மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிடும் ராணுவ வீரர்.

பரவிய செய்தி
உணவு சரியில்லை என்று வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர் மோடிக்கு எதிராக போட்டி.
மதிப்பீடு
சுருக்கம்
எல்லை பாதுகாப்பு படையில் இருந்த ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் உணவு சரியில்லை என வீடியோ வெளியிட்டதற்கு பணியில் இருந்து நிக்கப்பட்டார். தற்போது, வாரணாசியில் நரேந்திர மோடிக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட உள்ளார்.
விளக்கம்
2017 ஆம் ஆண்டில் ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் ஜம்மு காஷ்மீரில் இந்திய-பாக் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு தரமற்ற உணவை வழங்குவதாக மேலதிகாரிகள் மீது குற்றம்சாற்றி பேசிய வீடியோ கட்சிகள் சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி அரசிற்கு எதிரான கேள்விகளை எழுப்பி இருந்தது.
ஏனெனில், இதற்கு முன்பு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட பொழுது எல்லையில் ராணுவ வீரர்கள் துயரப்படுகிறார்கள், நாம் இதனை தாங்கிக் கொள்ள மாட்டோமா என கூறி வந்தனர். குற்றச்சாட்டு எழுப்பிய நேரத்தில் தேஜ் பகதூர் இறந்து விட்டார் என்கிற வதந்திகள் கூட பரவின.
இதைத் தொடர்ந்து, மேல் அதிகாரிகளின் உத்தரவிற்கு கீழ் படியாமல் பணியில் இரு செல்போன்களை பயன்படுத்தியது மற்றும் ராணுவ உடையுடன் சர்ச்சையான விதத்தில் வீடியோவை பேசி சமூக வலைதளங்களில் பரப்பியது உள்ளிட்ட காரணங்களுக்காக பணியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கபட்டார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தேஜ் பகதூர்.
ஹரியானாவில் உள்ள ரேவாரி பகுதியில் வசிக்கும் தேஜ் பகதூர் உத்திரப்பிரதேச மாநிலம் பிராயக்ராஜ் கும்பமேளாவிற்கு சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தேஜ் பகதூர் தெரிவித்து இருக்கிறார்.
என்னுடைய நோக்கம் வெற்றியோ, தோல்வியோ அல்ல, படை கடமையில் அரசு தோற்று உள்ளது. பிரதமர் மோடி ராணுவ வீரர்களின் பெயரை வைத்து ஓட்டு வாங்குகிறார், ஆனால் அவர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை ” என செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், பல கட்சிகளும் தங்கள் கட்சியின் சார்பில் நிற்க அழைத்தும் சுயேட்சையாக நிற்க உள்ளதாக அறிவித்துள்ளார் தேஜ் பகதூர். பிரதமர் மோடிக்கு எதிராக எல்லை பாதுகாப்பு படை வீரரே போட்டியிடுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.