மூளைச்சாவு பித்தலாட்டத்தின் உச்சம் என வைரலாகும் பதிவு | உண்மை என்ன ?

பரவிய செய்தி
மூளைச்சாவு – பித்தலாட்டத்தின் உச்சம்
மூளை இறக்குமா?
இந்த பதிவு விழிப்புணர்வுக்கானது ?
முகநூல் பதிவு: https://m.facebook.com/story.php?story_fbid=10162511390085377&id=885365376
மதிப்பீடு
சுருக்கம்
மூளைச்சாவு பற்றிய பல முரணான தகவலையும், மூளைச்சாவும், கோமாவும் ஒன்றே என்ற தவறான தகவலையும் முகநூல் பதிவில் எழுதி உள்ளனர். அவற்றைப் பற்றி விரிவாக காண்போம்.
எனினும், மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட உறுப்புகளை நோய்களிகளுக்கு வழங்கியதில் முறைகேடுகள் நிகழ்கிறது என்பது உண்மை. அதற்கான வழக்குகள், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
விளக்கம்
சமீபகாலமாக மூளைச்சாவு அடையும் நபர்களின் எண்னிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. அத்தகைய எண்னிக்கை மக்கள் மத்தியில் புதிய சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த சந்தேகத்தின் வெளிப்பாடே ” மூளைச்சாவு – பித்தலாட்டத்தின் உச்சம் ” என்ற முகநூல் பதிவு. இதனைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
மூளைச்சாவு என்றால் என்ன ?
விபத்துக்கள் அல்லது கட்டிகள் மூலம் மூளையில் ஏற்படும் பாதிப்பின் காரணமாக நம் மூளைத்தண்டுவடம் நிரந்தரமாக செயல் இழக்கும் நிலையை மூளைச்சாவு என்று அழைக்கிறோம். நம் மூளைத்தண்டுவடம் பகுதியில் உள்ள மெடுலா ஆப்லங்கேட்டா தான் மூச்சு விடுதல் மற்றும் இதயத் துடிப்பு சீராக இயங்க காரணமாகும்.
மூளைச்சாவு அடைந்த நபருக்கு, ஒன்று மூளைத்தண்டுவடத்தில் கட்டி ஏற்பட்டு இருக்கும் அல்லது விபத்தில் மெடுலா ஆப்லங்கேட்டாவில் அடிபட்டு இருக்க வேண்டும். இதனால் சில சமயம் மூளை உடனடியாக செயல் இழந்து விடுகிறது.
அவ்வாறு மூளைச்சாவு அடையும் நபரின் இதயமும் சில நிமிடங்களில் செயல் இழந்து விடும். எனினும், செயற்கை சுவாசம் அளிப்பதன் மூலம் மூளைச்சாவு அடைந்தவரின் இதயத் துடிப்பு சில மணி நேரங்களுக்கு சீராக இருக்கும். செயற்கை சுவாசம் இல்லை என்றால் இதயத்துடிப்பு நின்று விடும்.
இவ்வாறு மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் அவர்கள் குடும்பத்தினர் அனுமதி பெற்று தானமாக வழங்கப்படுகிறது. மூளைச்சாவு எவ்வாறு ஏற்படுகிறது என்றும், மூளைச்சாவு ஏற்பட்டால் அது மரணத்திற்கான வழி என தெரிந்து இருக்கும். மூளைச்சாவு அடைந்த நபரின் இதயத்துடிப்பு நின்று விட வாய்ப்புள்ளது, ஆகையால் செயற்கை சுவாசம் வைத்து மரணத்தை சில மணி நேரங்கள் அல்லது அதிகபட்சமாக சில நாட்களுக்கு தள்ளி வைக்க மட்டுமே முடியும்.
கோமா :
ஒருவர் கோமா நிலைக்கு செல்லும் பொழுது அவரின் மூளையில் அதிர்வலை மற்றும் சமிக்கை என அனைத்தும் இருக்கும். மூளை நன்றாக செயல்பாட்டில் இருக்கும். ஆனால், சுயநினைவு இருக்காது, உணர வாய்ப்பில்லை. கோமா நிலையில் இருக்கும் நபருக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. கோமா நிலையில் இருந்து மீண்டு வருதல், மூளைச்சாவு, கோமாவின் மோசமான நிலைக்கு செல்லுதல் போன்றவை நிகழ வாய்ப்புள்ளன.
