இரத்தத்திற்கும் ஜி.எஸ்.டி வரியா ?

பரவிய செய்தி
இந்தியாவில் இரத்தத்திற்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. பிரதமர் மோடி ஆட்சியில் உயிர் வாழத் தேவையான இரத்தத்தையும் ஜி.எஸ்.டி வரி செலுத்தி தான் வாங்க வேண்டும்.
மதிப்பீடு
சுருக்கம்
இரத்தத்திற்கு ஜி.எஸ்.டி வரி ஏதும் விதிக்கப்படவில்லை. எனினும், மறைமுகமாக இரத்தத்திற்கு வரி விதிக்கப்படுகிறது என்பது மட்டும் உண்மை.
விளக்கம்
ஜி.எஸ்.டி சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்திய பின் நாட்டில் பல தொழில்கள் பாதிக்கப்பட்டன மற்றும் பொருட்களின் விலைகள் வரி சேர்க்கப்பட்டதால் விலையில் மாற்றம் அதிகரித்தது. மேலும், மருத்துவத்துறையில் உயிர் காக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரியால் மருந்துகளின் விலை அதிகரித்து, மருத்துவம் சார்ந்த பொருட்களின் விலையும் அதிகரித்தன. மருத்துவத்துறையில் ஜி.எஸ்.டி வரி 0 முதல் 18 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது.
இதில், பெரிதும் பயன்பாட்டில் உள்ள இரத்ததிற்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கூறப்படுகிறது. ஜி.எஸ்.டியால் முழுமையான இரத்தமானது ரூ.1050 இருந்து தற்போது ரூ.1250 க்கு விற்கப்படுகிறது. உயிரைக் காப்பாற்ற பயன்படும் இரத்தத்திலும் ஜி.எஸ்.டி வரி விதிப்பது தவறான செயல் என்று கண்டனம் எழும் நேரத்தில் இரத்ததிற்கு ஜி.எஸ்.டி வரி இல்லை என்பதை உணர வேண்டும்.
ஆம், சுகாதாரம் சார்ந்த பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி பற்றி பார்க்கையில். “ கருத்தடை சார்ந்த பொருட்கள் மற்றும் இரத்தத்திற்கு 0% ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளனர். மருந்துகள், விலங்கு மற்றும் மனித இரத்த தடுப்பு மருந்துக்கு 5% ஜி.எஸ்.டி வரியும், ஆயுர்வேத மருந்து, சித்தா, யுனானி உள்ளிட்டவைகளை சார்ந்த மருந்துகளுக்கு 12% மற்றும் கிருமிநாசினிகளுக்கு 18% ஜி.எஸ்.டி வரியும் விதிக்கப்பட்டுள்ளது “
இரத்தத்திற்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவில்லை என்றுக் கூறினாலும் அதன் மீது மறைமுகமாக வரிகள் விதிக்கப்பட்டு விலையில் மாற்றம் வருகிறது. இரத்தத்தை சேகரித்து வைக்கும் உறைகள் உள்ளிட்ட அவை சார்ந்த பொருட்களுக்கு 12% ஜி.எஸ்.டி வரி தற்போது விதிக்கப்படுகிறது. இரத்த சேமிப்பு பைகளின் விலையுடன் 12% வரி இணைவதால் இரத்தத்தின் விலை அதிகரிக்கிறது. platelet carry bag மற்றும் HB KIT உள்ளிட்டவை 12%-ல் இருந்து 18% ஆக உயர்ந்துள்ளது.
தன்னார்வு இரத்த வங்கியைச் சேர்ந்த ரோஹித் பால்லா கூறுகையில், “ புதிய வரி விதிப்பு முறையால் இரத்தம் சார்ந்த பொருட்களும் ஜி.எஸ்.டி வரியுடன் வாங்க வேண்டியுள்ளது. ஜி.எஸ்.டி வரியால் இரத்த சேமிப்பு உறைகள் ரூ.1,050 முதல்ரூ.1,350 வரை அதிகரித்து உள்ளது. நிதி அமைச்சகத்தால் இரத்தம் வைத்திருக்கும் உறைகளுக்கு 12% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது ” என்று தெரிவித்துள்ளது.
“ உலக சுகாதார அமைப்பின் கருத்துக்கணிப்பு படி 2017 ஆம் ஆண்டில் 2903 இரத்த வங்கிகள் இந்தியாவில் உள்ளன அல்லது 10 லட்சம் மக்களுக்கு 3 வங்கிகள் உள்ளன. பெரும்பாலான ஏழை மக்கள் தனியார் இரத்த வங்கிகளை நாடி உள்ளனர். தனியார் இரத்த வங்கிகள் இரத்தத்தை அதிக விலைக்கு விற்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர் “
அதற்கு காரணம் ஜி.எஸ்.டி வரி விதிப்பு என்றும் கூறலாம். இந்தியாவில் இரத்தத்திற்கு ஜி.எஸ்.டி வரி இல்லை என்பது உண்மையாக இருந்தாலும், அதற்கு பயன்படுத்தும் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரியால் அதன் விலையும் அதிகரிக்கும் என்பதை உணர வேண்டும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.