வீடியோவில் இருக்கும் பணக் குவியல் பிரேசிலில் மீட்கப்பட்ட ஊழல் பணமா ?

பரவிய செய்தி

இது ஒரு கட்டிடம் அல்ல, பிரேசில் அரசாங்கம் அதன் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களிடமிருந்து மீட்டெடுத்த 4 பில்லியன் டாலர்கள், பணம் பொது பார்வைக்கு பொது இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.ஒரு நாள் இதை இந்திய அரசிடம் காண்பிப்போம் என்று நம்புகிறோம்.

மதிப்பீடு

விளக்கம்

பிரேசில் நாட்டில் சாலையில் பிரம்மாண்டமாக அடுக்கி வைக்கப்பட்ட கரன்சி நோட்டுகளின் குவியல் இருக்க, அதை சுற்றி நிற்கும் மக்கள் புகைப்படங்கள், வீடியோ எடுக்கும் காட்சிகள் கொண்ட 1.55 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் நிலைத்தகவலில், பிரேசில் நாட்டின் அரசாங்கம் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து மீட்ட 4 மில்லியன் டாலர் பணம், பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Facebook link | archive link 

பிரேசில் நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்ட ஊழல் பணம் எனக் கூறி பகிரப்படும் வீடியோ இந்திய அளவிலும் பிற மொழிகளில் பகிரப்பட்டு வருகிறது. ஊழல் பணமாக இருந்தாலும் இப்படி எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் பொது வெளியில் மக்களின் பார்வைக்கு வைக்க வாய்ப்பில்லை. எனவே, பரப்பப்படும் வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தோம்.

உண்மை என்ன ? 

வீடியோவில் பணம் குவியலின் புகைப்படத்தை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2017 ஆகஸ்ட் 30-ம் தேதி Radio Portal எனும் யூடியூப் சேனலில் ” லாவா-ஜடோ ஆப்ரேஷன் மூலம் மீட்டெடுக்கட்ட பணம் ” என போர்ச்சுக்கீசிய மொழி தலைப்புடன் வெளியான 9 நிமிட வீடியோவில் தற்போது பரவும் வீடியோவின் காட்சிகள் இடம்பெற்று இருந்ததை கண்டறிய முடிந்தது.

Advertisement

2017-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி வாஷிங்டன்போஸ்ட் செய்தியில், ” வடக்கு பிரேசிலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடத்திய சோதனையில் சூட்கேஸ்கள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்ட 16 மில்லியன் டாலர் பணத்தினை போலீஸ் கைப்பற்றி உள்ளனர். இதுவே அந்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய பறிமுதல் ” எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

ஆப்ரேஷன் கார் வாஷ் என்பது 2014-ம் ஆண்டில் பிரேசிலின் பெடரல் போலீஸ் தொடங்கிய மிகப்பெரிய ஊழல் எதிர்ப்பு விசாரணை அமைப்பாகும். தரவுகளின்படி, ஆப்ரேஷன் கார் வாஷ் மூலம் 3 ஆண்டுகளில் மீட்கப்பட்ட தொகை 4 பில்லியன் பிரேசியலிய ரியல் எனக் கூறப்படுகிறது.

2017 ஆகஸ்ட் 28-ம் தேதி bandab.com எனும் இணையதளத்தில், ” போகா மல்டிடா எனும் பகுதியில் பிரேசிலின் ஆப்ரேஷன் லாவா-ஜடோ மூலம் ஊழல் பணத்தினை மீட்ட நடவடிக்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் ” Federal Police – The law is for everyone ” எனும் திரைப்படத்திற்காக நிறுவப்பட்ட போலியான பணக் குவியல் ” எனக் கூறப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் கார் வாஷ்  ஆனது போர்ச்சுக்கீசிய மொழியில் லாவா-ஜடோ ஆப்ரேஷன் என அழைக்கப்படும்.

பிரேசிலின் பெடரல் போலீசின் மிகப்பெரிய பிரதிநிதி நிறுவனமான ஃபெனாபெப்பின் தலைவரான லூயிஸ் அன்டோனியா என்பவர் திரைப்படத்திற்காக நிறுவப்பட்ட போலியான 4 பில்லியன் ரியல் குவியலுக்கு முன்பாக நின்று பேசிய வீடியோவை காணலாம்.

பிரேசில் நாட்டில் அரசியல்வாதிகள் ஊழல் செய்து சேர்த்து வைத்த பணத்தினை அதிரடியாக மீட்ட உண்மை  நிகழ்வுகளை வைத்து எடுக்கும் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக போலியான பிரேசில் ரியல் குவியல் சாலையில் திரைப்படத்தின் குழுவால் நிறுவப்பட்டு உள்ளது. அதை உண்மையாகவே மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டதாக ஊழல் பணம் என பரப்பி வருகிறார்கள்.

முடிவு :

நம் தேடலில், பிரேசில் நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஊழல் பணம் சாலையில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டதாக பரவும் வீடியோவில் இருப்பது உண்மையான பணம் அல்ல, இது பிரேசில் போலீஸ் ஆப்ரேஷன் கார் வாஷ் மூலம் ஊழல் பண மீட்பு நடவடிக்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பிரேசிலியன் திரைப்படத்திற்காக 2017-ல் நிறுவப்பட்டது என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button