” நான் தவறாக இருந்தால் உயிருடன் என்னை எரியுங்கள் ” ஹிட்லர் கூறினாரா ?

பரவிய செய்தி
“ Burn me alive if I am wrong – hitler “ இதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கிறதே.. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறிய வார்த்தைகள்.
மதிப்பீடு
சுருக்கம்
1936 ஆம் ஆண்டு ஹிட்லர் பேசிய உரையை தவறாக திருத்தி மொழிப்பெயர்ப்பு செய்துள்ளனர். பிரதமர் மோடி கூறியது போன்று ஹிட்லர் அவ்வாறு ஒரு வாக்கியத்தை கூறியதில்லை.
விளக்கம்
நவம்பர் 8-ம் தேதி 2016-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 1,000 , 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்ட போது உணர்ச்சி மேலோங்கும் உரையை நிகழ்த்தினார். அதில், நாட்டு மக்களிடம் எனக்கான நேரத்தை வழங்குமாறும், நான் மேற்கொண்ட செயலை சரியாக செய்து முடிக்கவில்லை, கருப்பு பணத்தை மீட்கவில்லை என்றால் என்னை தூக்கிலிடுங்கள் என்றும், அதே உரையில் தன்னை உயிருடன் எரித்தாலும் அச்சம் கொள்ளமாட்டேன் என்றும் கூறி இருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த வார்த்தைகள் நாடெங்கிலும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது. இதே வார்த்தைகளை சர்வாதிகாரம் கொண்டு உலகை அச்சுறுத்திய அடோல்ப் ஹிட்லர் கூறியுள்ளார். நாசிக் கட்சியின் தலைவரின் பிம்பமாக நரேந்திர மோடி பிரதிபலிப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டன.
1936 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் ஈஸ்சென் பகுதியில் மக்கள் மத்தியில் ஹிட்லர் உரையாற்றிய போது , “ என் தேசத்திற்கு பணிபுரிய நான் அனைத்தையும் பிரிந்து உள்ளேன். நான் இங்கு எந்த பதவிக்காகவும் இருக்கவில்லை ஆனால் கடமை உள்ளது. நாட்டின் எதிர்காலத்திற்கான அனைத்து நடவடிக்கைக்கும் நான்தான் பொறுப்பு. நான் தவறாக இருந்தால் உயிருடன் என்னை எரியுங்கள், யாரைக் கண்டும் பயமில்லை “ என கூறியதாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அடோல்ப் ஹிட்லர் ஜெர்மனியின் ஈஸ்சென் பகுதியில் க்ருப்ப் தொழிற்சாலையில் நடத்திய உரையின் வீடியோ காட்சி youtube தளத்தில் இடம்பெற்றுள்ளது. அதில், அவரின் உரைக்கு ஆங்கில மொழிப்பெயர்ப்பு வரிகள் கீழே இடம்பெற்று உள்ளன.
அந்த வீடியோவில் 2.42 முதல் 3.04 வரைக்கும் உள்ள இடைப்பட்ட நேரத்தில் பேசிய வார்த்தைகளே தவறாக சோசியல் மீடியாவில் பகிரப்பட்டுள்ளன. அதில் பேசியது யாதெனில்,
“ எனது வேலை சரியானது என்று நீங்கள் நினைத்தால், நான் அயராது உழைக்கிறேன் என்று நினைத்தால், நான் கடுமையாக உழைக்கிறேன், இத்தனை ஆண்டுகளில் உங்களுக்காக நின்று விட்டேன், என் மக்களுக்காக என் நேரத்தை சரியாக பயன்படுத்தி விட்டேன் என்றால் உங்கள் ஓட்டை அளித்து ஆம் என்க… எனக்காக நீங்கள் எழுந்து நில்லுங்கள் உங்களுக்காக நான் எழுந்து நிற்கிறேன் “அடால்ப் ஹிட்லர் ஆற்றிய உரையில் நான் தவறாக இருந்து இருந்தால் என்னை உயிரோடு எரியுங்கள் என்று கூறியதற்கு எத்தகைய ஆதாரங்களும் இல்லை. அவரின் மெய்யான வார்த்தைகள் தவறாக மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு சோசியல் மீடியாவில் பதிவிடப்பட்டுள்ளது.
பல செயல்களில் ஹிட்லர் உடன் பிரதமர் மோடி ஒற்றுமைப்படுத்தி பதிவுகள் பதிவிடப்படுகின்றனர். அதில் மிக முக்கியமான ஒன்று “ Burn me alive if I am wrong “.. இந்த வாக்கியம் பிரதமர் மட்டுமே கூறியுள்ளார்… ஹிட்லர் அல்ல..!