பொலிவியாவில் முதல் தண்ணீர் போர் நடத்தி வென்ற மக்கள் !

பரவிய செய்தி
பொலிவியா நாட்டில் உள்ள கொச்சபம்பா நகரம் தண்ணீருக்கான மிகப்பெரிய போர் நடத்தி வெற்றிக் கண்டது.
மதிப்பீடு
சுருக்கம்
1999-2000-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பொலிவியாவில் உள்ள கொச்சபம்பா நகரின் தண்ணீர் தேவையை கையில் வைத்து இருந்த தனியார் நிறுவனத்தின் விலை ஏற்றத்தைக் கண்டித்து மக்கள் போராடி வென்றனர்.
கொச்சபம்பாவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பெக்டெல் நிறுவனம் மற்றும் மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தை தமிழக அரசு திருப்பூர் பகுதியின் குடிநீர் விநியோகம் செய்ய அனுமதி அளித்தது.
விளக்கம்
தண்ணீர் தேவை பூமியில் வசிக்கும் ஒவ்வொரு உயிரினத்தின் பிறப்பு உரிமை என்றே கூறலாம். அதற்கு விலை கொடுக்கும் நிலைக்கு உலகம் மாறி வருகிறது. தற்போது சிறிதளவில் தண்ணீருக்கு காசு கொடுக்கும் நாம் அதிக விலை கொடுத்தால் தான் தண்ணீரையே பெற முடியும் என்றால் அங்கு போர் மூளும். அவ்வாறான மக்களின் முதல் தண்ணீர் போர் பற்றி அறிவோம்.
கொச்சபம்பா :
பொலிவியா நாட்டில் உள்ள மூன்று மிகப்பெரிய முக்கிய நகரங்களில் கொச்சபம்பாவும் ஒன்றாகும். 1990-ல் கொச்சபம்பாவின் தண்ணீர் பயன்பாடு அதிகரிக்காமல் இருக்க தண்ணீரை தனியார்மயமாக்கல் செய்ய பொலிவியா அரசிடம் உலக வங்கி கூறியது.
இதையடுத்து, 1999-ல் பெக்டெல் நிறுவனத்திடம் 40 ஆண்டுகள் தண்ணீர் விநியோகத்திற்கு பொலிவியா அரசு ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டது. திடீரென மக்கள் தண்ணீருக்கு பணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும், ஏற்கனவே செமபா வாட்டர் ஏஜென்சி வாடிக்கையாளர்களிடம் சேவைக்கு கட்டணம் விதித்து இருந்தது.
கிராமப்புற மாவட்டங்களில் செமபா விநியோக சேவை தோல்வியை சந்தித்து இருந்தது. தண்ணீர் விநியோகம் செய்ய குழாய்கள் அமைக்கப்பட்டு அதற்கான பெறப்பட்ட கட்டணங்கள் 50% முதல் சில நேரங்களில் இரு மடங்கிற்கும் அதிகம் உயர்ந்த காரணத்தினால் கொச்சபம்பா மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
தண்ணீர் என்பது அடிப்படை உரிமை ! அதை விடுத்து தண்ணீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தது மற்றும் அதிக கட்டணம் ஆகியவற்றால் கொச்சபம்பா மக்கள் மிகப்பெரிய போரட்டத்தை முன்னெடுத்து உலகளவில் தலைப்பு செய்தியாகின.
அரசின் நடவடிக்கையால் போராட்டம் கலவரமாகி மாணவர் ஒருவர் இறந்தார், நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். இறுதியில், மக்கள் போரில் வெற்றியும் கண்டனர். எனினும், 16 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகும் நாட்டில் ஏழை மக்களுக்கு, கிராமங்களுக்கு தண்ணீர் சேவை அளிக்கப்படவில்லை என 2016-ல் செய்தியில் வெளியாகியுள்ளது.
மக்களின் போராட்டத்திற்கு பிறகு பெக்டெல் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்தனர். தண்ணீர் விநியோகம் பல நாடுகளில் தனியார் வசம் ஒப்படைக்கபட்டு உள்ளது. இந்தியாவிலும் சில நகரங்களின் தண்ணீர் விநியோகம் தனியாரிடம் உள்ளது. அது தொடர்பாக சர்ச்சைகளும் எழுந்துள்ளது.
திருப்பூர் தண்ணீர் விநியோகம் :
திருப்பூர் நகரின் தண்ணீர் விநியோகத்தை தனியார் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான ரூ.1000 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து உள்ளது என 2002-லேயே செய்தி வெளியாகி உள்ளது.
2013-ல் வெளியான செய்தியில் திருப்பூர் தண்ணீர் விநியோகம் திட்டத்தின் Engineering Procurement construction ஒப்பந்ததாரர்களாக அமெரிக்காவின் பெக்டெல் நிறுவனம் மற்றும் மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தை அறிவித்து முதல் கட்டமாக ரூ.850 கோடியை ஒதுக்கியதாக இடம்பெற்றுள்ளது.
கொச்சபம்பாவில் மக்கள் போராடி துரத்திய தனியார் நிறுவனமான பெச்டேல் நிறுவனமே திருப்பூர் நகருக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய 30 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளது.