This article is from Nov 15, 2019

வீட்டை விட்டு ஓடி வந்த சிறுவனுக்கு உதவுமாறு பரவும் ஆடியோ உண்மையா ?

பரவிய செய்தி

வணக்கம் தோழர்களே. நான் சீனிவாசன் பேசுறேன் ட்ரைவர். மேலே படத்தில் இருக்கும் பையன் +1 படிக்கிறான். திருவண்ணாமலையில் இருந்து ஓடி வந்துட்டான். சென்னை ஏர்போர்ட்டில் பிக்அப்-காக நான் நின்று கொண்டு இருக்கும் பொழுது இந்த பையன் வந்து இருந்தான். இந்த பையனை நான்கு பேர் தவறாக பயன்படுத்தி இருந்தனர். நேற்று தான் அந்த பையன் திருவண்ணாமலையில் இருந்து ஓடி வந்துருக்கான். இரவு பையனிடம் இருந்த பணத்தை எல்லாம் பிடிங்கிக் கொண்டு கஷ்டப்படுத்தி இருக்கிறார்கள். அழுதுக் கொண்டிருந்த பையனை கூப்பிட்டு கையில் பணத்தை கொடுத்து சென்னை ஏர்போர்ட் ஸ்டேஷனில் ஒப்படைத்து இருக்கிறேன். அந்த பையனுக்கு அப்பா அம்மாவின் போன் நம்பர் தெரியவில்லை எனக் கூறுகிறான். திருவண்ணாமலை பக்கம் தான் என சிறுவன் கூறுவதால் உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.

மதிப்பீடு

விளக்கம்

திருவண்ணாமலை பகுதியில் இருந்து வீட்டை விட்டு ஓடி வந்த பையன் சென்னை விமான நிலையப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு, விமான நிலையத்தின் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக ஒரு சிறுவனின் புகைப்படத்துடன் வாட்ஸ் ஃபார்வர்டு ஆடியோ ஒன்று பரவி வருகிறது. இதுபோல், பல ஃபார்வர்டு தகவல்கள் சுற்றி வருவதால், இத்தகவல் குறித்து யூடர்ன் ஆராய்ந்து பார்க்க முயன்றோம்.

வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வரும் சிறுவன் 11-ம் வகுப்பு படிப்பதாக ஆடியோவில் கூறுகிறார்கள். ஆனால், சிறுவனுக்கு பெற்றோரின் செல்போன் எண் தெரியவில்லை என்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அடுத்ததாக சிறுவனின் ஊர் திருவண்ணாமலை அருகே எனக் கூறுகிறார்கள். 11-வகுப்பு படிக்கும் பையனுக்கு சொந்த ஊர், படிக்கும் பள்ளி, முகவரி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதை பொதுவாக சிந்தித்தாலே தெரிய வரும்.

சென்னை விமான நிலையத்தின் காவல் நிலையத்தில் சிறுவனை ஒப்படைத்து விட்டதாக ஆடியோவில் கூறி இருக்கிறார். பின்னர் எதற்காக , புகைப்படத்துடன் ஆடியோவை வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் பகிர வேண்டும்.

சிறுவன் குறித்த தகவலை உறுதி செய்து கொள்ள, விமான நிலையத்தின் காவல் நிலையத்திற்கு யூடர்ன் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு பேசிய பொழுது ” அப்படி எதுவும் இல்லை ” என சிறுவன் குறித்த செய்தியை மறுத்து உள்ளனர்.

புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் , ஃபார்வர்டு செய்தியை பரப்பியவர் யார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. ஆனால், ஆடியோவில் கூறுவது போன்று நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. இதுபோன்ற தவறான தகவல்களால், ஒரு சில சரியான தகவல்கள் கவனம் பெறாமல் போய் விடுகின்றன.

எனவே, வாட்ஸ் அப் குழுக்களில் ஒரு தகவலை பகிர்வதற்கு முன்பாக அத்தகவல் குறித்த கேள்விகளை எழுப்புங்கள். தவறான செய்திகள் பரவுவது குறித்து மற்றவர்களுக்கும் எடுத்துரையுங்கள்.

Please complete the required fields.




Back to top button
loader