இந்தோனேசியாவில் முட்டை போடும் சிறுவன் | உண்மை என்ன ?

பரவிய செய்தி

இந்தோனேஷியாவில் 14 வயது சிறுவன் ஒருவன் முட்டை இடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுவன் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வருவதாக கூறப்படுகிறது.

மதிப்பீடு

விளக்கம்

மனிதர்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் என்றும் ஆச்சரியத்தை விளைவிக்கக்கூடியவை. அசாதாரண நிகழ்வுகள் உலக அளவில் பரவக் கூடியதாகவும் இருக்கும். எனினும், அத்தகைய நிகழ்வுகளில் எது உண்மை, எது பொய் என்ற தகவலை யாரும் பெரிதும் கவனிப்பதில்லை.

Advertisement

இந்தோனேசியாவைச் சேர்ந்த அக்மல் என்ற சிறுவன் முட்டையிட்டு வருவதாக கூறும் செய்திகள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் திளைத்தது. இந்த செய்திகள் 2018 பிப்ரவரி மாதத்தில் வேகமாக வைரலாகத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளில் மட்டும் அச்சிறுவன் 20 முட்டைகளை இட்டதாக கூறிக் கொள்கின்றனர்.

சிறுவன் இடுவதாக கூறப்படும் முட்டையின் உள்ளே மஞ்சள் நிறத்தில் இருப்பதாக கூறுகின்றனர். நீண்ட நாட்களாக சிறுவன் முட்டை இட்டு வருவதால் அவனை Syech Yusuf மருத்துவமனையில் 2018-ல் சிறுவனின் பெற்றோர்கள் அனுமதித்தனர்.

கோழி முட்டை இடுவது வழக்கம். ஆனால், மனிதன் முட்டையிடுவது சாத்தியமில்லாத ஒன்று. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையிலேயே இரு முட்டைகளை இட்டதால் மருத்துவர்கள் நடப்பதை அறியாமல் குழப்பத்தில் ஆழ்ந்ததாக கூறப்படுகிறது.

சிறுவனின் எக்ஸ்ரே-விலும் சிறுவனின் உடலில் முட்டை இருக்கும் புகைப்படங்கள் வைரலாகின. கோழி இடக்கூடிய முட்டையானது சிறுவனின் ஆசனவாய் வழியாக வருகிறது என்பது மருத்துவர்களாலும் நம்ப முடியாததாக இருந்தது.

Advertisement

மருத்துவமனை கருத்து :

அக்மல் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ” எங்களின் சந்தேகம் என்னவென்றால் முட்டையினை அக்மல் ஆசனவாய்க்குள் திணித்து இருக்கக்கூடும் “.

” ஆனால், நாங்கள் அதனை நேரடியாக காணவில்லை ” . அறிவியல் பூர்வமாக கோழி முட்டைகள் மனிதனின் உடலில் இருந்து வெளிவர வாய்ப்பில்லை. குறிப்பாக, செரிமான அமைப்பின் வழியாக வருவது சாத்தியமில்லாதது எனத் தெரிவித்து இருந்தனர்.

இதேபோன்ற சம்பவங்கள் :

இம்மாதிரி முட்டையிடுவது குறித்த செய்திகள் இது முதல் முறை அல்ல. ஜகர்த்தாவில் Kakek Sinin என்பவர் தாம் முட்டையிடுவதாக கூறிக் கொண்டார். அந்நேரத்தில், ஜகர்தா ஹெல்த் ஏஜென்சியின் தலைவர் Dien Emmawati கூறுகையில், ” அந்த முட்டையை போகோரில் உள்ள கால்நடை மருத்துவரிடம் சோதித்தோம். அது இரண்டு வாரங்களுக்கு முன்பு இடப்பட்ட கோழியின் முட்டை ” எனத் தெரிவித்து இருந்தார்.

இதேபோன்று 2014-ம் ஆண்டில் North sulawesiபகுதியைச் சேர்ந்த சான்ட்ரா ரவூப் என்ற பெண் 5 முட்டைகளை குழந்தைகளாக ஈன்றதாக வதந்தி பரப்பியதை காவல்துறையினர் கண்டறிந்தனர். தன் கிளினிக் நிலையத்தை விளம்பரப்படுத்த இப்படி செய்து உள்ளார் என காவல்துறை தெரிவித்து இருந்தனர்.

முடிவு :

அக்மல் ஆசனவாயில் இருந்து வருவதாக கூறும் முட்டை கோழியின் முட்டை என்றே மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மற்றவர்கள் அல்லது அவரே கோழி முட்டைகளை ஆசனவாய் பகுதியில் திணித்து இருக்க வேண்டும். அக்மல் முட்டை இடுவதாக கூறி வெளியான வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரல்.

இந்தோனேஷியாவின் கோவா போலீஸின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழு நடத்திய விசாரணையில் அக்மல் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். ” அவரின் மனநிலையானது அவரின் வயதுக்கு ஏற்றதாக இல்லை ” எனக் குழு கூறியதாக Indonesian expat எனும் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, காவல்துறை மனிதன் முட்டையிடுவதாக கூறும் செய்திகளை மக்கள் பரப்ப வேண்டாம் என்றும், கோழி முட்டையை மனிதன் இடுவது மருத்துவரீதியாக சாத்தியமில்லை என்றும் தெரிவித்துக் கொண்டனர்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button