This article is from Oct 28, 2018

நீல நிறத்தில் மாறிய நாய்கள் | எங்கு , எதனால் ?

பரவிய செய்தி

நீல நிற நாய்கள் மும்பை நகரத்தைச் சுற்றி வருகின்றன. அதன் நீல நிறத்திற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் துயரமானவை.

மதிப்பீடு

சுருக்கம்

தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் சாயங்கள் கசாதி ஆற்றில் கலந்துள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்திய தொழிற்சாலையின் விளைவால் நாயின் வெண்ணிறங்கள் நீல நிறமாக மாறியுள்ளது.

விளக்கம்

மும்பை நகரத்தைச் சுற்றியுள்ள பகுதியில் நீல நிறத்தில் நாய்கள் சுற்றி திரிவதாக சமூக வலைத்தளத்தில் பரவிய நீல நிற நாயின் புகைப்படம் அனைவரையும் கவனிக்க வைத்தது. எதனால் நாய்கள் இவ்வாறு காணப்படுகிறது என்ற காரணங்கள் வருந்ததக்கவையாகும்.

நவி மும்பையின் தலோஜா தொழிற்துறை பகுதியில் அமைந்துள்ள உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய சுத்திகரிக்கப்படாத கழிவுகள் மற்றும் சாயங்கள் கசாதி ஆற்றில் கலந்து நீர்நிலையை மாசுப்படுத்தி உள்ளது. இதனால் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பாதிப்புகள் உண்டாகின.

கழிவுகள், சாயங்கள் கலந்த கசாதி ஆற்றில் விலங்குகள் நீர் அருந்துவது, நீந்தி செல்வதால் அவைகளுக்கு பாதிப்புகள் உண்டாகின. இதில், சாயத்தால் வெண்ணிற நாய்கள் நீல நிறத்தில் மாறின. அப்பகுதியில் 11 நாய்கள் நீல நிறத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது.

தெருக்களில் நீல நிறத்தில் நாய்கள் சுற்றித் திரிவது முதலில் ஆகஸ்ட் 11-ம் தேதிதான் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின், தொழிற்சாலையில் இருந்து கழிவுகள் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது, அந்நீரை அருந்தும், நீந்தும் விலங்குகளுக்கு இவ்வாறான பாதிப்பு ஏற்படுவதாக மகாராஷ்டிரா மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு உள்ளூர் வாசிகள் புகார் அளித்தனர்.

நவி மும்பை பகுதியின் விலங்கு நல அமைப்புகளும் நீல நிற நாய்களின் புகைப்படங்களை வெளியிட்டு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலையைக் கண்டித்து பதிவிட்டனர்.

மக்களின் புகாரையடுத்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் தொழிற்சாலைகளில் சோதனை நடத்திய பின் காற்று மற்றும் நீரை மாசுப்படுத்தி நாய்கள் நீல நிறத்தில் மாற காரணமாகிய ஆலைக்கு சீல் வைக்க உத்தரவு பிறப்பித்தனர்.

அப்பகுதியில் நீல நிறத்தில் மாறிய 11 நாய்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. அவைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டதா என அறிய பரிசோதனைகள் செய்தனர் மற்றும் அவற்றின் மேலே உள்ள சாயம் நீங்கக் கூடியது என்றே கூறியுள்ளனர் கால்நடை மருத்துவர்கள்.

தலோஜா தொழிற்துறை பகுதியில் கெமிக்கல், மருந்து, உணவு, இன்ஜினியரிங் செயல்முறை கொண்ட 977 தொழிற்சாலைகள் உள்ளதாக ஆர்.டி.ஐ தகவல் மூலம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சாலை கழிவு :

கழிவுகள், சாயத்தை தகுந்த சுத்திகரிப்பு செய்வதில் பெரும்பாலான தொழிற்சாலைகள் தோல்வியை சந்திக்கின்றன. தொழிற்சாலைகளின் அலட்சியம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.

மனிதர்களின் வளர்ச்சி பிற உயிரினங்களை பாதிக்கிறது என்பது உண்மையே. விலங்குகள், பறவைகள் என பல ஜீவராசிகளும் பூமியில் வசிக்கின்றன. நம்முடைய எதிர்மறை செயல்பாடுகள் பிற உயிரினங்களை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்கிறது. பிற உயிர்கள் நலம்பெற சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் வைத்திருத்தல் அவசியம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader