This article is from Jul 06, 2019

” Padman ” முருகானந்தத்தை சந்தித்தார் கிரிக்கெட் வீரர் பிராவோ !

பரவிய செய்தி

தன் நாட்டில் உள்ள ஏழை பெண்களுக்கு பயன்படுத்துவதற்காக கோவை முருகானந்ததிடம் நாப்கின் இயந்திரத்தை வாங்கிச் சென்று தன் நாட்டு பெண்களுக்கு வழங்க உள்ளார் கிரிக்கெட் வீரர் பிராவோ. தன் நாட்டின் மீதும், தன் மக்களின் மீதும் அக்கறை உடையவரை பாராட்டலாமே.

மதிப்பீடு

விளக்கம்

” Padman “ என அழைக்கப்படும் கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் மலிவு விலையில் சானிடரி நாப்கின்களை தயாரிக்கும் எளிய முறையிலான இயந்திரத்தை கண்டுபிடித்தார். பெண்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த முருகானந்தம் குறித்து ” Padman ”  எனும் திரைப்படமும் இந்தியில் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான பிராவோ கோவையில் அருணாச்சலம் முருகானந்தத்தை நேரில் சென்று சந்தித்து உள்ளார். சமீபத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்ற பொழுது முருகானந்தம் பற்றி அறிந்த பிராவோ தனது மேலாளர் மூலம் முருகானந்தம் இருப்பிடத்தை அறிந்து அவரை நேரில் சந்தித்து உள்ளார்.

இருவரின் உரையாடலில், ட்ரினிடாட் மற்றும் டொபாகோ தீவுகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரி பெண்களிடம் மென்ஸ்ட்ருல் ஹைஜின்(Menstrual hygiene) குறித்து விழிப்புணர்வு இல்லை. சானிடரி நாப்கின்கள் கிடைக்காத காரணத்தினால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு செல்வதில்லை. நாப்கின் குறித்த பயிற்சி மையத்தை ட்ரினிடாட் தீவில் நிறுவி, மக்களுக்கு அளிக்க வேண்டும் எனும் திட்டத்தை கொண்டு இருப்பதாக பிராவோ தெரிவித்து இருக்கிறார்.

அதற்காக, முருகானந்ததிடம் மலிவு விலையில் நாப்கின்களை தயாரிக்கும் எளிய முறையிலான இயந்திரத்தை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு முருகானந்தமும் ட்ரினிடாட் மற்றும் டொபாகோ தீவிற்கு இயந்திரத்தை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்து உள்ளார். நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை அனுப்பி வைக்க உண்டாகும் செலவுகளை பிராவோ ஏற்றுக் கொண்டுள்ளார். அடுத்த 10 நாட்களுக்குள் இயந்திரம் தயாராகி விடும் என முருகானந்தம் தெரிவித்து இருக்கிறார்.

பிராவோ உடன் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலான சந்திப்பில் இயந்திரத்தில் நாப்கின் தயாரிப்பது குறித்து விளக்கியுள்ளார். நாப்கின் தயாரிப்பதை அறிந்து கொண்டு ஒவ்வொரு படியாக பிராவோ முயற்சித்து முதல் 15 நிமிடத்தில் ஒரு நாப்கினை தயாரித்து உள்ளார். நாப்கின் தயாரிப்பது மட்டுன்றி அதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் மற்றும் இயந்திரம் குறித்து முழு தகவல்களையும் பிராவோவிடம் பகிர்ந்து உள்ளார்.

ட்ரினிடாட் மற்றும் டொபாகோ : 

ட்ரினிடாட் மற்றும் டொபாகோ தீவுகளில் சானிடரி நாப்கின்கள் குறித்த விழிப்புணர்வுகள் பெரிதாக இல்லை. மேலும், அங்கு நாப்கின்களின் விலையும் அதிகமாக இருந்து வருகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் சானிடரி நாப்கின்களை பெறுவதில் பொருளாதார சிக்கல்கள் இருப்பதால் பள்ளிகளுக்கு செல்வது தடைபடுகிறது.

மார்ச் 2019-ல் #EndPeriodPoverty initiative மூலம் ட்ரினிடாட் மற்றும் டொபாகோவில் இருக்கும் பள்ளிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு 1,15,000 நாப்கின்களை வழங்க முயற்சியை மேற்கொண்டனர். அங்குள்ள பொருளாதார சூழ்நிலையில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை மாற்றி, அவர்களுக்கான தன்னம்பிக்கையை, விழிப்புணர்வை எற்படுத்த இம்முயற்சியை மேற்கொண்டனர்.

ட்ரினிடாட் மற்றும் டொபாகோ மட்டுமின்றி ஜமைக்காவிலும் #EndPeriodPoverty ப்ரோக்ராம் மூலம் 1,70,000 நாப்கின்களை Always மூலம் வழங்குவதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

ட்ரினிடாட் மற்றும் டொபாகோவில் நாப்கின் இயந்திரத்தின் மூலம் மலிவு விலையில் நாப்கின்களை தயாரித்து பெண்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே பிராவோவின் நோக்கம். இதனை மக்களிடம் கொண்டு செல்ல பிராவோ தூதரக செயல்பட இருப்பதாக முருகானந்தம் தெரிவித்து இருந்தார், ட்ரினிடாட் மற்றும் டொபாகோவில் முருகானந்தத்தின் மலிவு விலை நாப்கின் இயந்திரம் நிறுவிய பிறகு அவரின் இயந்திரம் இயங்கும் நாடுகளின் எண்ணிக்கை 27 ஆக உயரும்.

தனது இருப்பிடமான ட்ரினிடாட் மற்றும் டொபாகோவில் பெண்களுக்கு மென்ஸ்ட்ருல் ஹைஜின் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மலிவு விலை நாப்கின்கள் கிடைக்க பெற முயற்சிக்கும் கிரிக்கெட் வீரர் பிராவோவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் தெரிவிக்கின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader