பிராமணர்கள் ஆணவக் கொலைகள் செய்ததில்லை என எஸ்.வி.சேகர் சொன்னப் பொய் !

பரவிய செய்தி

எந்த பிராமணன் ஆணவக் கொலை செய்துள்ளான்? – எஸ்.வி.சேகர்

Youtube link

மதிப்பீடு

விளக்கம்

லக பிராமண சங்கத்தின் 9வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், நடிகர் எஸ்.வி.சேகர், பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

அந்நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகர் பேசுகையில், “எந்த பிராமணன் ஆணவக் கொலை செய்துள்ளான்? என் பெண்ணை அவன் இழுத்துக் கொண்டு சென்று விட்டான். அவனை வெட்டுகிறேன். என் மகனை அவள் இழுத்துக் கொண்டு சென்று விட்டான்.  அவளை வெட்டுகிறேன் என எந்த பிராமணனாவது செய்ததுண்டா?” எனப் பேசி இருக்கிறார்.

இதேபோல், “ஐயரை பார்த்தால் ஏன் பயப்படுகிறார்கள்? ஐயர் சாமி கும்பிடுவார். திருட்டுத்தனம் செய்யமாட்டார் என்று சொல்கிறார்கள் அல்லவா. அதனை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

உண்மை என்ன ?

2010 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் வசித்த பொறியியல் மாணவர் விகாஸ் (21), பிராமண சமூகத்தைச் சேர்ந்த ரிது (19) என்ற பெண்ணை காதலித்ததற்காகக் அடித்துக்கொலை செய்யப்பட்டார். பின்னர் ரிதுவும் தன்னுடைய குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டு பிராமன்வாஸ் கிராமத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளார். 2010ம் ஆண்டு நடந்துள்ள இந்த ஆணவப்படுகொலையைப் பற்றி Indian Express செய்தியாக வெளியிட்டுள்ளது.

இதேபோன்று 2020 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பாரதி என்ற பெண், பிராமணர் அல்லாத ஒருவரை விரும்பியதற்காக கொலை செய்யப்பட்டார்.  தன்னுடைய மகளை ஆணவக்கொலை செய்ததற்காக ரமேஷ் ராஜ்கோர்(42) , மனைவி ரஷ்மி (40) மற்றும் அவர்களது மகன் மணீஷ்(20) ஆகியோர் கைது செய்யப்பட்டது தொடர்பாக deccanherald இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆணவக்கொலைகளைப் போன்றே பல கொலைகுற்றங்களும் பிராமணர்கள் மீது பதியப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வளாக மேலாளரின் கொலை சம்பவம். 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோயில் வளாகத்தில் மேலாளராக பணி செய்து வந்த சங்கரராமன், சிலரால் வெட்டி கொல்லப்பட்டார். இதில் கோவில் மடாதிபதி ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கோயிலில் பணிசெய்யும் அர்ச்சகர்களே கோயிலுக்குச் சொந்தமான சிலைகள், நகை மற்றும் பக்தர்களின் காணிக்கைகளை திருடிய நிகழ்வுகள் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடந்துள்ளன. திருட்டு சம்பவங்களைத் தடுக்க கோவிலில் சிசிடிவி பொருத்தப்பட்டாலும், சிசிடிவி-யை துணி மூலம் மறைத்து விட்டு திருடிய சம்பவமும் அரங்கேறி உள்ளது. இதற்கு உதாரணமாக 2017-ல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் நடந்த திருட்டு சம்பவத்தைக் கூறலாம்.

இது மட்டுமல்லாது தமிழ்நாட்டில் 18 வயதுக்கு குறைந்த பெண் குழந்தைகளை திருமணம் செய்ததற்காக சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் பலரின் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம் மூலமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பிராமணர்கள் வன்முறை, சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டது இல்லையா ? 

நடிகர் எஸ்.வி.சேகர் பேசியது போன்றே பத்திரிக்கையாளர் ரங்கராஜ் அவர்கள் யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் “மணி ஆட்டிக்கொண்டு இருந்த குடும்பத்தில் (பிராமணர்) ஒருத்தர் கூட கொலை செய்தது கிடையாது” என்று பேசியதற்கு யூடர்ன் தரப்பில் மறுப்பு தெரிவித்து, பிராமணர்கள் சட்டத்திற்கு புறம்பாக செய்த குற்றங்கள் அடங்கிய தொகுப்பு கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

முடிவு:

நம் தேடலில், பிராமணர்கள் ஆணவக்கொலைகளை செய்ததில்லை என எஸ்.வி.சேகர் பேசியது உண்மையல்ல என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader