This article is from Jul 15, 2018

தொழில் துவங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 15-வது இடத்திற்கு முன்னேறிய தமிழகம்..!

பரவிய செய்தி

தொழில் புரிய உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 15-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. போராட்டம் போராட்டம் என்று தொழில் நிறுவனங்கள் எல்லாம் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன. இனி தொழில் வளர்ச்சி , வேலை இல்லாமல் பஞ்சம் பிழைக்க வேறு மாநிலங்களுக்கு செல்லும் நிலை உருவாகும்.

மதிப்பீடு

சுருக்கம்

இந்தியாவில் தொழில் துவங்குவதற்காக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட மாநிலங்களின் 2017  பட்டியலில் தமிழகம் 15-வது இடத்தைப் பிடித்து பின்னடைவை கண்டுள்ளது. எனினும், இதற்கு முந்தைய ஆண்டு 18-வது இடத்தில் தமிழகம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விளக்கம்

நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கினால் மக்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகள் பூர்த்தி ஆகும். ஆகையால், மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் நாட்டில் தொழில் வளர்ச்சியைப் பெருக்குவதற்கும், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலக கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறைசார்பில் தொழில் வளர்ச்சி தொடர்பாக மாநிலங்களில் ஏற்படுத்த 12 பிரிவுகளில் 405 அம்ச சீர்திருத்த செயல் திட்டங்களை அறிவித்தது. இத்தகைய திட்டங்களை மாநிலங்கள் எவ்வாறு செயல்படுத்தி புதிய முதலீடுகளை ஈர்த்துள்ளன என்பதை சார்ந்து தொழிலக கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை மற்றும் உலக வங்கி குழுவுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இதில், மாநிலங்களில் தொழில் தொடங்க நிலம் கையகப்படுத்துதல், கட்டிடம் அமைய விரைவான அனுமதி, தொழிலாளர்களின் இருப்பு போன்ற பல்வேறு நடைமுறைகளை மையமாகக் கொண்டு தொழில் தொடங்க சீர்திருத்தம் மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில், 2017-ல் நாட்டில் உள்ள மாநிலங்கள் தொழில் செய்வதற்காகவும், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பட்டியல் வெளியிடப்பட்டது.

இத்தகைய பட்டியலில் எப்பொழுதும் போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்து உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஹரியானா, சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. கர்நாடகா 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.

” தொழில் சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட மாநிலங்களின் 2017-ம் ஆண்டின் பட்டியலில் தமிழகம் 15-வது இடத்தைப் பிடித்து உள்ளது. தொழில் சீர்த்திருத்த நடவடிக்கைகளில் தமிழகம் 90.68 மதிப்பெண்களை பெற்றுள்ளது. முதலிடத்தில் இருக்கும் ஆந்திரா மாநிலம் 98.42 மதிப்பெண்களை பெற்றுள்ளது “.

அதாவது சீர்த்திருத்த நடவடிக்கைகள் பற்றி மத்திய அரசு பரிந்துரை செய்யும் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை வைத்து அமைச்சகம் பட்டியலை வெளியிடுகிறது. தமிழகம் 90.68% பரிந்துரைகளை நிவர்த்தி செய்துள்ளது. முதலீட்டையும், தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் ஆந்திரா மற்றும் தெலுங்கனா மாநிலங்கள் முதன்மையானதாக உள்ளன.

2016-ல் இந்த பட்டியலில் தமிழகம் 18-வது இடத்திலும், 2015-ல் 12-வது இடத்திலும் இடம்பெற்றது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தால் மத்திய அரசு பரிந்துரை செய்யும் சீர்திருத்த நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளவதில்லை. ஆகையால், முதல் 10 இடங்களுக்குள் கூட தமிழகத்தால் இடம்பெற முடியவில்லை. ஆனால், போராட்டம் அதிகம் நடைபெறுவதாலும், தொழிற் நிறுவனங்களுக்கு எதிரான சூழ்நிலை தமிழகத்தில் இருப்பதால் தமிழகம் பின்தங்கியதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன.

தமிழகத்திற்கு வரும் பெரும்பாலான வாகன உற்பத்தி துறைகள் அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கே செல்கின்றன. முதலீடுகளை ஈர்க்க சிறந்த செயல் திட்டங்களை தமிழக அரசு முன்வைக்க வேண்டும். அப்பொழுது தான் தொழில் துவங்க முதலீடுகள் குவிந்து தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாறி வேலைவாய்ப்புகள் பெருகும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader