனர். இந்த திட்டத்தின் படி அவசர நிலையில் இரத்தம் தேவைப்படும் நபர்கள் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் அவர்கள் இருக்கும் மாவட்ட இரத்த வங்கியில் இருந்து தேவையான இரத்தம் அனுப்பி வைக்கப்படும் .
இதன் செயல்முறைக்கு புனேவில் உள்ள ” அணுத் சிவில் ஹாஸ்பிடலில் ” அழைப்புகளை பெறும் கால் சென்டர் அமைப்பு அமைக்கப்பட்டன. 104 எண்ணிற்கு வரும் அழைப்புகள் இந்த இடத்தில் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் இருக்கும் மாவட்டத்தின் ரத்த வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக இரத்தமானது கொண்டு சேர்க்கப்படும்.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு பேசிய அம்மாநில முதல்வர் பிரித்வி சவான், ” இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த திட்டத்தை மகாராஷ்டிரா அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. 40 கி.மீ சுற்றி உள்ள பகுதிகளுக்கு பிரத்யேகமாக குளிர் பெட்டிகள் கொண்ட மோட்டார் சைக்கிளில் இரத்தமானது கொண்டு சேர்க்கப்படும் ” எனத் தெரிவித்து இருந்தார்.
இந்த திட்டத்தில், கொண்டு வரப்படும் இரத்த பாட்டில் ஒன்றுக்கு 450 ரூபாயும் உடன் சேர்க்க வேண்டிய இடம் 10 கி.மீ-க்குள் இருந்தால் போக்குவரத்து கட்டணம் 50 ரூபாயாகவும், 11-40 கி.மீ ஆக இருந்தால் போக்குவரத்து கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.
” ஜீவன் அம்ருதா சேவா ” எனும் திட்டம் மகாராஷ்டிரா மாநில அரசால் 2014 ஜனவரியில் கொண்டு வரப்பட்ட திட்டம். மத்திய அரசின் புதிய திட்டம் அல்ல.
தமிழ்நாட்டில் 104 சேவை :
2014-ல் இருந்து தமிழ்நாட்டில் 104 என்ற உதவி எண்ணை கொண்டு மருத்துவ சேவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் 104 மருத்துவ உதவி சேவையின் மூலம் உடல்நலம், மருத்துவம் தொடர்பான தகவல்கள் பெறுவதற்கு, மனநல ஆலோசனை பெறுவதற்கு, புகார் தெரிவிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.