பெங்களூர் அரசு பேருந்து நடத்துனர் UPSC தேர்வில் வெற்றி பெற்றாரா ?

பரவிய செய்தி
பெங்களூர் அரசு பேருந்தில் கண்டக்டராக இருந்த மது என்பவர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிக்கான UPSC மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
பெங்களூரின் அரசு பேருந்தான BMTC-ல் நடத்துனராக பணியாற்றி வரும் மது என்பவர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக மீம்ஸ் பதிவுகள் கடந்த ஜனவரி 30-ம் தேதி முதல் பல மொழிகளில் பரவி வருகிறது.
சாதாரண மக்கள் அரசின் முதன்மை பதவிகளில் தேர்ச்சி பெறும் நிகழ்வுகள் தன்னம்பிக்கை ஊட்டும் விதத்திலும், பாராட்டுகளை பெறும் வகையிலும் அமையும். அவ்வாறே, பெங்களூர் பேருந்து நடத்துனர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றதாக வெளியான செய்தியும் பார்க்கப்பட்டது. ஆனால், அந்த செய்தி உண்மையா என்பதை பலரும் அறியாமல் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
பெங்களூர் அரசு பேருந்து நடத்துனர் மது சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றதாக ஜனவரி 29-ம் தேதி பெங்களூர் மிர்ரர் என்ற இணையதளத்தில் செய்தி வெளியாகியது. அதில், ” 29 வயதான BMTC பேருந்து நடத்துனர் என்.சி மது 2019 ஜூன் மாதம் முதற்கட்ட தேர்விலும், தற்பொழுது ஐஏஎஸ் மெய்ன்ஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். தினந்தோறும் 8 மணி நேர பணிக்கு பிறகு 5 மணி நேர படித்து சிவில் சர்வீஸ் தேர்வில் வென்றுள்ளதாக ” வெளியாகி இருந்தது.
சிவில் சர்வீஸ் தேர்விற்காக நடத்துனர் மது பயிற்சி மையங்களுக்கு செல்லவில்லை. அவரின் சீனியர் அதிகாரிகள் மற்றும் பிஎம்டிசி-யின் நிர்வாக இயக்குனர் சி.ஷிகா ஆகியோர் தேர்விற்கான வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளனர். மெய்ன்ஸ் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து நடத்துனர் மது பெங்களூர் மிர்ரர் செய்திக்கு பேட்டி அளித்து இருந்துள்ளார்.
ஆனால், பெங்களூர் மிர்ரர் இணையதளத்தில் நடத்துனர் மது குறித்து வெளியான செய்தி நீக்கப்பட்டு உள்ளது. நடத்துனர் என்சி மது ஐஏஎஸ் மெய்ன்ஸ் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என ஜனவரி 30-ம் தேதி பெங்களூர் மிர்ரர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது. மேலும், தங்களின் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பதிவிட்டு உள்ளனர்.
We are taking down the story till it becomes clear why he lied to BMTC and us. We would like to apologise to our readers. It was such a story of grit and determination that even the BMTC MD stepped in to help. Alas, it was too good to be true. (2/2)
— Bangalore Mirror (@BangaloreMirror) January 30, 2020
இது குறித்து பெங்களூர் மிர்ரர் ஆசிரியர் ரவி ஜோஷி தன் ட்விட்டர் பக்கத்தில், பெங்களூர் அரசு பேருந்து நடத்துனர் என்சி மது தேர்ச்சி பெற்ற வேறொருவரின் ரோல் நம்பரை தவறாக காண்பித்த காரணத்தினால் அதனை உண்மை என நினைத்ததாக தெரிவித்து உள்ளார்.
I would like to apologise to all our readers. It was such a great story of grit and determination that even the BMTC MD and all his seniors decided to help him crack the interview. Alas, it was too good to be true
— Ravi Joshi (@Joshi_Aar) January 30, 2020
முடிவு :
பெங்களூர் அரசு பேருந்து நடத்துனர் மது சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றதாக வெளியான உறுதிப்படுத்தாத செய்தியால் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறவில்லை. தவறாக வேறொரு தேர்வரின் ரோல் நம்பரை காண்பித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், தவறான செய்தியை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.