எளிதாகத் தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இல்லை என பரப்பப்படும் பழைய செய்தி

பரவிய செய்தி
எளிதாக தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இல்லை…அப்பவே சந்தேகம் இருந்தது திராவிட நாடு திராவிட நாடுனு உருட்டுறாங்களேனு உண்மை இது தானா?
மதிப்பீடு
விளக்கம்
எளிதாகத் தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் வெளியிட்டனர். அப்பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை என பாலிமர் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
அதில், ‘திராவிட நாடு எனச் சொல்லிக்கொண்டு இருந்தார்களே அதன் உண்மை நிலை இதுதானா” என அதிமுகஆதரவாளர் இந்திராணி என்பவர் டிவீட் செய்துள்ளார்.
உண்மை என்ன ?
சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ் கார்ட் குறித்து பாலிமர் செய்தியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தேடினோம். 2020, செப்டம்பர் 5ம் தேதி “எளிதாகத் தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியல் வெளியீடு” என்ற தலைப்பில் அந்த நியூஸ் கார்ட் பதிவிடப்பட்டுள்ளது.
எளிதில் தொழில் செய்ய உகந்த முதல் 10 மாநிலங்களின் பெயர்கள் அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலிமர் செய்தியின் நியூஸ் கார்டில் தமிழ்நாட்டின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் ஒன்றிய அரசு வெளியிட்ட அப்பட்டியலில் தமிழ்நாடு 14வது இடத்திலிருந்துள்ளது. 2020ல் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்திலிருந்தது அதிமுக. முதலமைச்சராகப் பதவி வகித்தது எடப்பாடி பழனிசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
எளிதில் தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலினை 2022ம் ஜூன் மாதம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், ஆந்திர பிரதேசம், குஜராத், தெலுங்கான, ஹரியானா, கர்நாடக, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகிய 7 மாநிலங்கள் முன்னிலையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதனைத் தொடர்ந்து, இமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை அடுத்த கட்டத்தில் உள்ள மாநிலங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், எளிதாகத் தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இல்லை எனப் பரப்பும் பாலிமர் செய்தியின் நியூஸ் கார்ட் கடந்த 2020ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதே போல் 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் தமிழ்நாடு முதல் 7 இடத்தில் இருப்பதை அறிய முடிகிறது.