மூளைச்சாவு பற்றிய பதிவில் மூளைச்சாவு மற்றும் கோமா இரண்டும் ஒன்று எனக் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், அது உண்மை இல்லை எனத் தெரிந்து இருக்கும். மூளைச்சாவில் மூளை செயல் இழந்து விடும், செயற்கை சுவாசம் இல்லை என்றால் இதயத்துடிப்பும் நின்று விடும். ஆனால், கோமா நிலையில் மூளை செயல்பாட்டில் இருக்கும். ஆக, இரண்டும் வெவ்வேறானவையே.
மூளைச்சாவு அதிகரிப்பு :
ஆர்.டி.ஐ மூலம் கிடைத்த தகவலில், சமீப ஆண்டுகளில் தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. 2008-09 ஆம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்தவர்களின் எண்ணிக்கை 21 இருந்தது. 2016-17 ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.
மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1995-ல் திருத்தப்பட்டு ஷெட்யூல்-1 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகையான நோய்களை குணப்படுத்த முடியாது என்று இந்திய சட்டம் எச்சரிப்பதாகவும், அதற்கு ஆங்கில மருந்துவ வைத்தியம் பார்க்க கூடாது என்றும் முகநூல் பதிவில் இடம்பெற்றுள்ளது.
அதில், எய்ட்ஸ், நீரிழிவு நோய், காது கேளாமை உள்ளிட்ட 51 வகை பட்டியல் இடம்பெற்றுள்ளது. இது போன்ற நோய்களை குணப்படுத்த முடியாது என அனைவரும் அறிந்து இருப்போம். ஆனால், ஆங்கில மருத்துவம் பயன்படுத்தக் கூடாது என சட்டத்தில் குறிப்பிடவில்லை. மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோய்கள் மற்றும் இயலாமைகள் என பட்டியலிட்டு உள்ளனர்.
மூளைச்சாவு பற்றி மக்கள் எப்படி புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்று NCBI நடத்திய ஆய்வில், மக்களுக்கு மூளைச்சாவு குறித்த சரியான விளக்கம் தெரியவில்லை. மூளைச்சாவு மற்றும் உறுப்பு தானம் பற்றி எதிர்மறையான எண்ணம் தோன்றுவதாக குறிப்பிட்டு உள்ளனர். மக்களுக்கு மூளைச்சாவு பற்றிய சரியான விழிப்புணர்வு தேவை என தெரிவித்து இருந்தனர்.
முறைகேடு :
மூளைச்சாவு பற்றிய முகநூல் பதிவில் மூளைச்சாவு மற்றும் கோமா ஆகியவற்றை பற்றிய புரிதல் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. எனினும், அதில் இருக்கும் அச்சம் சரியானதே. ஏனெனில், தமிழ்நாட்டிலேயே உடல் உறுப்பு மாற்றத்தில் ஏழைகள், உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்காமல் விதிமுறைகளை மீறி வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கிய சம்பவங்கள் இங்கு நிகழ்ந்து உள்ளன. தானமாக வழங்கப்படும் உறுப்புகளையும் பணத்திற்காக வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்குவதாக மிகப் பெரிய குற்றச்சாட்டு தமிழக தனியார் மருத்துவமனைகள் மீது எழுந்தன. அவற்றை மறுக்கவே முடியாது.
மூளைச்சாவு பற்றிய விழிப்புணர்வு எவ்வளவு முக்கியமானதோ, அதே போன்று மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் சரியான மக்களுக்கு தான் போய் சேர்கிறதா ? முறைகேடுகள் நிகழ்கிறதா ? என்பதை அறிந்து இருக்க வேண்டும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.
ஆதாரம்
Investigation of Public Perception of Brain Death Using the Internet.
https://web.archive.org/web/20051031023525/http://cdsco.nic.in/html/Copy%20of%201.%20D%26CAct121.pdf
Protocol breached in Tamil Nadu organ transplant case, says probe
Accident Victim’s Case Raises Suspicions of Organ Transplant Scam in Tamil Nadu