இலங்கையில் பெண்களுடன் சிக்கிய புத்த பிக்கு எம்.பி திருமாவளவன் உடன் இருப்பதாகப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி
எப்படிப்பட்ட கூட்டத்துகூட திருமா நப்பு..
மதிப்பீடு
விளக்கம்
இலங்கையில் பெண்களுடன் உல்லாசமாக இருந்து சிக்கிய புத்த பிக்கு (துறவி) உடன் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் இருப்பதாக சில புகைப்படங்களின் தொகுப்பு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
வைரல் செய்யப்படும் பதிவில், எம்.பி திருமாவளவன் புத்த பிக்குகளுடன் இருக்கும் புகைப்படம், பெண்களுடன் உல்லாசமாக இருந்த புத்த பிக்கு சிக்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம், இலங்கையின் முன்னாள் அதிபருடன் புத்த பிக்கு இருக்கும் புகைப்படம் ஆகியவை இடம்பெற்று உள்ளன.
எப்படிப்பட்ட கூட்டத்துகூட
திருமா நப்பு வச்சிட்டு இருக்கான் பாருங்க மக்களே,
தமிழர்கள் திருந்தனும்.👇👇 pic.twitter.com/GRiRB4WmXY— ANITHA AGAMUDAYAR😇 (@Anitha_Devar) July 9, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் பதிவில் பெண்களுடன் சிக்கிய புத்த பிக்கு குறித்து தேடுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக இலங்கையில் பல்லேகம சுமன தேரர் என்ற புத்த பிக்கு இரு பெண்களுடன் சிக்கிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதாக பல்வேறு செய்திகள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
” இலங்கையின் நவகமுக பகுதியில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் புத்த பிக்கு பல்லேகம சுமன தேரர் இரு பெண்களுடன் இருந்த போது 8 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்து தாக்கி உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த புத்த பிக்கு மற்றும் உடனிருந்த இரு பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், 8 பேரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கையின் ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் பல்லேகம சுமன தேரர் தொடர்பில் இருப்பதாக “ etvbharat தமிழ் இணையதளத்தில் ஜூலை 9ம் தேதி செய்தி வெளியாகி இருக்கிறது.
அடுத்ததாக, திருமாவளவன் உடன் புத்த பிக்குகள் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2021ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி எம்.பி திருமாவளவன் ட்விட்டர் பக்கத்தில், ” ராமநாதபுரம் மாவட்டம் ஒரிக்கோட்டையில் பிரஹ்போதி புத்த விஹார் கட்டிட அடிக்கல்லை நாட்டினோம் ” என இப்புகைப்படம் பதிவிடப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஒரிக்கோட்டையில் பிரஹ்போதி புத்த விஹார் கட்டிட அடிக்கல்லை நாட்டினோம்#Buddha pic.twitter.com/acUVfK7v9q
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 20, 2021
அந்நிகழ்ச்சி தொடர்பாக் தேடிய போது, இராமநாதபுர மாவட்டத்தில் புத்த விகார் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவின் அழைப்பிதழ் கிடைத்தது. அதில், எம்.பி திருமாவளவன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் புத்த பிக்குகள் பலரின் பெயரும் இடம்பெற்று உள்ளது.
மேற்காணும் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி குறித்து இந்து தமிழ் திசை வெளியிட்ட செய்தி ஆகியவற்றில் இலங்கையைச் சேர்ந்த புத்த பிக்கு பல்லேகம சுமன தேரர் பெயர் எங்கும் இடம்பெறவில்லை. அதில் இடம்பெற்றவர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
மேலும், 2021 நவம்பர் 21ம் தேதி AWAAZ INDIA TV எனும் முகநூல் பக்கத்தில் புத்த விகார் கட்டிட அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியின் நேரலை வீடியோ வெளியாகி இருக்கிறது. வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் திருமாவளவன் அருகே இருந்த அதே புத்த பிக்கு 17:10வது நிமிடத்தில் பேசுகையில், ” புத்த விகார் கட்டும் பணிக்கு எங்கள் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக ” என தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து பேசி இருக்கிறார். மேலும், 5,000 ரூபாய் நன்கொடையும் வழங்கி இருக்கிறார்.
மேலும், அதே புத்த பிக்கு மற்றொரு வீடியோவில் இந்தியில் அளித்த பேட்டியின் வீடியோவும் இணைக்கப்பட்டு உள்ளது.
புத்த விகார் அடிக்கல் நாட்டு விழாவின் அழைப்பிதழ் பக்கத்தில் கர்நாடகாவின் அனந்தூர் புத்த விகாரைச் சேர்ந்த புத்த பிக்கு வரஜோதி பெயர் இடம்பெற்று இருக்கிறது. ஆக, வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருப்பது கர்நாடகாவைச் சேர்ந்த புத்த பிக்கு என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், இலங்கையில் பெண்களுடன் உல்லாசமாக இருந்து சிக்கிய புத்த பிக்கு எம்.பி திருமாவளவன் அருகில் நிற்பதாக பரப்பப்படும் தகவல் பொய்யானது. திருமாவளவன் அருகே இருப்பது கர்நாடகாவைச் சேர்ந்த புத்த பிக்கு என்பதையும், புகைப்படங்களில் இருப்பது வெவ்வேறு நபர்கள் என்பதையும் அறிய முடிகிறது.