வறுமையால் துப்பரவு பணி செய்யும் இந்தியக் குத்துச்சண்டை வீரர்.

பரவிய செய்தி
இந்தியாவைச் சேர்ந்த சிறந்த குத்துச்சண்டை வீரரான கிருஷ்ணா ராட் பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும், கோப்பையும் வென்றவர். ஆனால், தற்போது துப்பரவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கிரிக்கெட் வீரர்களை கொண்டாடும் நாம் மற்ற விளையாட்டு வீரர்களை கண்டுகொள்ளாமல் உள்ளோம்.
மதிப்பீடு
சுருக்கம்
இந்திய அளவில் பல போட்டிகளில் வென்று பதக்கங்களை வென்ற கிருஷ்ணா ராட் வறுமையின் காரணமாக துப்புரவு செய்யும் பணியை செய்து வந்துள்ளார்.
விளக்கம்
இந்தியாவில் விளையாட்டு என்றால் கிரிக்கெட் மட்டுமே என்ற எண்ணம் அனைத்து விதமான மக்களிடமும் காணப்படுகிறது. அரசாங்கமும் கிரிக்கெட் போட்டிகளுக்கு கொடுக்கும் அளவிற்கு கூட மற்ற விளையாட்டுகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் முக்கியத்துவம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு அரசு வேலை, வீடு, பணம் என பல பரிசுத் தொகைகள் வழங்கப்படுகிறது. தேசிய அளவில் சாதனை புரியும் விளையாட்டு வீரர்களுக்கு சிறிய அளவில் வேலைவாய்ப்பு இன்னும் பிற உதவிகள் செய்தாலும் கூட பல வீரர்களின் நிலைமை வேதனைக்குரியதாக உள்ளது.
கிருஷ்ணா ராட் சிறந்த குத்துச்சண்டை வீரர். 10 வயதில் தந்தையை இழந்த பிறகு குடும்பத்தின் வறுமை காரணமாக பல இன்னல்களை சந்தித்தவர். எனினும், குத்துச்சண்டை மீது அவருக்கு இருந்த பேரார்வம் தான் அவரை பல வெற்றிச் சின்னங்களை வெல்ல வைத்துள்ளது. மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் கண்டவர்.
பல சாதனைகளை படைத்த கிருஷ்ணா ராட் வறுமையின் காரணமாக துப்புரவு செய்யும் வேலையில் ஈடுபட்டார் என்றால் நம்ப முடிகிறதா ! கொல்கத்தா மாநிலத்தில் ஹௌரா மாநகராட்சியில் சாக்கடை வடிகால்களில் கிருமிநாசினி மருந்து அடிக்கும் தற்காலிக வேலையை செய்துள்ளார். வறுமை, வேலை என பல இன்னல்களை சந்தித்தாலும், அவற்றை தினந்தோறும் மாலை 5 முதல் 7 வரையிலான நேரத்தில் உண்டாகும் இவரின் குத்துச்சண்டை ஒலிகள் மறக்கடிக்கச் செய்கின்றனர்.
தனது வறுமையிலும் பல மாணவர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்து சிறந்த குத்துச்சண்டை வீரர்களை உருவாக்கி வருகிறார். சுமார் 150-க்கும் அதிகமான மாணவர்கள் கிருஷ்ணா ராட்யிடம் சிறந்த குத்துச்சண்டை நுட்பங்களை கற்றுள்ளனர். குத்துச்சண்டையில் ஆர்வம் இருந்தும் ஏழ்மையில் இருக்கும் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார் என்று அவரின் மாணவர்கள் பெருமைப்பட பேசுகின்றனர்.
வெற்றிச் சின்னங்கள் :
1987 ஆம் ஆண்டில் நடைபெற்ற சூர்யா சென் கோப்பைக்கான போட்டியில் தங்க பதக்கம் வென்றார். 1992-ல் அதே கோப்பைக்கான போட்டியில் ரன்னர்-அப் ஆக திகழ்ந்தார்.
1985-ல் 40 கிலோ எடைக்கான மேற்கு வங்காளம் மாநிலத்தின் open lalchand roy memorial குத்துச்சண்டை கோப்பையில் அனைத்து சுற்றுகளையும் கடந்து ரன்னர்-அப் ஆனார். 1987-ல் அதே கோப்பைக்கான போட்டியில் வெற்றி பெற்றார்.
1985-ல் யூத் பெஸ்டிவல் நடத்திய குத்துச்சண்டை போட்டியில் வென்றுள்ளார். மாநில பள்ளிகளுக்கான போட்டியிலும் மற்றும் 1990-ல் கல்லுரிகளுக்கான போட்டியிலும் வென்றவர்.
2015-ல் civic body’s health department-ல் தின ஊதியமாக 232 ரூபாயை பெற்று ஹௌரா பகுதியில் சிறிய வீடு ஒன்றில் தனது மனைவி, 3 குழந்தை, அம்மா மற்றும் நோய் பாதித்த சகோதரர் உடன் வசித்து வருகிறார். மேலும், ஹௌரா குத்துச்சண்டை சங்கத்தில் பயிற்சியாளராகவும் இருக்கிறார்.
குத்துச்சண்டை விளையாட்டில் சாதனைகள் படைத்த கிருஷ்ணா ராட் வறுமையில் பல துன்பங்களை கடந்து தம்மால் முடிந்த அளவிற்கு குத்துச்சண்டை பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறார்.
ஒரு குத்துச்சண்டை வீரர் துப்புரவு பணியில் இருப்பது பற்றி இணையத் தளங்களில் வெளியானதை அடுத்து கிருஷ்ணா ராட் குறித்து ஹௌரா மாநகராட்சி மேயரிடம் அறிவுறுத்துவதாக அமைச்சர் அருப் ராய் தெரிவித்திருந்தார்.
கிரிக்கெட் போட்டிகளில் சாதனை படைக்கும் வீரர்கள் கோடிகளில் புரள்வதும், மற்ற விளையாட்டுகளில் உள்ளவர்கள் தெருக்கோடியில் துப்புரவு தொழில் செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதும் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.