கேதார்நாத் யாத்திரை சென்ற இந்து பக்தர்களை தாக்கியது முஸ்லீம் இளைஞர்கள் எனப் பரப்பப்படும் வதந்தி

பரவிய செய்தி
கேதார்நாத் யாத்திரை போகும் இந்துபக்தர்களை தாக்கிய கழுதை மற்றும் குதிரை வாடகை தொழில் செய்யும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைதுசெய்த உத்தரகாண்ட் காவல்துறை. உங்கள் செயலுக்கு நன்றி!
மதிப்பீடு
விளக்கம்
மோசமான வானிலை மற்றும் பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் யாத்திரை அடிக்கடி நிறுத்தப்படுவது வழக்கமானது. எனவே கடுமையான மழை மற்றும் பனிச்சரிவு காரணமாக கடந்த ஏப்ரல் 22 அன்று தொடங்கப்பட்ட இந்த ஆண்டுக்கான கேதார்நாத் யாத்திரை, இடையில் கடந்த மே 8 வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது கேதார்நாத் சென்ற பக்தர்களை, அங்கு குதிரை மற்றும் கழுதைகள் ஓட்டும் முஸ்லீம் இளைஞர்கள் தாக்கியதாகக்க் கூறி 2:50 நிமிட வீடியோ ஒன்றை வலதுசாரிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
#BreakingNews for जनसंख्या नियंत्रण
People of Sanatan Dharma of India should wear bangles, Because the number of Hindus standing there for Kedarnath darshan more than 6 Muslims, they are shameless and like eunuchs. #CycloneBiporjoy pic.twitter.com/NW5vhRwJID— Shamoli Das (@das_shamoli) June 14, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ குறித்து கடந்த ஜூன் 13 அன்று உத்தரகாண்ட் காவல்துறை தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. அதில், “கேதார்நாத் யாத்திரைக்கு சென்ற பக்தர்களை தாக்கிய குதிரை மற்றும் கழுதை ஓட்டும் இளைஞர்கள் மீது கோட்வாலி சோன்பிரயாக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
केदारनाथ धाम पैदल मार्ग पर श्रद्धालुओं के साथ मारपीट करने वाले घोड़ा खच्चर संचालकों के विरुद्ध कोतवाली सोनप्रयाग पर मुकदमा दर्ज कर गिरफ्तार कर लिया गया है।https://t.co/CNBssgRSMo
— उत्तराखण्ड पुलिस – Uttarakhand Police (@uttarakhandcops) June 13, 2023
மேலும், கைதான 4 பேருடன் சேர்ந்து இரண்டு காவல்துறையினர் நிற்பது போன்ற புகைப்படத்தையும் Rudraprayag Police Uttarakhand காவல்துறையினர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அப்பதிவில் “குற்றம் சாட்டப்பட்டவர்களான அங்கித் சிங், சந்தோஷ் குமார், ரோஹித் குமார் மற்றும் கௌதம் ஆகிய நால்வரும் ஜகான் பர்தார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சிறார் மீதும் தனி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று பதிவிடப்பட்டுள்ளது.
केदारनाथ धाम पैदल मार्ग पर श्रद्धालुओं के साथ मारपीट करने वाले घोड़ा खच्चर संचालकों के विरुद्ध कोतवाली सोनप्रयाग पर हुआ मुकदमा हुआ दर्ज।#UKPoliceStrikeOnCrime #SurakshitCharDham #RudraprayagPolice #UttarakhandPolice pic.twitter.com/7j9LHFqeib
— Rudraprayag Police Uttarakhand (@RudraprayagPol) June 13, 2023
கடந்த ஜூன் 13 அன்று Chetan Gurungg இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரையில், “கேதார்நாத் தாம் தரிசனத்திற்கு வந்த மஹிபால்பூரில் வசிக்கும் தனுகா என்ற பெண், குதிரையை அடிக்க வேண்டாம் என்று குதிரை ஓட்டுபவர்களிடம் கூறியபோது, பீம்பாலி பாலம் அருகே அவர்கள் தொடர்ந்து குதிரையை அடித்து பிரச்சனை செய்துள்ளனர். மேலும் மற்ற குதிரை ஓட்டுபவர்களும் திரண்டு வந்து அவர்களை தாக்கி அடிக்கத் தொடங்கியுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு:
நம் தேடலில், கேதார்நாத் சென்ற இந்து பக்தர்களை குதிரை மற்றும் கழுதைகளை இயக்கும் முஸ்லீம் இளைஞர்கள் தாக்கியதாக பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், குற்றம் சுமத்தப்பட்ட அங்கித் சிங், சந்தோஷ் குமார், ரோஹித் குமார் மற்றும் கௌதம் ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்து உள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.