சி.ஆர்.பி.எஃப் படைக்கு புல்லெட் துளைக்காத பேருந்து வழங்கப்பட்டதா ?

பரவிய செய்தி
டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புல்லெட் மற்றும் வெடிக்குண்டு துளைக்காத பேருந்து சி.ஆர்.பி.எஃப் படைக்கு வழங்கப்பட்டு உள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
எது உண்மை : சி.ஆர்.பி.எஃப் படைகளுக்கு குண்டுகள் துளைக்காத சிறிய அளவிலான பேருந்துகள் கொள்முதல் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
எது தவறு : சி.ஆர்.பி.எஃப் படைக்காக அனுப்பப்பட்ட பஸ்கள் என பரவும் படங்கள் தற்பொழுது தயாரிக்கப்பட்டவை அல்ல. படத்தில் இருப்பது 2017-ல் வழங்கப்பட்ட குண்டுகள் துளைக்காத பேருந்து.
விளக்கம்
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் IED வெடி பொருட்களை வெடிக்கச் செய்து சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதன் பிறகு தற்பொழுது காஷ்மீரில் உள்ள சி.ஆர்.பி.எஃப் படை வீரர்களுக்கு புல்லெட் மற்றும் வெடிக்குண்டு துளைக்காத பஸ்கள் வழங்கப்பட்டு உள்ளதாக அலங்கரிக்கப்பட்ட புதிய ராணுவ பேருந்தின் புகைப்படங்கள் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
காஷ்மீர் சி.ஆர்.பி.எஃப் படை :
” காஷ்மீரில் IED திறன்களுக்கு எதிராக எங்கள் போக்கை அதிகரிக்கிறோம். எம்.பி.வி(mine Protected vehicles) மற்றும் புல்லெட் துளைக்காத பஸ்களை கொள்முதல் செய்து மற்றும் அனுப்ப உள்ளோம். பாதுகாப்பு கவசங்கள் பொருந்திய பெரிய பேருந்துகளில் சிக்கல்கள் இருப்பதால், 30 இருக்கைகள் கொண்ட சிறிய அளவிலான கூடுதல் பாதுகாப்பு கவசம் பொருத்தப்பட்ட பேருந்துகளை கொள்முதல் செய்ய பார்க்கிறோம்” என சி.ஆர்.பி.எஃப்யின் டிஜி ஆர்.ஆர் பாட்நகர் பி.டி.ஐக்கு தெரிவித்து இருந்தார்.
முன்பே காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் படைக்கு புல்லெட் துளைக்காத பேருந்துகள் வழங்கப்பட்டு உள்ளன. புல்வாமா தாக்குதலில் இருந்த பேருந்துகள் அளவில் பெரியவை.
காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்களுக்கு புல்லெட் துளைக்காத புதிய பேருந்துகள் வழங்குவது பற்றிய செய்திகள் மார்ச் 25-ம் தேதியே வெளியாகி உள்ளது. மார்ச் 30-ல் வெளியான செய்தியில் சி.ஆர்.பி.எஃப் படைகளுக்கு பேருந்துகள் வழங்குவது குறித்து டாடா நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
புல்லெட் துளைக்காத பேருந்து :
எனினும், அச்செய்தி உடன் பகிரப்படும் பேருந்தின் புகைப்படங்கள் தற்பொழுது தயாரிக்கப்பட்டவை அல்ல. 2017-ல் செப்டம்பர் 7-ம் தேதி மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் நிர்மாலா சீதாராமன் ஆகியோர் ஆயுதங்கள், பாதுகாப்பு கவசங்கள், ஜீப் , புல்லெட் துளைக்காத பேருந்து உள்ளிடவையை சி.ஆர்.பி.எஃப் படைக்கு வழங்கிய நிகழ்ச்சில் இடம்பெற்றவை.
இந்த நிகழ்ச்சியில் புல்லெட் துளைக்காத பேருந்துகள் அலங்கரிக்கப்பட்டு உள்ளதையும், அதனை அமைச்சர்கள் பார்வையிடுவதும் அன்றைய செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
அந்த பேருந்தும் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவையே. குறிப்பாக, புல்லெட் துளைக்காத புதிய பேருந்துகள் சி.ஆர்.பி.எஃப் படைக்கே வழங்கப்பட்டதாக youtube-வில் வீடியோ வெளியாகி உள்ளது.
புல்லெட் துளைக்காத பேருந்துகள் மட்டும் சி.ஆர்.பி.எஃப்க்கு 2017-லேயே வழங்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய சிறிய அளவிலான பேருந்துகளை கொள்முதல் செய்ய உள்ளதாக கூறியது தற்பொழுது தான். ஆனால் , படங்கள் மட்டுமே தவறாகப் பயன்படுத்தி வைரல் ஆக்கி உள்ளனர்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.