This article is from Jan 02, 2019

போகிபீல் திட்டத்திற்கு காங்கிரஸ் தடையா ?| கே.டி ராகவன் பதிவு.

பரவிய செய்தி

இந்தியாவின் மிக நீளமான போகிபீல் பாலம் கடந்து வந்த பாதை. காங்கிரஸ் ஆட்சியில் தடை.

மதிப்பீடு

சுருக்கம்

போகிபீல் பாலத்த்தின் திட்டப் பணிகளுக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டது என கே.டி.ராகவன் கூறியது தவறு.

2007-ல் போகிபீல் பாலத்தின் திட்டத்தை ” தேசியத் திட்டமாக “ அறிவித்தது காங்கிரஸ் அரசு. பாலத்தின் பணிகள் மிகவும் மெதுவாக நடந்ததற்கு செலவு உள்ளிட்ட பல காரணங்கள் இருந்ததாக வடகிழக்கு எல்லை ரயில்வேயின் உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

விளக்கம்

இந்தியாவின் மிக நீளமான ரயில் தடம் மற்றும் சாலை அமைந்த போகிபீல் பாலத்தை டிசம்பர் 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

தேர்தல் நேரம் என்பதால் செய்த பணியுடன் சில தவறான தகவல்களையும் இணைத்து பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கே.டி.ராகவன் முகநூல் பக்கத்தில் இப்படத்தை பதிவிட்டு போகிபீல் திட்டத்திற்கு காங்கிரஸ் அரசில் தடை இருந்ததாக ஓர் தவறான தகவலை குறிப்பிட்டு உள்ளார்.

போகிபீல் பாலம் கடந்து வந்த பாதை :

பிரம்மபுத்ரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் போகிபீல் பாலம் அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல மாநில எல்லையில் அமைந்துள்ளது. 4.94 கி.மீ நீளம் கொண்ட இப்பாலம் மூன்று வழிச் சாலையையும், இரண்டு வழி ரயில் தடத்தையும் கொண்டு ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பாலமாக விளங்குகிறது.

போகிபீல் பாலத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது 1997-98-ல் அன்றைய இந்திய பிரதமராக இருந்த தேவகவுடாவின் ஆட்சியில் என்பதை முதலில் அறிய வேண்டும். இதன் பின் 2002-ல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி திட்டத்திற்கான பணிகளை துவங்கி வைத்தது பிரதமர் வாஜ்பாய் அவர்கள்.

2004-ல் ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் ஆட்சியில் போகிபீல் பாலத்தின் திட்டம் கிடப்பில் போடப்பட்டது என்பது தவறு. 2007-ல் போகிபீல் திட்டத்தின் முக்கியத்துவம் அறிந்த அன்றைய காங்கிரஸ் அரசு அதனை தேசியத் திட்டமாக அறிவித்தது. எனினும், திட்டம் முடிவடைவதற்கான பல காலக்கெடுவை தாண்டி வேகம் எடுக்காமல் இருந்தது.

“ இத்திட்டத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் தூண்களை நிறுவி அணைப் போன்று கட்டுமானப்பணிகளை பாதுகாப்புடன் முடிப்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில், வருடத்தில் நவம்பர் முதல் மார்ச் வரையிலான 4 முதல் 5 மாதங்கள் மட்டுமே பணிகள் நடைபெறும். காரணம், மழைக் காலம் அதிகம் என்பதால் வெள்ளம் அதிகம் இருக்கும். குறைந்த காலத்தில் மிகப்பெரிய கட்டுமான உபகரணங்கள் கொண்டு பணியை மேற்கொண்டது கடினமாக இருந்ததாக “ வடகிழக்கு ரயில்வேயின் ஜென்ட்ரல் மேனேஜர் ஆர்.கே சிங் கூறியதாக 2014-ல் வெளியான செய்தியில் இடம்பெற்று உள்ளது.

மேலும், 600 முதல் 900 மீட்டர் அகலம் கொண்ட அணை தூண்களை எழுப்புவது மிகவும் கடினமான காரியமாக இருந்தது எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

போகிபீல் முக்கிய பணியில் ஒன்றான தூண்கள் அமைப்பதில் மொத்தம் உள்ள 42 தூண்களில் 32 தூண்கள் முடிக்கப்பட்டதாகவும். மீதமுள்ளவை 2013-ல் நிறைவடையும் என 2012 செய்தியில் வெளியாகியது. எனினும், திட்டத்தின் பணிகளின் வேகம் குறைந்த காரணத்தினால் திட்டம் முடிய 10 ஆண்டுகள் தேவைப்படும் என மக்கள் கருதினர். போகிபீல் பாலம் திட்டத்தின் வேகம் காங்கிரஸ் ஆட்சியில் குறைந்திருந்தது.

“  2002-ல் போகிபீல் திட்டம் தொடங்கிய போது திட்டத்தின் மதிப்பு ரூ.1762 கோடியில் இருந்து திட்டத்தின் செலவு 2014 வரையிலான செலவுகள் அனைத்தையும் உள்ளடக்கி ரூ.4996 கோடியாக உயர்ந்தது. மேலும், ரூ.600 கோடி 2014-2015-ல் ஒதுக்கப்பட்டுள்ளது ” என ராஜ்ய சபாவில் ரயில்வேவின் மாநில அமைச்சரான ஸ்ரீ மனோஜ் சின்கா தெரிவித்து இருந்தார்.

இவ்வாறு பல காலக்கெடுகளை தாண்டி போகிபீல் பாலத்தின் திட்டப் பணிகள் துரிதப்படுத்தி 2018 டிசம்பரில் முடிவடைந்து பிரதமர் மோடியால் திறக்கப்பட்டு உள்ளது.

காலநிலைகள், திட்டத்திற்கான செலவுகள் அதிகரித்தது, அரசின் வேகம் குறைந்தது உள்ளிட்ட பல காரணங்களால் போகிபீல் பாலம் முடிவடைய 16 ஆண்டுகள் ஆகி விட்டது.

ஆனால், பாஜக தரப்பில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் போகிபீல் திட்டத்திற்கு தடை என்பது முற்றிலும் தவறான தகவல். வாக்கு சேகரிப்பிற்கு தவறான தகவலைப் பயன்படுத்துவது நியாயமா ?

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader